மூடிய கையில் பத்து பைசா...
நீங்கள் ஒரு உறவில் இருக்கிறீர்கள்.. அந்த உறவின் ஆரம்ப நாட்களை நினைவு கூரமுடியுமா? முதல் முதலில் உங்கள் நண்பரை பரிச்சயம் செய்துக்கொண்ட நாள், மெதுவாக போன் நம்பர்களோ இல்லை முகவரியோ பரிமாறிக்கொண்ட தருணங்கள், முதல் கடிதம், முதல் போன் கால்... நினைத்தாலே சிலிர்ப்பாக இருக்கும். இது காதலர்களுக்கு மட்டும் என்று சொல்லவில்லை... எந்த ஒரு உறவாயினும் - சாதாரண சக ஊழியராகவோ இல்லை வகுப்பு தோழராகவோ வந்த நண்பர் உங்கள் வாழ்வின் முக்கிய நண்பராக மாறிய காலகட்டம்... எல்லா உறவுகளும் அதே இடத்தில் நின்றுவிட்டால் எவ்வளவு அழகாக இருக்கும்? நமக்கு மட்டும் சக்தி இருந்தால் காலச்சக்கரத்தை அங்கேயே நிறுத்திவிடமாட்டோமா? கிட்டத்தட்ட எல்லாருக்குமே தான் இது பொருந்தும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படியா நடக்கிறது? வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அந்த உறவின் மேலே ஒருவித Taking for granted/அலுப்பு/வெறுப்பு என நிலைகள் மாறிக்கொண்டு தானே இருக்கிறது? இல்லையென்றால் என் பல காதல் திருமணங்கள் விவாகரத்திலும், பல பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் பகைமை பாராட்டும் வழக்குகளை நம்முடைய வழக்கு மன்றங்களிலும், தினசரி வாழ்க்கையிலும் காண நேர்கின்றன.