அவன் பெயர் சேகர் என்று வைத்துக்கொள்வோம். அவனும் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் இளைஞன் தான். எனக்கு பிடித்த சக ஊழியர் வட்டாரத்தில் சேகரும் உண்டு. காரணம் சேகரின் சில குணநலன்கள் - மிக எளிமையானவன். அவனை பொறுத்தவரை WYSIWYG - What you see is what you get. Diplomatic-ஆக முன்னால் ””Hey Dude" என்று சிரித்துப் பேசிவிட்டு பின்னாலே “போறான் பாரு பா**ட்” என்று திட்டமாட்டான். உலகிலேயே இரண்டு வகையான மனிதர்கள் தான் உண்டு - அவன் நேசிப்பவர்கள் & அவன் நேசிக்காதவர்கள். அதனாலோ என்னவோ அவனுடைய நண்பர் வட்டம் மிக சிறியது. ஒரு வருடம் முன்பு தான் அவனுக்கு மீனாவுடன் கல்யாணம் ஆகியிருந்தது.
கடந்த சில நாட்களாக சேகரின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள். பொதுவாகவே அவன் அதிகம் பேசமாட்டான். ஆனால் அவனது பேசும் அளவு மேலும் குறைந்துவிட்டு அவன் அலுவலகத்தில் இருக்கிறானா இல்லையா என்பதே தெரியாத அளவுக்கு non descript-ஆக ஆகிவிட்டான். ஒரு நாள் அப்படி கமுக்கம்மாக என்ன செய்கிறான் என்று பார்த்தபோது எங்களுக்கு பயங்கர ஆச்சரியம். Gtalk-ல் புதிய email id-ல் 2-3 பேர்களோடு chat செய்துக்கொண்டிருந்தான். Chat செய்வதில் ஆச்சரியமில்லை, ஆனால் அந்த 2-3 பேரையும் அவன் சமீபத்தில் ஏதோ forum-ல் இருந்து “பொறுக்கி” எடுத்தானாம்.
“என்னங்க மைனர் மாப்ளே! புதுசா பட்சிகள் சிக்கியிருக்கு போல..?” என்று கலாய்த்தோம்.
கொஞ்சம் வெட்கமாக சேகர் “இல்லைங்க... சும்மா friends" என்றான்.
“எங்களுக்கு தெரியாம யாருங்க சார் உங்களுக்கு புது friends? உங்க college mates-ஓ?” என்று மல்லுக்கு நின்றோம்.
“இல்லைங்க.. Facebook-ல request வந்திருந்துச்சு, சும்மா add பண்ணினேன்”
“என்னங்க? நீங்க அவ்ளோ சீக்கிரமா approve பண்ணவே மாட்டீங்களே? அதையும் மீறி சேர்த்திருக்கீங்கன்னா, அந்த நண்பர்கள் உண்மையிலேயே special-ஆ தான் இருக்கனும். என்ன பண்றாங்க உங்க புது நண்பர்கள்?” என்று குறுகுறுப்பாக விசாரித்தோம்.
அடுத்த சில நாட்களில் எல்லாம் சேகரின் நடவடிக்கைகள் இன்னும் மாறத்தொடங்கியிருந்தது. காலை முதல் இரவு போகும் வரை அந்த chat நண்பர்களோடு பொழுது கழிக்க ஆரம்பித்தான். நாங்கள் வலுக்கட்டாயமாக canteen-க்கு அழைத்துச்சென்றாலும், 10 நிமிடத்தில் எல்லாம் அவன் சீட்டுக்கு போக ஆரம்பித்தான். முன்பு எல்லாம் நாங்கள் canteen-ல் ஒரு கப் காஃபியை வைத்துக்கொண்டு இலக்கியம், கணினி, சினிமா என்று 1 மணி நேரம் பேசுவோம். அதனால் இந்த மாற்றங்கள் எங்களுக்கு அவ்வளவாக நல்லதாக படவில்லை.
வழக்கம்போல எங்கள் கிடுக்கிப்பிடியை போட ஆரம்பித்தோம். சேகர் லேசாக வாய் திறக்க ஆரம்பித்தான்.
“Online நண்பர்கள் கிட்டே நாம நம்ம மனசுக்கு தோனினதை எல்லாம் பேசலாம் இல்லை? முகம் பார்க்காம பேசுறதுல ஒரு comfort level இருக்கு இல்லை?” என்றான் சேகர்
“அது சரிங்க... ஆனா நிறைய நேரங்கள்ல் பொண்ணுங்க பேர்ல dirty chat பண்றது பசங்க தானே? அதனால chat பண்ணுறவங்க உண்மையா பேசுறாங்களா இல்லை டுபாக்கூர் பார்ட்டிகளான்னு அவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாதுங்களே?” என்று எங்கள் எதிர் வாதத்தை முன்வைத்தோம்.
கொஞ்சம் தயக்கமாக “நான் பெரிசா genuine friendship எல்லாம் எதிர்பாக்கலைங்க. நாம பேசமுடியாத சில விஷயங்களை இப்படி முகம் தெரியாதவங்க கூட பேசி ஒரு வடிகால்...” என்று இழுத்தான்.
“அப்படி என்னத்த நாம பேச முடியாததை நீங்க அவக கிட்டே பேசுறீக? சொப்பன சுந்தரி வச்சிருந்த காரை கவுண்டமணி வச்சிருக்காரு ஆனா சொப்பனசுந்தரியை யார் வச்சிருக்காங்கன்னு இருந்து நேத்து ராத்திரி எந்த posture-ல “போட்டீங்க”ங்குற வரைக்கும் நாம தொடாத விஷயங்களா? உண்மையை சொல்லுங்க... உங்க பிரச்சினை என்ன?” என்றோம்.
“இல்லை... நாம colleagues பேசும்போது ஏடாகூடமா ஏதாவது வார்த்தைகள் வந்திடுச்சுன்னா, அப்புறம் நிலமை ரசாபாசமாயிடும். அதனால தான் சில விஷயங்களை நம்ம ஆஃபீஸ் நண்பர்கள் கிட்டே சொல்லமுடியாது” என்று கொஞ்சம் இறுக்கமானான்.
“என்ன சேகர் திடீர்னு உங்களுக்கு இப்படி ஒரு inhibition? நாம எல்லாம் கடமைக்கு பழகலியே? அப்படி இருந்திருந்தா நாம ஒரு நூறு பேரா இல்லை அலையணும்? உங்க மனசுல ஏதோ ஒரு விஷயம் உறுத்திக்கிட்டு இருக்கு. அது என்னான்னு சொல்லுங்க. பிரச்சினை தீரலைன்னாலும், பாரம் குறையும் இல்லை?”
சேகரின் முகத்தில் “சந்திரமுகி” போல ஒரு ஆவேசம் கண்சிமிட்டியது. “நமக்கு நாக்குல எப்போ சனி-ன்னு தெரியாது. வீட்டுல இருக்குற மனுஷங்க கிட்டேயே பார்த்து பேசவேண்டியிருக்குற காலத்தில நண்பர்கள் கிட்டே வார்த்தைகளால விபரீதங்கள் நடக்க நிறைய வாய்ப்பு உண்டு. ப்ளீஸ் இந்த topic-ஐ இங்கேயே விட்டுடுவோம்” என்ற அவனது பேச்சு எங்களை முதலில் திகைக்க வைத்தது உண்மை. சேகரை தனியாக விட்டுவிட்டு எங்கள் இடங்களுக்கு போய்விட்டோம்.
பின்னர் rewind செய்து பார்த்தபோது “வீட்டுல இருக்குற மனுஷங்க கிட்டேயே பார்த்து பேசவேண்டியிருக்குற காலத்தில...” என்பது பிரச்சினை எங்கே ஆரம்பித்தது என்று பிடி கொடுத்தது.
ஒரு சரியான சந்தர்ப்பத்தில் “என்ன சேகர்? மீனா கூட எதுவும் பிரச்சினையா?” என்று கனிவோடு கேட்டபோது அதற்காகவே காத்திருந்தவன் போல பொலபொலவென உதிர்த்தான்.
பிரச்சினை இது தான்.
சேகருக்கு பெற்றோர் பார்த்து கல்யாணம் செய்து வைத்த பெண் மீனா. நல்ல பெண் தான். கல்முதல் தடவை அவர்கள் வீட்டுக்கு போனபோது மிக இயல்பாக எங்களோடு உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தாள். ஆனால் எங்களுடைய அலுவலக நேரம் காரணமாக நாங்கள் - அலுவலக நண்பர்கள் பரஸ்பரம் மற்றவர்கள் வீட்டுக்கு சென்று வரமுடியவில்லை. அதனால் எனக்கு மீனாவுடன் அதிகம் பேச்சு இல்லை. ஆனால் என்றாவது சேகருக்கு போன் செய்யும்போது மீனா லைனை எடுத்தால் பேசுவது உண்டு. அவ்வளவு தான் எங்கள் interaction. கொஞ்ச நாட்களாக சேகருக்கும், மீனாவுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் வாக்குவாதங்கள் வந்துக்கொண்டிருக்கிறதாம்.
“வீட்டிலே ஆ-ன்னா பிரச்சினை, ஊ-ன்னா பிரச்சினைங்க... எப்போ எதுக்கு பிரச்சினை வருதுன்னு தெரியலைங்க” என்று பரிதாபமாக சொன்னான் சேகர்.
“என்ன மாதிரியான பிரச்சினை வருது, சேகர்?”
”கேட்டா சிரிப்பீங்க... வாக்கியத்தில எக்ஸ்ட்ராவா ஒரு “ஆ” இல்லைன்னா “ஓ” வந்தா கூட சண்டை வருதுங்க... விளையாட்டா சொல்ற அந்த ஒரு எழுத்து மொத்த வாக்கியத்தோட அர்த்தத்தையுமே மாத்திடுது”
சேகர் சொன்ன சில விஷயங்களை public domain-ல் சொல்லமுடியவில்லை என்பதால், அவர் சொன்ன சம்பவங்களுக்கு ஈடான ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் - சேகர் மீனாவை “அழகான ராட்சசி”யே என்று கொஞ்சினால் “நான் என்ன ராட்சசியா? அப்படியா உங்களை கொடுமை படுத்துகிறேன்?” என்று நாள்கணக்கில் மூஞ்சியை தூக்கிவைத்துக்கொள்கிறாளாம்.
கல்யாணத்துக்கு முன்னாடி நமக்கு கல்யாணம் நடக்குமா, நடக்காதான்னு ஏக்கப்படுற பசங்களும், பொண்ணுங்களும் கல்யாணத்துக்கப்புறம் “எனக்கு எவ்ளோ நல்ல சம்பந்தம் எல்லாவந்திச்சு தெரியுமா? இருந்து உங்களுக்கு வாக்கப்பட்டேன்”ன்னு ”அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்ஸன் கூப்டாக... ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக”ன்னு விளையாட்டாக பீலா விட்டுக்கொள்வது வாடிக்கை. இது கணவன் மனைவி இருவருமே சேர்ந்து சிரிக்கக்கூடிய வழக்கமான ஜோக். அப்படி எதுவும் சொன்னால் “என்னை ஏன் கல்யாணம் பண்ணிகிட்டீங்க? என்னை விட்டுட்டு தாராளமா போகலாம்” என்கிறாளாம் மீனா. உடனே கொஞ்ச நேரம் கழித்து “நீங்க என்ன என்னை விட்டுட்டு போறது? நான் விட்டுட்டு போகிறேன்” என்பாளாம்.
அதனால் சேகருக்கு ஒவ்வொரு வார்த்தையை சொல்லும் முன்பும் இந்த வார்த்தைக்கு ஏதாவது மாற்று அர்த்தம் இருக்கிறதா என்று யோசித்து பேச ஆரம்பித்து இருக்கிறானாம்.
”ஏன் பிரச்சினை வருதுன்னு யோசிச்சீங்களா, சேகர்? உங்க கல்யாணம் ஒரு loveless marriage-ன்னு தோணுதுங்களா?”
“அப்படி எல்லாம் சொல்லமுடியாதுங்க மகேஷ். அவளுக்கு என் மேலே அன்பு இருக்குங்குறது எனக்கு தெரியுது. ஆனா எனக்கு அவ மேலே அன்பு இருக்குதுன்னு அவளுக்கு நம்பிக்கை இல்லை”
”நீங்க இந்த பிரச்சினையை மீனாவுக்கு புரியவைக்க முயற்சிக்கலையா?”
“நான் ஒரு நாள் மீனா கிட்டே சொன்னேன் - ஏம்மா? நீ என்னை நம்பலையா? பொதுவா நம்பிக்கை இல்லாத இடத்துல தான் இது போல சந்தேகம், சண்டை எல்லாம் வரும். நான் உன்னை காயப்படுத்தனும்னு சில வார்த்தைகளை சொல்றதா நீ யோசிக்கிறியா? அதுக்கு பட்டுன்னு அவகிட்டே இருந்து பதில் வந்துச்சு “எனக்கு உங்க மேலே நம்பிக்கை இல்லை”ன்னு. முதல்ல எனக்கு அது அதிர்ச்சியா இருந்தாலும், Fair enough. அதையாவது நேருக்கு நேரா சொல்லிட்டாளே-ன்னு தோனுச்சு.”
சேகர் மேலும் தொடர்ந்தான் - “அதனால இப்போ ஒவ்வொரு எழுத்தையும் யோசிச்சு பேசவேண்டியிருக்கு. ஒரு வித inhibition வந்திடுச்சு. வீட்டுக்குள்ளேயே formal-ஆ பேசவேண்டிய நிலைமை வந்துடுச்சு. அதனால என்னால வேகமா / சகஜமா பேச முடியலை”
சேகர் ஏற்கனவே அளந்து பேசுபவன். அவனது பேச்சில் தேவை இல்லாத விஷயங்கள் குறைவாகவே இருக்கும். கேள்விக்கு பதில் வரும் ஆனால் extra வெட்டி சமாச்சாரங்கள் குறைவாக தான் இருக்கும். (அதனால் அவனை முசுடு என்று கூட முதலில் நினைத்திருக்கிறோம்). இதிலும் பேச்சை குறைத்தால் அது ஒன்று மணிரத்னம் பட தந்தி பாஷை போல இருக்கும் அல்லது “மொழி” ஜோதிகா பேசுவது போல இருக்கும். ரெண்டுமே நல்லதுக்கில்லையே!
சேகரின் ஆதங்கம் என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது தான். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு சின்னக்குழந்தையை “நாய்க்குட்டி” என்று செல்லமாக கொஞ்சும்போது அந்த குழந்தை “ஏன் என்னை நாய் என்று திட்டுகிறாய்?” என்று திரும்பி கேட்டால் உங்களுக்கு மனசு வலிக்காதா? அந்த நிலைமையில் தான் சேகர் இப்போது இருக்கிறான்.
சேகர் குறைவாக பேசுபவன் தான் ஆனால் express பண்ண தெரியாதவன் இல்லை. அவனை சரியான முறையில் தூண்டிவிட்டால் உலகத்தில் அத்தனை விஷயங்களை பற்றியும் ஏதாவது அபிப்பிராயம் சொல்வான். அப்படிப் பட்டவனை பேசாமல் இருக்க வைக்க முடியாது. அதனால் அவனுக்கு தன் மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்டவேண்டும் என்று தோன்றுவது இயற்கை. அதற்கு தான் முகம் தெரியாத Facebook நண்பர்களை நாடுகிறான்.
“சேகர், எவ்ளோ நாளுக்கு தான் இந்த Facebook நட்புகளை நம்புவீங்க? மீனாவை பேசி உங்க வழிக்கு கொண்டு வாங்க. இப்படி மனசு விட்டுப்போய் ஒதுங்கிட்டீங்கன்னா, கடைசியா ஒரே வீட்டிலே ரெண்டு strangers-ஆ இருக்கக்கூடிய நிலைமை வரலாம்” என்றோம்.
“ தூங்குறவங்களை எழுப்பலாம், ஆனா தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எப்படிங்க எழுப்புறது? குழந்தையை கூட மிரட்டி வழிக்கு கொண்ட வரக்கூடாதுன்னு நினைக்கிறவன் நான், என்னால எப்படிங்க ஒரு வளர்ந்த பொண்ணை மிரட்ட தோணும். எல்லாம் நடக்குறபடி நடக்கட்டும் விடுங்க ” என்றான்.
ஒரு பெண்ணை முதலில் மனுஷியாக மரியாதை செய்யத் தெரிந்த சேகருக்கு இது போல பிரச்சினை வந்துள்ளது கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது. சேகர் சொன்னதை மட்டும் வைத்து பார்க்கும்போது ஒருவேளை மீனாவுக்கு வேறு எதிர்பார்ப்புகள் இருந்து அது நிறைவேறாத கோபத்தை இவனிடம் காட்டுகிறாளா என்றும் கூட தோன்றியது. குடும்ப ஆலோசகர் / பெரியவர்களின் தலையீட்டில் தான் இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள பிணக்குகள் தீர்க்கமுடியும் என்று எங்களுக்கு தோன்றியது. அதை தான் பரிந்துரைத்துள்ளோம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
{oshits} reads!!!