கிரேஸி மோகனும் எஸ். வி. சேகரும்
இந்த தீபாவளி அன்று சேனல் மாற்றிக்கொண்டிருந்த போது டி.டி-யில் கிரேஸி மோகனின் பேட்டி ஓடிக்கொண்டிருந்தது. கமல்ஹாசனுடனான தனது திரையுலக பயணத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார். தமிழ் நாடகவுலகத்துக்கு கிடைத்த ஒரு அற்புதமான பொக்கிஷம் இவர். பொதுவாக கத்தி கத்தியும், உடல் அபிநயத்தாலுமே பலர் நகைச்சுவையை முயற்சித்துக்கொண்டிருக்க, இவர் அசால்ட்டாக வார்த்தைகளாலேயே அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தார். அதுவும் மீட்டருக்கு மேலாக. நிமிஷத்தில் நூறு நகைச்சுவையை அடைத்துக்கொடுப்பார் இவர். அத்தனை ஜோக்குகளும் நமக்கு புரியவேண்டும் என்றால் பத்து தடவை கேட்டிருக்கவேண்டும். அவருடைய திரையுலக பிரவேசம் மற்றும் பயணம் கமல்ஹாசனோடு மட்டுமே இருந்திருக்கிறது. அவர் கமல்ஹாசன் அல்லாமல் ஒன்றிரண்டு படங்களில் பணிபுரிந்து இருந்தாலும் அவை வெற்றி அடையாததால் அவர் கமல்ஹாசன் “exclusive" என்பது போல ஒரு தோற்றம் உருவாகிவிட்டது. இரவென்று ஒன்று இருந்தால் பகல் என்று இருக்கவேண்டும் அல்லவா? மாஸுக்கு ரஜினி என்றால் க்ளாஸுக்கு கமல் இருக்கவேண்டுமே... சுஜாதாவுக்கு ஒரு பாலகுமாரன். அது போல தமிழ் நாடக உலகத்தில் கிரேஸிக்கு இணையாக பேசப்பட்டது எஸ். வி சேகர் தான்.