நான் எனது முந்தைய பதிவில் மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி எழுதிய அடுத்த நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று தனக்கு முதுகெலும்பு இருப்பது நினைவுக்கு வந்து ஜெ. சமாதியில் கிளர்ந்தெழுந்தார். நான் கூட "கடவுள் இருக்கிறான் குமாரு" என்று உணர்ச்சிவசப்பட (தினமலர் செய்தியில் எனது இந்த கமெண்ட் இருக்கும்), அடுத்தடுத்த சில தினங்கள் தினமலர், தட்ஸ்தமிழ் மற்றும் யூடியூபின் புதிய தலைமுறை செய்திகள் என என் முழு கவனமும் அதிலேயே இருந்தது. பின்னர் கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறி, கடைசியில் மன்னார்குடி மாஃபியாக்களிடமே ஆட்சி போக, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போனது.
அடுத்தவர்களது சொத்தை கொள்ளையடிக்கலாம், ஊருக்கு ஊற்றிகொடுத்து குடி கெடுக்கலாம், தொழில் திறமையை விட காலில் விழும் திறமை இருந்தால் போதும், என்று எல்லா கெட்டப்பழக்கமும் இருந்தாலும் பரவாயில்லை கோவிலில்/மசூதியில்/தேவாலயத்தில் சாமிக்கு கொடுக்கவேண்டிய பங்கை கொடுத்தால் போதும் எந்த சாமியும் கெட்டவர்களுக்கு, மக்கள் மொத்தமும் விரும்பாதவர்களுக்கு பணமும் பதவியும் கொடுத்து "அருள்" புரியும். அப்படியென்றால் எதற்கு குழந்தைகளுக்கும், அடுத்த தலைமுறைக்கும் நாம் பக்தியையும், நீதியையும் ஏன் போதிக்கவேண்டும்? எப்படி மாட்டாமல் லஞ்சம் வாங்கலாம், எவனுக்கு கூட்டிக்கொடுத்தால் காரியம் நடக்கும் என்பதை சொல்லிக்கொடுத்தாலே போதுமே? ஜனநாயகம் என்ற ஒன்றை கேலிக்கூத்தாக மாற்றிவிட்ட 122 அடிமைகளை தேர்ந்தெடுத்த நம் தவறுக்கு நாம் தானே தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இனி என் பிழைப்பை பார்க்கிறேன். என் சொத்தை பிடுங்காத வரை, என் குடும்ப உறுப்பினர்களுக்கு தீங்கிழைக்காத வரை எந்த பேய் ஆட்சி செய்தால் எனக்கென்ன? முடிந்தால் வெளிநாட்டில் வேலை வாங்கிக்கொண்டு இந்த பாழாய் போன பாரத்தத்திலும் இருந்தும், தமிழகத்தை தண்ணீர் தெளித்துவிட்டு போனால் நிம்மதியான வாழ்க்கையாவது மிஞ்சும். தமிழகத்தை பா.ஜ.கா அரசு சுடுகாடாய் மாற்றட்டும், காவிரியும் கேரளமும் அணைகள் கட்டி தமிழகத்தை பொட்டல் காடாகட்டும், அதனால் காய்ந்து போன ஆற்றின் மணலை நம் மாண்புமிகு அரசியல்வாதிகள் கொள்ளையடித்து வெளிமாநிலங்களுக்கு விற்று கோடி கோடியாக சேர்க்கட்டும், எனக்கென்ன?
நம் இளைஞர்கள் விஜய்யா அஜித்தா என்று சண்டையிடட்டும், தல படம் நூறு கோடி வசூல், தளபதி படம் இருநூறு கோடி என்று வடை சுட்டு ஜென்ம சாபல்யம் அடையட்டும், மெரீனாவில் நடந்த ஜனநாயக எழுச்சி ஒரு வரலாற்றுப் பிழையாகட்டும்... தமிழ்நாடும் தமிழர்களும் நாசமாய் போவோம்.