Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Radioரொம்ப நாள் ஆச்சு... பதிவு எழுதி! இந்த காலகட்டத்துல என்னோட கூகுள் ரேங்க் எல்லாம் கீழே இறங்கி போனதை கூட கவனிக்க முடியாத அளவுக்கு சமயப்பற்றாக்குறை. அப்படி என்ன வெட்டி முறிக்கிறேன்னு கேக்காதீங்க... அப்புறம் அழுதுடுவேன்... ஆமாம்! முன்னாடி எல்லாம் எதை பார்த்தாலும், படிச்சாலும் என்னோட நண்பர்கள் கிட்டே (அது நீங்க தாங்க) பகிர்ந்துக்கணும்னு எழுதுவேன்... கொஞ்ச நாளா மரத்துப்போச்சு. திரும்ப எழுதணும்னு நினைக்கிறப்போ என்ன எழுதறதுன்னு தெரியலை. சந்தியா கிட்டே சொன்னப்போ அவங்க "ரேடியோ" பத்தி எழுதுங்களேன்னு கரு எடுத்து குடுத்தாங்க. அதை டெவலப் பண்ணி உங்ககிட்டே பகிர்ந்துக்குறேன்.

என்னோட வாழ்க்கையிலே வானொலிக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு. அப்போ (1980-களிலே) எல்லாம் எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு இந்த வானொலி தான். அதை பொழுதுபோக்குன்னு சொல்றதைவிட எங்க வாழ்க்கையிலே ஒரு பாகம்னு தான் சொல்லணும். எங்கள் வீட்டில் உள்ள வானொலிப்பெட்டிக்கு என்னை விட வயது அதிகம். அப்பா அதை பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்திருக்கிறார். காலையில் எழுந்தவுடனேயே வானொலிப்பெட்டியை யார் "ஆன்" செய்வது என்று சில சமயம் போட்டி கூட நடந்ததுண்டு. எப்படின்னா "ஐய்யய்யோ! விவிதபாரதியிலே வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பிச்சுடுச்சு... மணி எட்டரை ஆயிடுச்சு... ஸ்கூளுக்கு லேட் ஆகுது"... "ராத்திரி எட்டுமணிக்கு தொடர் நாடகம் ஆரம்பிக்கறதுக்குள்ளே ஹோம் வொர்க்கை முடிக்கணுமே".. ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்றரை மணிக்கு இந்த வாரம் என்ன படம் போடுவாங்க?".. என கிட்டத்தட்ட எங்கள் வாழ்க்கையோடே இழைந்தோடியது இந்த வானொலி.

எப்படி இப்போது புத்தகம் படிப்பவர்கள் எனது நண்பர்களோ, அதுபோல எனது பள்ளியில் வானொலி கேட்கும் மாணவர்கள் மட்டும் தான் எனது நண்பர்கள் ஆக முடிந்தது. "இப்போ புதுசா தென்கச்சி சுவாமிநாதன்னு ஒருத்தர் காலையிலே ஏழே முக்காலுக்கு "இன்று ஒரு தகவல்"நு புதுசா சொல்றார் கேட்டியா?"... "இன்னைக்கு "இ.ஒ.த" வற்றப்போ குளிக்க போயிட்டேன் இன்னைக்கு என்ன சொன்னாரு?".... "அந்த நாடகத்துல இன்னைக்கு என்ன ஆச்சு?" என்று எங்கள் பெரும்பாலான உரையாடல்கள் இருக்கும். "டேய்.. பச்சீஸ்-ண்ணா இருபத்தைந்தா இல்லை ஐம்பதா?" என்று அவ்வப்போது டிரான்ஸெஸ்டரில் காமெண்ட்ரி கேட்கும் நண்பர்கள்... "வயலும் வாழ்வும்" பகுதியில் தோட்டக்கலை பற்றிய தகவல்கள்.. என வானொலி எனது வாழ்க்கையில் ஒரு ஆரோக்கியமான பாகமாகவே இருந்தது.

வானொலியில் கேட்கும்போது என் மனதில் நானே அதை படமாக ஓடவிடுவது என எனது கற்பனை வளத்தை பெருக்கவும், அதை படங்களாக வரைந்து பார்ப்பது என என்னை ஒருவித ஆக்கப்பூர்வமாகவே வளர்த்தது இந்த வானொலிப் பெட்டி. உதாரணத்துக்கு சொல்லவேண்டும் என்றால் ஒருமுறை விடுதலை போராட்ட தியாகிகள் பற்றி ஒரு ஒலிச்சித்திரம் போட்டிருந்தார்கள். அதில் அன்று வ.ஊ.சிதம்பரனார் பற்றி ஒரு நிகழ்ச்சி. அவர் சிறையில் இருந்து வெளியானபோது அவரை வரவேற்க சுப்ரமணிய சிவா மட்டும் தான் வந்திருந்தார் என்று முடித்தார்கள். அந்த நிகழ்ச்சியை கேட்கும்போது எனக்கு தொண்டையை அடைத்துக்கொண்டு வந்தது. கடைசியில் அவர் தனியாளாக ஒதுக்கப்பட்டு, உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்ததை கேட்டபோது அழுகை வந்துவிட்டது. உடனே அவசரம் அவசரமாக எனது டிராயிங்க் நோட்டில் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்று தலைப்பிட்டு ஒரு படம் வரைந்தேன். அப்போது எனக்கு 12 - 13 வயதிருக்கும். அதை அப்பா ரொம்ப நாளுக்கு எங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் காண்பித்துக்கொண்டிருந்தார். அந்த அளவுக்கு வானொலி என்னை பாதித்திருந்தது.

கிட்டத்தட்ட எங்கள் வாழ்க்கையின் பாகமாகவே மாறிப்போன வானொலிப்பெட்டியை "சக்களத்தியாக" வந்து எங்களை பிரித்தது தொலைக்காட்சிப்பெட்டி. அது எங்கள் வீட்டுக்கு வந்தபோது அது "தொல்லை"காட்சி பெட்டியாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வானொலியின் அழகே அது சமர்த்தாக, தொல்லை தராமல் நம்மை "பத்தினி"யாக மகிழ்விக்கும். ஆனால் தொலைக்காட்சியோ "மேனா மினுக்கியா"க கலர் கலராக (கறுப்பு வெள்ளை / புள்ளிபுள்ளியாக) படம் காட்டி எனது கற்பனா சக்தியை உறிஞ்சுக்கொண்டிருந்தது. இன்றும் அம்மா சொல்லுவார் - "உன்னோட பத்தாவது வகுப்பிலே டி.வி வாங்கினது தான் நான் செஞ்ச பெரிய தப்பு". அப்போது தடம் புரண்ட எனது வாழ்வு மீண்டு சரியான பாதைக்கு வார ஒரு மாமாங்கம் பிடித்தது. வானொலிபெட்டி எனது வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிவிட்டது. எனது வாழ்வில் மட்டுமல்ல, பலரது வாழ்க்கையில் / வீட்டில் வானொலிப்பெட்டி பரணில் தூசு பிடிக்க ஆரம்பித்தது.

"எது கொடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது" என்று பகவத் கீதையில் சொல்லப்பட்டது நிஜம் என்று நிரூபிக்கும் வகையில் ஒரு நாள் வானொலி சிக்கென்று கவர்ச்சியாக "எப்.எம்" என்ற பெயரில் இளமையாக, இளம் தொகுப்பாளினிகளின் கொஞ்சல் மொழிகளோடு இனிமையாக களமிறங்கியது. தமிழகத்தில் மீண்டும் வானொலிக்கு உயிர் கொடுத்தது என்றால் அது சூரியன் எப்.எம் தான். அந்த சமயத்தில் நான் கோவையில் வேலைக்கு போக ஆரம்பித்து இருந்தேன். மீண்டும் எனது வாழ்க்கையில் வானொலி நுழைந்தது. முன்பு போல ஆக்கப்பூர்வமாக இல்லையென்ற போதிலும், வெறுமனே பாட்டு கேட்கவும், கீதா மாமி மூலமாக கிசுகிசு கேட்கவும் உபயோகப்பட்டது.

2004-ளில் அபுதாபி போனபோது தான் எப்.எம்-மின் அடுத்த பரிமாணம் வெளிப்பட்டது. "அரை மணி நேரத்துக்கு ஒரு முறை செய்தித்துணுக்கு, நகரத்தில் எங்கெங்கே டிராபிக் ஜாம், இன்றைய மாளிகை விலை என்ன" என உபயோகமாக இருப்பதை அங்கே தான் முதன்முறை கண்டேன். எனது சி.டி பிளேயர் ரிப்பேர் ஆகிவிட பொழுதுபோக்குக்கு மீண்டும் புத்தகங்கள் படிக்கவும், வானொலி கேட்கவும் ஆரம்பித்தது ஒரு நல்ல திருப்புமுனை. மாலை ஏழு மணிக்கு மேலே "எஷியாநெட்" தமிழ் ஒளிபரப்பு "சக்தி எப்.எம்" ஆரம்பிக்க, இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை என்பது போல அமீரகத்தில் மீண்டும் சொத்தையாகவேணும் வானொலி முக்கியமான இடத்தை பிடித்தது.

இன்றும் வானொலி கேட்கிறேன்... பெங்களூருவில் கேப் மூலம் பயணிக்கும்போது. "தங்க்கிலீஷ்" பேசும் தொகுப்பாளினிகளே பரவாயில்லை என்று சொல்லுமாளவுக்கு கன்னடத்தை மென்று துப்புகிறார்கள் பெங்களூரு ஆர்.ஜே-க்கள். "கன்னட ரக்ஷன வேதிகே" மூலம் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக "டயல் மாடி... என்ஜாய் மாடி.." என்று மாடி கட்டுவதோடு கன்னடத்தை நிறுத்திக்கொள்கிறார்கள் பெங்களூரு தொகுப்பாளர்கள். மிச்சமேல்லாம் ஆங்கிலமும், ஹிந்தியும் தான். சிறிய வயதில் வானொலி கேட்டபோது ஏற்பட்ட அருகாமையும், இனிமையும் இப்போது இல்லை என்றபோதும் வானொலி மீண்டும் எனது வாழ்க்கையில் வந்ததே எனக்கு ஒரு ஆறுதலாக உள்ளது. ஆனால் தொலைகாட்சியால் இழவு வீடாகிப்போன எங்கள் வீட்டை மீண்டும் ஒரு உயிர்ப்போடு கொண்டு வரும் 'தம்' வானொலிக்கு இருக்குறதா என்பது சந்தேகம் தான். தொலைக்காட்சியை எங்காவது போய் புதைத்துவிட்டு வந்தால் தான் அது நடக்கும்!!!

Related Articles