இரண்டு வரிகளில் முடிக்கக்கூடிய ஒரு சின்னஞ்சிறு கதையை இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான சமயத்துக்கு நம்மை சீட்டின் நுணியில் பதைபதைக்க உட்காரவைத்து, நகம் கடித்து, இதயம் வேகமாக துடிக்கவைத்து நம்மையும் கதாபாத்திரங்களின் உலகத்துக்கு கொண்டுபோகமுடியும் என்பதை வெற்றிகரமாக காட்டியிருக்கும் படம் தான் - கலி. நான் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருந்ததற்கு ஒரே ஒரு காரணம் - "மலர் டீச்சர்" சாய் பல்லவியின் இரண்டாவது படம் இது. ஆனால் பார்க்க ஆரம்பித்ததும் படத்தில் உள்ள எல்லோரையும் பிடித்துவிட்டது.
கலி என்றால் மலையாளத்தில் "முன்கோபம்" என்று அர்த்தம். எதற்கெடுத்தாலும் காது மடல்கள் சிவக்க, நரம்புகள் புடைக்க, ஜிவ்வென ரத்தம் பாய மூக்கின் நுணியில் உள்ள முன்கோபம் விஸ்வரூபம் எடுக்க, கையில் கிடைத்ததெல்லாம் துவம்சம் செய்யும் சித்தார்த்தாக துல்கர் சல்மான். அவரை தன் பார்வையில் கட்டுப்படுத்தும் காதல் மனைவியாக சாய் பல்லவி. காலப்போக்கில் துல்கரின் கோபம் சாய் பல்லவிக்கு அலுப்பை தர அந்த சமயத்தில் சாய்பல்லவியின் தங்கை கல்யாணத்துக்கக கிளம்பும் சமயத்தில் இருவருக்கும் சண்டை வருகிறது. சாய் பல்லவி மட்டும் தனியாக கிளம்ப, அவர் பின்னால் காரை எடுத்துக்கொண்டு வந்து அவரை சமாதானப்படுத்தி இருவரும் கிளம்புகிறார்கள்.
வழியில் சக்கர என்னும் ரௌடி டிரைவராக வினோத் செம்பன் அவர்கள் காரை உரசிவிட, கோபித்துக்கொள்ளும் துல்கரை சமாதானப்படுத்தி சண்டை இல்லாமல் கொண்டுபோகிறார் சாய் பல்லவி. வழியில் ஒரு ஹோட்டலில் இருவரும் சாப்பிட இறங்குகிறார்கள். கையில் காசு இல்லாததால் அங்கே ஏற்படும் ரசாபாசத்தில் துல்கர் சல்மான் சிறைவைக்கப்பட, பக்கத்தில் உள்ள ஊருக்கு சென்று பணம் எடுத்துவர அந்த இரவில் தனியாக கிளம்புகிறார் சாய் பல்லவி. அவர் கிளம்பிய சிறிது நேரத்தில் சக்கரயும் தன் லாரியை எடுத்துக்கொண்டு பின்னே கிளம்ப, கோபத்தை அடக்கிக்கொண்டு காத்திருக்கிறார் துல்கர். அடுத்த சில மணிநேரங்களில் நடக்கும் திக் திக் காட்சிகள் தான் மீதி படம்.
முன்கோபியாக துல்கர் சல்மான்.. பொதுவாக எனக்கு வாரிசு நடிகர்களின் திறமை மீது பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த படத்தில் தனக்கும் நடிப்பு திறமை இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார் துல்கர். கோபப்படும்போது அவர் காது கூட புடைத்து நடித்திருக்கிறது. நொடியில் கோபம் தலைக்கேறி வெறித்தாண்டவம் ஆடும் அவர் முகத்தில் அடுத்த நொடியே இப்படி செய்துவிட்டோமே என்ற பரிதாபமான முகபாவத்துக்கு மாறுவது அற்புதம். இவருக்கும் சாய் பல்லவிக்கும் உள்ள காதல் கெமிஸ்ட்ரி "வார்திங்களே.." பாடலில் காண கண் கோடி வேண்டும்.
சாய் பல்லவி... கண்டவர் இதயங்களை கொள்ளையடித்த இந்த கார்டியாலஜிஸ்ட் சாய் பல்லவி. பிரமாதமான கதாபாத்திரமாக இல்லாத மலர் டீச்சரை ஏன் எல்லாருக்கும் அவ்வளவு பிடித்துப்போனது என்பதற்கு இந்த படத்தில் பதில் சொல்லியிருக்கிறார் சாய் பல்லவி. இதிலும் பயங்கர histrionics தேவைப்படும் கதாபாத்திரம் இல்லை என்றாலும் அவர் வரும்போதெல்லாம் திரை பளிச்சிடுகிறது. Simply screen scorching. முதல் பாதியில் காதலுக்கு அஞ்சலி செலுத்தும் சாய் பல்லவி, இரண்டாம் பாதியில் தைரியம் கூட்ட முயற்சிக்கும் பெண்ணாக சகநடிகர்களையெல்லாம் அப்படியே அலாக்காக முழுங்கி ஏப்பமிட்டிருக்கிறார். அதிலும் டிரைவர் செம்பன் வினோத் தன்னை பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் இடத்தில் அவரது முகபாவங்கள் கலக்கல்.. சொல்லப்போனால் இரண்டாம் பாதி பல்லவியின் ராஜ்ஜியம். இதிலும் அவரே தனக்கு டப் செய்திருக்கிறார். அங்கங்கே தமிழ் வாசனை அடித்தாலும் அவர் குரலும் அவரை போலவே தனித்தன்மையான அழகு.
வில்லனாக வரும் செம்பன் வினோதும், விநாயகமும் தங்களுக்கு கண்கள் மட்டுமே போதும் வில்லத்தனம் காண்பிக்க என்று நிரூபித்துள்ளனர். பெயர் போடும் முன்பு வரும் காட்சியில் விநாயகம் கலக்குகிறார் என்றால் இடைவேளையில் வரும் செம்பனின் வில்ல சிரிப்பை குளோசப்பில் பார்க்கும் போதே நமக்கு அடிவயிற்றில் ஜிவ்வென்று வருகிறது.
ராஜேஷ் கோபிநாத்தின் கதையில் சித்தார்த்தின் கதாபாத்திரம் முழுமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒருவகையில் கிட்டத்தட்ட எல்லா கதாபாத்திரங்களுக்கும் அவர்களின் குணாதிசயங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் காரணம் படத்தில் சொல்லப்பட்டுள்ளது. முதல் பாதியில் காதலும், ஊடலும் கொஞ்சூண்டு காமெடியாகவும் போகும் படம் இண்டெர்வல் ப்ளாக்கில் இருந்து அப்படியே திகில் தளத்துக்கு டேக் ஆஃப் எடுக்கிறது. மசினகுடியின் இருட்டையும், கொச்சியில் காதலையும் அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார் ஒளிப்பதிவர் கிரீஷ் கங்காதரன். இத்தனைக்கும் இந்த படத்தின் இயக்குநர் சமீர் தாஹிரும் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர் தான்.
மேலோட்டமாக பார்த்தால் சாதாரண மசாலா படமாக இருந்தாலும், இரண்டு மணிநேரம் எப்படி பார்வையாளர்களை engaged-ஆக வைத்துள்ளது என்று ஆச்சரியமூட்டுகிறது இந்த 'கலி'.