குற்றமே தண்டனை
படம் பார்க்கும் போது பார்வையாளர்களின் மனதை பதைபதைக்க வைக்க கொலை,கொள்ளை, சேஸிங்க காட்சிகள் எல்லாம் தேவையில்லை என்று நிரூபிக்க ஒரு த்ரில்லர் உதாரணம் இந்த படம். எதிரில் உள்ளவற்றை மற்றுமே பார்க்க முடிந்த பார்வை குறைவுள்ள விதார்த்துக்கு அவர் பார்த்த ஒரு கொலையை மறைக்க பணம் கொடுக்கப்படுகிறது. அதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது தான் இந்த 1:30 மணிநேர திரைப்படம். கிரெடிட் கார்ட் தொகை வசூலிக்கும் சிறிய கம்பெனியின் ஊழியர்களின் நிலைமை, கண் மருத்துவமனைகளின் கொள்ளை, வக்கீல்களின் வண்டவாளம் என பல விஷயங்களை இந்த குறுகிய சமயத்தில் கோடிட்டு காண்பித்திருந்தாலும், இந்த நேரத்துக்கு படம் கொஞ்சம் நீளமாக தோன்றுகிறது. தயாரிப்பாளர் / கதாநாயகன் விதார்த் கனக்கச்சிதமாக பொருந்துகிறார். கதாநாயகியாக "இறைவி "புகழ் பூஜா திவாரியா தன்னுடைய தியேட்டர் நாடக பின்புலத்தின் அனுபவத்தை கொண்டு தன்னுடைய சிறு கதாபாத்திரத்துக்கு புத்துயிர் ஊட்டியிருக்கிறார். படத்தின் முடிவில் வரும் இரண்டு திருப்பங்களில் ஒன்று நாம் எதிர்பார்க்கக்கூடியது ஆனால் அடுத்தது உண்மையிலேயே எதிர்பாராதது. இயக்குநர் மணிகண்டனின் ஒளிப்பதிவில் பல ஃப்ரேம்கள் அற்புதமானவை. Classic. குற்றமே தண்டனை - பார்ப்பவர்களுக்கு தண்டனை அல்ல ஆனால் கொஞ்சம் ஆற அமர நிதானமாக ரசிக்கவேண்டிய படம் இது.