ஒரு நாள் கூத்து

Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் சினிமாவில் எப்படி தான் திடீரென்று ஒரே genre படங்கள் ஒரே நாளில் வருகின்றனவோ? இறைவி வந்து பார்த்தது மனதில் செட்டில் ஆகும் முன்னரே அடுத்த வெள்ளிக்கிழமை வந்திறங்கியுள்ளது "ஒரு நாள் கூத்து". இந்த படம் பார்த்ததும் "இதற்கு இறைவி என்று பேர் வைத்திருக்கலாமோ ?" என்று தோன்றியது. இதுவும் "இறைவி" போல 3 பெண்களை பற்றிய படம் தான். சொல்லப்போனால் இறைவியை விட இதில் பெண்கள் அதிகம் முன்னிறுத்தப் பட்டுள்ளனர். அவர்களது தரப்பு உணர்வுகள் இன்னும் ஆழமாக சொல்லப்பட்டுள்ளன. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்ததால் இந்த படம் மிகவும் பிடித்திருந்தது.

கல்யாணத்தை எதிர்நோக்கியுள்ள மூன்று பெண்கள்.. மூவரும் வெவ்வேறு வாழ்க்கை தரம் / முறையிலிருந்து வந்துள்ளவர்கள். அவர்கள் வாழ்வில் "அந்த ஒரு நாள்" வருவதற்குள் அவர்கள் தாவு தீர்ந்துவிடுகிறது. ஒவ்வொருவருக்கும் நேரடி சம்பந்தமில்லை... அந்த கடைசி காட்சி வரும் வரை. வாழ்க்கையில் கல்யாணத்தை முக்கியமாக கருதும் அவர்களின் உணர்வுகளை, எண்ணங்களை இவ்வளவு தத்ரூபமாக capture செய்திருப்பது ஒரு ஆண் இயக்குநர், அதுவும் இதற்கு முன்பு யாரிடமும் உதவியளராக பணிபுரியாத புதுமுகம் என்னும் போது எனக்கு பிரமிப்பு தான் வந்தது. படம் முழுக்க ஏதோ காரணமே இல்லாமல் மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் தான் நினைவுக்கு வந்தார்.

வரும் வரன்களை எல்லாம் அப்பா தட்டிக்கழித்து கொண்டே போனதால் முதிர்கன்னியாகி நிற்கும் மியா ஜார்ஜ், மீடியாவில் வேலை பார்ப்பதால் கல்யாணம் தடைபெற்றுக்கொண்டு போய் நிற்கும் ரித்விகா, வசதியான குடும்பத்திலிருந்து வந்த சாஃப்ட்வேர் ஊழியர் நிவேதா... இவர்களது கல்யாணம் நடந்ததா? என்பது தான் இந்த படம்.

இந்த படம் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார் "என்னா சார் இன்னும் கல்யாணம் கல்யாணம்னு பெனாத்திக்கிட்டு... அந்த காலம் மாதிரி. பட்டணத்து பொண்னுங்க எல்லாம் மாறிட்டாங்க.. அவங்களுக்கெல்லாம் கல்யாணம் எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. அது தான் மேட்டர் எல்லாம் முன்னாடியே முடிச்சிடுறாங்களே. இந்த படத்துல கூட அப்படி தானே வருது". இந்த படத்திலும் முடியும்போது பார்வையாளர்களிடம் "கல்யாணத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?" என்ற பேட்டியுடன் முடிகிறது. இந்த படம் கல்யாணம் மட்டும் முக்கியம் என்று சொல்லவில்லை ஆனால் கல்யாணத்தை நம்பும் சில பெண்களை பற்றிய கதை.

இதில் மூன்று பெண்களுமே கலக்கலான நடிப்பை தந்துள்ளனர். Solid performances. தமிழில் இத்தனை திறமையுள்ள நடிகைகள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். இதில் அதிகம் கவர்பவர் - புதுமுகம் நிவேதா. பணக்கார வீட்டில் பிறந்து, கஷ்டத்தையே அறியாத சாஃப்ட்வேர் ஊழியராக, தன் சக ஊழியரான ஏழை தினேஷை காதலிக்கிறார். ஆனால் தினேஷோ தன் தாழ்வு மனப்பான்மை காரணமாக கல்யாணத்தை தள்ளிப்போட்டுகொண்டே போகிறார். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் வேறொருவருக்கு கழுத்தை நீட்ட தயாராகிறார் நிவேதா. கஷ்டப்பட காரணமே இல்லாமல் வளரும் பெண்ணுக்கு தினேஷின் கஷ்டம் புரியவில்லையா இல்லை காத்திருக்கும் அளவுக்கு பொறுமை இல்லையா என்று நிலைகொள்ளாமல் தத்தளிக்கும் கதாபாத்திரத்தில் வெளுத்துவாங்கியிருக்கிறார் இந்த துபாய் தமிழச்சி நிவேதா பெத்துராஜ்.

அடுத்து நம் மனதை கொள்ளையடிப்பவர் சிறிய நகரமான திண்டுக்கல் பெண்ணாக கேரளத்து மியா ஜார்ஜ். தன் கல்யாணத்தை தட்டிக்கழிக்கும் அப்பாவை மீறி எதுவும் பேச முடியாது உள்ளுக்குள்ளே புழுங்கும் லக்‌ஷ்மியாக கலக்கியிருக்கிறார். ஒவ்வொரும் முறை பெண் பார்க்கவரும்போதும் சலிப்புடன் வந்து நிற்பதும், ஒரு கட்டத்தில் தன்னை பிடித்ததாக சொல்லும் வரனுடன் செல்ஃபோனில் தயக்கத்துடன் பேச முயற்சிப்பது என அசத்தியிருக்கிறார். இவர் கதையில் அந்த வரன் செய்தது சரியா தவறா என்ற கேள்வி வந்தாலும் மியாவின் நடிப்புக்காகவே இதனை கண்டுக்காம விட்டுடலாம்.

பண்பலைவரிசை வானொலியில் RJ-வாக பணிபுரியும் தந்தையில்லாத நடுத்தர குடும்பத்து பெண்ணாக ரித்விகா. நடுத்தரவர்கத்துக்கு கல்யாணம் என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை கோடிட்டு காட்ட ரித்விகாவின் மாமாவாக சார்லி - ஐம்பது வயதாகியும் கல்யாணமாகாத பிரம்மச்சாரி. ஊடகத்துறையில் வேலை செய்யும் பெண்களின் நடத்தை பற்றி சமுதாயம் கொள்ளும் ஐயத்தின் காரணமாக கல்யாணம் தள்ளிக்கொண்டே போக, கடைசியில் "இதுக்கு தான் இவ்வளவு கலாட்டாவா? இதுவும் நல்லா தான் இருக்கு" என்று one night stand-க்கு தயாராகும் பெண்ணாக அதிர்ச்சியூட்டுகிறார். இவர் நடித்து நான் பார்க்கும் முதல் படம் இது தான். She is in a fine form.

கடைசி வரைக்கும் ஜஸ்டினின் பின்னணி இசையில் மிருதங்க நாதம் பார்ப்பவர்களின் மனதில் திக்திக்கென்று எதிர்பார்ப்பை ஏற்றிக்கொண்டே இருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சியின் திடுக் திருப்பம் நாம் எதிர்பார்க்காததாக இருந்தாலும் அது ஒரு forced ending போல படுகிறது. "என் லவ்வர் என்ன standby-ஆ?" என்ற ஒரே ஒரு பஞ்ச் டயலக்குக்காகவே தினேஷின் காதல் பலியாக்கப்படுகிறது. லக்‌ஷ்மிக்கு ஒரு வழியை காண்பித்த இயக்குநர் RJ சுசிக்கு ஒரு வழி காண்பிக்காமல் முடித்திருப்பது கொஞ்சம் நெருடல்.

இந்த படத்தை பார்த்தபோது எனக்கு ஏனோ கே. பாலசந்தரின் "கல்யாண அகதிகள்" படம் நினைவுக்கு வந்தது. மேலும் விசு, கே.பி ஆகியோர் அடித்து துவைத்து காயப்போட்ட கதைக்கு புது திரைக்கதை மூலம் புது வண்ணம் பூச முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.

Iraivi Anjali

கடந்த வாரம் நான் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான "இறைவி" படம் பார்த்தேன். மூன்று பெண்களின் கதை என்ற பீடிகையோடு இறங்கிய கதையில் பெண்களுக்கான screen time குறைவே. மாறாக அவர்களை அந்தந்த முடிவுகளை எடுக்கவைக்கும் ஆண்கள் கதை தான் அதிக நேரம் எடுத்துள்ளது. இந்த transition-ல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் சொல்ல வந்ததை முழுசாக சொல்ல தடுமாறியிருக்கிறார். வறுமையில் வாடும் பெண்களுக்கே துணிச்சல் அதிகம் என்ற cliche-வை மீண்டும் சொல்லியிருக்கிறார் கார்த்திக். அஞ்சலி வழக்கம்போல குறை சொல்லமுடியாத நடிப்பு. அதிலும் தன்னை காதலிப்பதாக பாபி சிம்ஹா சொல்லும் இடத்தில் அவரது பதில் வசனமும் முகபாவமும் ரொம்ப நேரம் என் மனக்கண்ணில் நின்றது. ஆண்களில் SJ சூர்யா நன்றாக செய்திருந்தார். எனக்கென்னவோ இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு நாள் கூத்து தான் சொல்ல வந்ததை நிறைவாக சொல்லியதாக அபிப்பிராயம்.

Related Articles