மணிரத்னத்தின் படங்கள் வெறும் படங்கள் அல்ல.... அவை ஒரு event by itself. ராவணன் படத்துக்கு எதிர்பார்ப்புகள் வேகமாக எகிறிக்கொண்டிருந்த சமயத்தில் அவரை வெறுக்கும் ரசிகர்கள் கூட “கிழிப்பத”ற்க்கேனும் படத்தை பார்க்கத் துடித்துக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் வெளியான ராவண் / ராவணன் படத்துக்கு முதல் விமர்சனமான "SRK payroll”ராஜா சென் முதல் நடுநிலையான தரண் ஆதர்ஷ் வரை எல்லாருமே சொல்லி வைத்தது போல கிழித்தெடுக்க எனக்கு கொஞ்சம் ஆர்வக்குறைவு ஏற்பட்டது உண்மையே. ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை மிக மிக யதேச்சையாக என் அண்ணா குடும்பத்தினரோடு சேலம் கீதாலயாவில் பார்த்தபோது படம் “அசாதாரணமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டதே தவிர அத்தனை மோசமான படம் அல்ல” என்று தோன்றியது. அழகான தருணங்கள், மிக திறமையான Technicians, பழமையை உடைக்க வாய்ப்பளிக்கும் அற்புதமான கதைக்களம் என எல்லாம் இருந்து மணிரத்னம் அசாதாரணமாக கோட்டை விட்டிருப்பது தான் பரிதாபம். இது என்னை ஏன் “ராவணன்” ஈர்த்தது / வெறுப்படித்தது என சொல்லும் பதிவு.
Page 1
கேரளாவின் மூலாமட்டம் காடுகளின் குளிர்ச்சியையும், சாலக்குடியின் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியின் சாரலையும் கொஞ்ச நேரத்திலேயே தியேட்டரின் ஏ.சி குளிர்ச்சியில் உணர ஆரம்பித்துவிடுகிறோம். கிட்டத்தட்ட நாமே அந்த வனங்களின் இலைகளையும், பனியையும் தொட்டுக்கொண்டு இருப்பது போன்ற உணர்வு. மணிகண்டனின் கேமிராவின் சக்தி அது. மற்றொரு ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் பிற்பகுதியில் வந்திருந்தாலும் இருவரின் ஒளிப்பதிவிலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் இருப்பது சிறப்பு. ராகினியை கடத்தும் போது ஒரு கழுகு வந்து அவர் முன்னால் அமரும்போது கேமிராவும் கழுகோடு பறந்து வந்து சரியாக கழுகின் விறிந்த இறக்கைகளிடையே மிரட்சியான ராகினியின் கண்களை இருத்தியபடி நிற்கும். இதுபோன்ற சிறு சிறு ஷாட்களிலும் ஓவியங்களை தீட்டியபடி படம் முழுக்க ஒரு visual fest-ஆகவே அளித்திருக்கின்றனர் இதன் தொழில்நுட்பக்குழு. அதே சமயம் அதுவே இந்த படத்துக்கு ஒரு பலவீனமாக அமைந்துவிட்டது என்பது எனது அபிப்பிராயம். பார்வையாளர்கள் காட்சியின் அழகில் பிரமித்து இருப்பதால் பல இடங்களில் மிக subtle-ஆக சொல்லப்பட்ட / கதாபாத்திரங்களின் முகபாவங்களை கவனிக்க மறந்துவிடுகின்றனர்.
அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியின் மீதிருந்து ராகினி (அபத்தமான வசனம் பேசியபடி) குதித்து தன்னை மாய்த்துக்கொள்ள முயற்சிக்க, அந்த ஒரு கணத்தில் ராகினி மீது வீரா காதல் கொண்டு பதறியபடி பின்னாடியே குதிக்க, முதலில் நம்மை பிரமிக்க வைப்பது அதிரம்பள்ளியின் பிரம்மாண்டமும், மழைக்கால ஈர பாறைகளின் பளபளப்பும். இதை தாண்டி வீரைய்யனின் “காதல்” உடல் மொழியை சாதாரண ரசிகன் வேகமாக உணர்வது மிகவும் சந்தேகமே. இது போல பல இடங்கள்... முதல் முதலாக வீரைய்யன் ராகினியிடம் கொஞ்சம் வெளிப்படையாகவே தன் காதலை சொல்லும் இடம் “குருவம்மாவா நீங்க எங்க கூடவே இருந்துவிடுங்களேன்..” என்று கேட்கும் இடம். அது போல சக்கரை “14 மணி நேரத்தில் கொன்று விடுவதாக கடத்தி வந்துவிட்டு 14 நாட்களானாலும் ராகினியை கொல்லாமல் விட்டிருப்பதே வீராவுக்கு ராகினியின் மேலுள்ள ஆசையை காட்டுகிறது. 14 ஆண்டுகளானாலும் அவளை கொல்ல மாட்டான் அதனால் அனுப்பிவிடலாம்” என்று வசனமும், மேலும் க்ளைமேக்ஸில் ராகினியும் வீரையன் மீதான தன் காதலை சொல்ல “பக் பக்..” என்ற உளரலை உபயோகப்படுத்துவதும் ஜில்லென்ற இனிமை.
இது விக்ரமின் மிகச்சிறந்த கதாபாத்திரம் இல்லையென்றாலும் மனிதர் அழகாக score செய்கிறார். அந்த முகத்தில் எத்தனை உணர்ச்சிகளும் சேர்ந்து கலவையாக தாண்டவமாடுவது அழகு. கொல்வதற்காக கொண்டுவரப்பட்ட ராகினி மீது ஏற்படும் காதலையும், வெண்ணிலாவின் மரணத்தை நினைத்து உருகுவதாகட்டும், இந்த இரண்டு உணர்ச்சிகளும் போட்டு குழப்பி அவ்வப்போது வெறித்தனமாக வெளியேற்றிக்கொள்வதாகட்டும், அந்த கண்கள் பேசாமலேயே ஆயிரம் வார்த்தைகளை பேசுவது class.
படம் முழுக்க வீரைய்யனும், ராகினியுமே வந்துக்கொண்டிருப்பது கொஞ்சம் அலுப்பாக இருந்ததனாலோ என்னவோ வெண்ணிலாவாக பிரியாமணி கொஞ்ச நேரமே வந்தாலும் படம் பார்ப்பவர்களின் மனதையும் பரிதாபத்தையும் அள்ளிக்கொள்கிறார். நல்ல நடிகருக்கு தம்மை நிரூபித்துக்கொள்ள footage நீளம் அவசியமில்லை என்பதற்கு உதாரணம் இந்த வெண்ணிலா கதாபாத்திரம். Hats off to Priyamani. எனினும் இவர் போன்ற திறமையான நடிகர்களை (உ.தாரனம் - “குரு”வில் வித்யா பாலன், “இருவர்”இல் ரேவதி என பலர் )மணிரத்னம் சிறிய கதாபாத்திரங்கள் கொடுத்து வீணடிப்பது எரிச்சலாக உள்ளது. அது போல பிரபுவுக்கு பெரிய வேலை இல்லையென்றாலும் அந்த மை பூசிய கண்களோடு கொஞ்சம் போல நமது முகத்தில் புன்னகையை கொண்டு வருகிறார்.
ராகினியின் கல்யாண வாழ்க்கையை பற்றி அதிகம் விவாதிக்காமல் விட்டிருப்பது வீரைய்யன், ராகினியிடையே பூக்கும் காதலை நம்மால் வெறுக்கவோ, ஆட்சேபிக்கவோ செய்யாமல் இருக்க வழிசெய்கிறது. தேவ் நல்ல கணவனா இல்லை கடமை உணர்ச்சி மிக்க காவல்காரனா என்பதை அப்பட்டமாக சொல்லாமல் மெதுவாக establish செய்திருப்பது நல்ல யுக்தி. தன் மனைவியை விடுவிக்க சமரசம் பேச வரும் சக்கரையை, பிணைக்கைதியாக உள்ள ராகினிக்கு ஏற்படக்கூடிய பின்விளைவுகளை, பற்றி யோசிக்காமல் “போட்டுத்தள்ளு”வதிலும் சரி, கடைசியில் தந்திரமாக ராகினியை தூண்டிவிட்டு வீராவின் இருப்பிடத்தை அடைவதாகட்டும், தேவுக்கு ராகினியின் மீதான காதலை விட வீராவை பழிவாங்குவதில் உள்ள வெறி மட்டுமே முன்னிற்கிறது.
மும்பை அருகில் உள்ள மால்சேஜ் மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்ட அந்த கிளைமேக்ஸ் பாலம் சண்டை.. சமீபத்திய இந்திய சினிமா இதுவரை காணாத பிரம்மாண்டம். பாலத்தை உருவாக்கிய சமீர் சந்தாவையும், சண்டை பயிற்சி கொடுத்த ஷாம் கௌஷலையும், படமாக்கிய சந்தோஷ் சிவனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
திரையில் வரும் “காட்டுச்சிறுக்கி” பாடல் சி.டி-யில் உள்ள பதிப்பிலிருந்து மாறுபட்டிருக்கிறது. சொல்லப்போனால் எனக்கு திரையில் வந்த பதிப்பு தான் பிடித்திருந்தது. பாடல் காட்சிகள் எல்லாம் படத்தில் 1-2 நிமிடங்கள் தான் வருகிறது. நறுக்கென்று முடித்திருப்பது நல்லது.