ரொம்ப நாட்களுக்கு மட்டை போட்டுவிட்டு கடைசியாக ”அங்காடி தெரு”வை பார்த்தபோது மனசு கல்லாக பாரமானதை தவிர்க்கமுடியவில்லை. படம் முழுவதும் ரத்தமும் சதையுமாக யதார்த்தமான மனிதர்கள். “களவானி” ஒரு இன்ப அதிர்ச்சி - வரிவிலக்கு பெறுவதற்காக தமிழில் பெயர் வைத்துவிட்டு புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் பலான படமோ என்ற சந்தேகத்தில் நான் ஒரு பொருட்டாகவே கருதாத படத்தை, இணையதளத்தில் (கதையை படிக்காமல்) நல்ல விமர்சனங்களை படித்தபிறகு பார்த்தபோது ஒரு இனிய அதிர்ச்சி. அனுஷ்கா விபச்சாரியாக நடிக்கும் “தாகம்” என்று போஸ்டர் அடித்து தியேட்டரில் தெலுங்கிலேயே ஓடும் “வேதம்” அந்த ஒரு கேவலமான “இழுப்பு”க்கு தகுதியில்லாத அருமையான கலைப்படைப்பு. பட்ட காலிலேயே படும் என்பதற்கு உதாரணமாக “சொம்பு”, “சின்ன தளபதி” ஆகியோரின் நடிப்பில் தமிழில் உருவாகிக்கொண்டிருக்கிறதாம் இந்த “வேதம்”. இனி இவை குறித்த என்னுடைய குறுங்கருத்துக்கள்.
அங்காடி தெரு - சென்னையின் வர்த்தக தெருவில் அமைந்த அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் அடியில் கொத்தடிமைகளாக வாடும் இளைஞர்களின் கதையை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் வசந்தபாலன். அந்த கடையிலேயே படப்பிடிப்பு நடத்தி அவர்களை பற்றி கதை சொல்ல செம “தில்” வேணும், அது வசந்தபாலனுக்கு ஏராளமாகவே இருந்திருக்கிறது. இந்த படம் பார்த்த பிறகேனும் நாலு பேராவது அந்த Salesmen / Salesgirls-ஐ மனிதர்களாக நடத்தினால் அது வசந்தபாலனின் வெற்றியாக கொண்டாடலாம். கசப்பான விஷயத்தை இனிப்பு தடவி அதே சமயம் மருந்தின் வீரியம் குறைக்காமல் கதை சொன்னதற்கு வசந்தபாலனை பாராட்டலாம். ”வெயில்”, “அங்காடி தெரு” ஆகிய படங்களில் தனிமனிதர்களின் துயரத்தை வசந்தபாலன் காசாக்கிவருவதாக எங்கோ ஒரு அபத்தமான குற்றச்சாட்டை படித்தேன்.
ஆனால் என் கண்ணில் பட்டதென்னவோ ஏழை ஆனாலும் வாழ்க்கையில் நம்பிக்கை இழக்காத மனிதர்கள். குள்ளமாக குழந்தை பிறந்ததற்காக உவகை கொள்ளும் முன்னால் பாலியல் தொழிலாளி, குடலை புரட்டும் கக்கூசை மூலதனமாக்கி பிழைக்கும் கழிப்பிடக்காப்பாளன், கால் போனாலும் சக்கர வண்டியில் போய் வியாபாரம் செய்து சந்தோஷமான வாழ்க்கை நடத்தும் கதாநாயகனும், கதாநாயகியும் என படம் முழுக்க பாஸிடிவான மக்களே நிறைந்துள்ளனர். சேர்ம்மக்கனியாக அஞ்சலி கலக்கியுள்ளார். இந்த பெண் நிறைய, மிக நிறைய (மறைந்த) ஷோபாவை நினைவுபடுத்துகிறார். மின்னல் போல சட்சட்டென்று மாறும் முகபாவம் என்ன, முகத்தில் உணர்ச்சியை தேக்கிவைத்துக் காட்டும் லாவகம் என்ன, தாய்மொழி தெலுங்கென்றாலும் தமிழில் சொந்தக்குரலில் தேவையான அளவுக்கு உணர்வுகளை தெளித்திருப்பதென்ன? தமிழுக்கு கிடைத்த அற்புதமான நடிகை அஞ்சலி. துரதிர்ஷ்டவசமாக (இதுபோன்ற) வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்காமலே போகக்கூடும் இந்தப் பெண்ணுக்கு. ஒருவேளை இந்த பெண் ரேவதி, வித்யா பாலன், மீரா ஜாஸ்மின் (மலையாளம்) போல வணிகரீதியாகவும், நடிப்புரீதியாகவும் வெற்றிப்பெற்றால் நான் மனமார் மிகவும் சந்தோஷப்படுவேன். திருட்டு DVD-ல் பார்த்ததன் பிராயச்சித்தமாக இந்த படத்தின் ஒரிஜினல் DVDஐ எந்த விலையானாலும் அடுத்தமுறை கடைக்கு போகும்போது வாங்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.
களவானி:- ”சேது” பாலாவின் வழியில் வந்த இயக்குநர் சற்குணத்தின் முதல் படத்தில் ஒரு மாறுதலுக்காக தஞ்சை தமிழகத்தில் அமைக்கப்பெற்ற கதை தான் “களவானி”. யதார்த்தமான கதை என்றால் நாயகன் ‘நல்லவன்” ஆக இருக்கக்கூடாது என்று பாலா சொல்லிக்கொடுத்திருக்கிறார் போல. அந்த இலக்கணத்தில் இதிலும் கதாநாயகன் வேலை வெட்டி இல்லாமல், அம்மாவை மிரட்டி காசு வாங்கி செலவு செய்துக்கொண்டிருக்கும் “ஆதர்ஷ புருஷன்”. எனினும் கதாநாயகன் மீது எரிச்சல் உண்டாக்காமல் கதையை கலகலப்பாக கொண்டு போனது இயக்குநரின் சாமர்த்தியம். மொத்த படத்திலேயும் எனக்கு 3-4 காட்சிகள் தான் நினைவில் இருக்கிறது. பஸ் ஸ்டாப்பில் 2 பேரை ஒரே நேரத்தில் ”maintain" செய்வதும் (விமலுக்கு செம ரகளையான முகபாவங்கள்), கடைசியில் “எவ்வளவு தைரியம் இருந்தா என் மச்சினன் மேலே என் முன்னாடியே கைவைப்பே” என்று அடாவடியாக திருப்பிப்போடும் காட்சியும், கோவில் திருவிழாவில் “அத்தான் ஐ லவ் யூ” என்று ரிக்கார்ட் டான்ஸ் ஆட்ட்க்காரி கஞ்சா கருப்புக்கு பறக்கும் முத்தம் தருவதும் தான் இப்போது என் நினைவில் நிற்கிறது. ஒல்லியான இளவயது சினேகாவை நினைவு படுத்தும் கதாநாயகி ஓவியா (குடும்ப பின்னணியை விசாரிச்சா சினேகா வீட்டு கதவை தட்டுமோ?). வழக்கமான காதல் கதை தான் என்றபோதும் படம் முழுக்க ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது.
வேதம் (தெலுங்கு):- “கம்யம்” க்ரிஷ் இயக்கிய இரண்டாவது படம், சமீபத்திய காலகட்டத்தில் ஆந்திராவில் வந்துள்ள “முதல்” multi starrer என எதிர்பார்ப்பை கொண்டு வெளிவந்த “வேதம்” விமரிசகர்களையும் சரி, சராசரி பார்வையாளர்களையும் சரி ஏமாற்றாமல் அசத்தியுள்ளது. எனக்கு முழுவதுமாக தெலுங்கு புரியவில்லை என்றபோதும் கடைசியில் கண் கலங்க வைத்தது இந்த ”வேதம்”. கதை புகழ் பெற்ற “அமோரெஸ் பெரேஸ்” வகை தான். ஐந்து வித்தியாசமான கதைகள் ஒன்றோடொன்றுக்கு தொடர்பில்லாமல் பயணித்து கடைசியில் ஒரு சம்பவத்தில் இணைவது தான் இந்த “ராஷொமோன்” வகை. மணிரத்னம் கூட இந்த யுக்தியை தனது “ஆய்த எழுத்து / யுவா (ஹிந்தி)”-வில் பயன்படுத்தியிருந்தார். “வேத”த்தில் ஐந்து கதைகளுமே ஒன்றை ஒன்று மிஞ்சி ஏதாவது ஒன்றை “the best" என்று தேர்ந்தெடுக்க முடியாமல் அத்தனையுமே ஜொலிக்கிறது. நடிப்பு என்று பார்த்தால் விலைமகளாக வரும் ‘அனுஷ்கா’ மிக எளிதாக ஸ்கோர் செய்கிறார். பாலியல் தொழிலாளி என்ற போதும் ஓரிடத்தில் கூட மாராப்பை விலக்காமல் தனது body language-லேயே ஒரு sensuality-ஐ கொண்டுவருகிறார். சரண்யாவின் மாமனாராக வரும் முதல் முறை நடிகர் நரசைய்யா தேர்ந்த நடிகர் போல படம் பார்க்கும் நம்மை கலங்கடித்து இருக்கிறார். அடுத்து “கேபிள்” ராஜுவாக அல்லு அர்ஜுன். வழக்கமான தனது குரங்குத்தனத்தை விட்டுவிட்டு ஒழுங்காக நடித்து பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார். மனோஜ் மன்ச்சு பணக்கார வீட்டுப்பிள்ளை என்ற ஒரே காரணத்துக்காக படத்தில் வாய்ப்பு பெற்றிருக்கிறார். மனோஜ் பாஜ்பாயின் “குரேஷி” கதை கொஞ்சம் cliched வகை என்கிற போதும் கதைக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் ஒவ்வொரு நல்ல சினிமா ரசிகரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம். “தாகம்” போஸ்டர் பார்த்துவிட்டு சதையை எதிர்பார்த்துவிட்டு எத்தனை பேர் போய் ஏமாந்தார்களோ இல்லை நல்ல கதையை புரிந்து ரசித்தார்களோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.