Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
Click the image to read furtherமணிரத்னம் - ஏ.ஆர் ரகுமான் கூட்டணியின் 9வது இசைப் படைப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் சமீபத்தில் வெளியானது. முதலில் ஹிந்தியின் “ராவண்” ஏப்ரல் 24ம் தேதியும், பின்னர் தமிழ் / தெலுங்கில் மே மாதம் முதல் வாரத்தில் வெளியான இதன் இசை வழக்கம்போல எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளானது. ஆனால் ஏ.ஆர் ரகுமானின் இசை என்பது மதுபானத்தை போல. குடித்த சில ரவுண்டுகளுக்கு பிறகு தான் போதை ஏறும். அது போல ரகுமானின் இந்த பாடல்கள் நம் மீது வளர கொஞ்சம் சமயம் எடுத்துக்கொண்டது உண்மை தான். முதலில் ஹிந்தியில் கேட்டபோது எல்லாமே ஒரே பாடல் போல தோன்றியது. ஹிந்தி பதிப்பின் வரிகளை எழுதியது மாபெரும் கவிஞரான குல்ஸார் ஆனபோதும் சமயமின்மை காரணமாக வரிகளை கூர்ந்து கவனிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் பதிப்பு வந்தபோது (நன்றி: அழகான வரிகளை எனக்கு முன்னோட்டமாக சொன்ன அரவிந்தன்) அந்த பாடல் எந்த சூழலுக்கு வந்திருக்கு என்று யூகிக்க ஆரம்பித்தபிறகு பாடல்களின் தனித்துவம் புரிய ஆரம்பித்துவிட்டது. மொத்தம் 6 பாடல்கள், அவற்றில் மிக எளிதாக 3-4 தேறும். நான் வரிசை படுத்தியிருப்பது எனது விருப்பத்தின் அடிப்படையில்.

 

1. உசுரே போகுது:- கார்த்திக் பாடிய இந்த பாடல், ”உசுரே போகுது உசுரே போகுது உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே..” என்று ஆரம்பிக்கிறது. இரையாலேயே வேட்டையாடப்பட்ட வேடனின் தவிப்பை, இயலாமையை வைரமுத்து அழகாக இயல்பான தமிழ் வழக்கில் எழுதியிருக்கிறார். ”அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்ட துடிக்குதடி..” & ”இந்த மம்முத கிறுக்கு தீருமா, நீ மந்திரிச்சுவிட்ட கோழி மாறுமா” ஆகிய வரிகளில் சீதையை பழிவாங்கும் நோக்கத்தில் கடத்தி வந்த ராவணன், மாறாக அவள் மேலே காதல் கொண்டுவிட்ட தடுமாற்றத்தை உணரலாம். அவ்வப்போது உயிரே படத்தில் வந்த “என்னுயிரே..” பாடலை நினைவுப்படுத்தும் இந்த பாடல் நிச்சயம். ஹிந்தியில் “பெஹனே தே..” என்று இதே கார்த்திக் பாடியிருக்கிறார்.

2. கள்வரே கள்வரே:- ஷ்ரேயா கோசல் பாடிய ’சோலோ’ என்ற உடனேயே உங்களுக்கு புரிந்திருக்கும் - இது மெலடியான காதல் பாடல் என்று. தாலாட்டும் இன்னிசை, கொஞ்சம் பாரம்பரிய சங்கீதத்தை மெல்லிசையாக கலந்து கொடுத்திருக்கும் இந்த பாடல் காதல் கொண்ட பெண் தன் கணவனுடன் சரசத்தில் ஈடுபட்டிருக்கும்போது பாடப்பட்டது என்று தெரிகிறது. மேலும் அந்த பெண் மட்டும் பாடிக்கொண்டிருப்பதிலிருந்து அவள் கணவன் வழக்கமான காதலன் அல்ல மாறாக கொஞ்சம் முரட்டுத்தனமான ஆண்மையுடன் மெல்லிய உணர்ச்சிகளை வெளியிடாதவன் என்று யூகிக்கமுடிகிறது. வைரமுத்து இந்த பாடலை எழுத “இங்க்”-க்கு பதிலாக மதுவை பயன்படுத்தினாரா என்று சந்தேகம். காரணம் இதன் வரிகள் அவ்வளவு சரசம் - ”உடை களைவீரோ? உடல் அணிவீரோ?” உடலுறவை இவ்வளவு நாசூகாக நறுக்கு தெறித்தாற்போல சமீபத்தில் நான் கேட்கவில்லை. “வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள்.. தமிழுக்கு தெரிகின்றதே”... என கதாநாயகி தன் உடலின் இன்பவலிகளை நாயகனுக்கு நாசூக்காக சொல்லும் கொஞ்சல் பாடல். இந்த பாடல் ஹிந்தியில் “கில்லி ரே கில்லி ரே..” என்று ரேகா பரத்வாஜ்-ஆல் பாடப்பட்டுள்ளது.

3. கோடு போட்டா:- இது காட்டுவாசிகளின் கூட்டத்தில் அவர்களுடைய விட்டுக்கொடுக்காத குணத்தை அதே சமயத்தில் அன்பிற்கு மரியாதை செய்யும் குணத்தை சொல்லும் பாடல். ‘கோடு போட்டா கொன்னுப்போடு, வேலி போட்டா வெட்டிப்போடு.. சோத்துல பங்கு கேட்டா இலையை போடு, சொத்துல பங்கு கேட்டா தலையை போடு..” என்ற “புல்லை போல தானே வளர்ந்த” அவர்களது கூட்டத்தின் இயல்பை துள்ளலான இசையோடு கொடுத்திருக்கின்றனர் வைரமுத்துவும் ஏ.ஆர் ரகுமானும். பாடலின் இடையில் வரும் ராஜபாட்டையான இசை இது ஒரு திருவிழா பாடலாக இருக்கும் என்று யூகிக்கவைக்கிறது. இதை பாடியிருப்பது ஏ.ஆர் ரகுமானின் சமீபத்திய கண்டுபிடிப்பும், பிடித்த பென்னி தயாள். கடைசியில் வரும் இசைக்கோர்வைகளை கவனிக்கும்போது ஒருவேளை இது கிளைமேக்ஸில் வரும் பாடலாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இதன் ஹிந்து பதிப்பான “டோக் தே கில்லி..” பாடல் ஹிந்தி இசை வெளியிட்டின்போது அபிஷேக் பச்சனால் மேடையில் ஆடப்பட்டு வெளியிடப்பட்டது.

4. வீரா... வீரா:- இந்த பாடல் தான் ராவணன் படத்தின் விளம்பரத்தை கம்பீரமாக துவக்கிவைத்தது. இது கதாநாயகனின் அறிமுகப்பாடல் என்றபோதும் “நீ தான் எங்கள் தலைவன், நாளைய முதல்மந்திரி” என்றெல்லாம் பிதற்றாமல் நாயகனின் diabolic குணத்தை - பிடித்தவர்களுக்கு உயிரை கொடுக்கும், அதே சமயம் பிடிக்காதவர்களின் உயிரை எடுக்கும் raw குணத்தை “ராமனும் நாந்தேன்... ராவணனும் நாந்தேன்..” என்று சொல்லியிருக்கிறார் வைரமுத்து. வேகமான தாள கதியில் போகும் இந்த பாடலின் ஆரம்பத்தில் ஹிந்திப்பாடலில் வரும் “மெஹக் மசா லோ..” என்ற வரியை தமிழில் ஹம்மிங்காக உபயோகப்படுத்தியுள்ளார் ஏ.ஆர். ஆர். கேட்கும்போதே புரிந்துவிடும் - இது sophistication இல்லாத பழங்குடியினரால் பாடப்படுகிறது என்று. இது ஹிந்தியில் “பீரா.. பீரா..” என்று தமிழில் பாடிய விஜய் பிரகாஷ், கீதி சகாத்தியா மற்றும் முஸ்தஃபா ஆகியோரால் பாடப்பட்டது.

5. காட்டுச்சிறுக்கி - இதை பாடியிருப்பது “ஷங்கர் மகாதேவனும், அனுராதா ஸ்ரீராமும்”. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஏ.ஆர் ரகுமான் இசையில் அனுராதா ஸ்ரீராம் பாடியிருக்கும் பாடல். அனுராதாவின் குரலில் கள் குடித்துவிட்டு போதையுடன் பாடுவதாக ஆரம்பிக்கிறது. உச்சஸ்தாயியில் வரும் சங்கர் மகாதேவனின் குரல் அனுராதாவின் போதையான குரலுக்கு முரட்டுத்தனமாக ஈடுகொஉக்கிறது. நடுவில் வரும் இசைக்கோர்வைகள் வித்தியாசமாக இருக்கிறது. எனக்கு இன்னும் இந்த பாடல் அவ்வளவாக பிடிபடவில்லை. அதனால் இது குறித்து இன்னும் விரிவாக எழுதமுடியவில்லை. இது ஏ.ஆர் ரகுமானின் “தாள்” ஹிந்திப்படத்தில் வந்த “ரம்தா ஜோகி..” பாடலை அவ்வப்போது நினைவுபடுத்துகிறது. ஹிந்தியில் ”ராஞ்சா ராஞ்சா..” என்று சுக்விந்தர் சிங்கும், இலா அருணும் பாடியுள்ளனர்.

6. கிடா கிடா அடுப்புல.. - ஏனோ இந்த பாடலின் மீது அவ்வளவாக நாட்டம் வரவில்லை. எனவே No comments.

AR Rahman and Maniratnam in

ஆரம்பத்தில் இந்த பாடல்களை கேட்டவுடன் ஒரு ஏமாற்றம் தான் மிஞ்சியது என்று சொன்னேன் அல்லவா? காரணம் மணிரத்னத்தின் படங்கள் எல்லாம் நகரத்தின் பின்புலத்தில் வரும் கதைகளாக இருப்பதால் அதன் இசையும் கொஞ்சம் நவீனமாக இருக்கும். அதே எதிர்பார்ப்பில் கேட்டதாலோ என்னவோ ஆரம்பத்தில் ராவணன் பாடல்கள் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. பின்பு யதேச்சையாக ராவணன் படத்தின் விளம்பரத்துக்காக உருவாக்கப்பட்ட வலைமனையை பார்த்தபோது அது முழுக்க முழுக்க காடுகளில் எடுக்கப்பட்ட படம் என்றும், கதாநாயகன் காட்டுவாசிகளின் தலைவன் என்றும், நாயகியை கடத்திக்கொண்டு போய் காட்டில் சிறைவைத்திருப்பதாக தெரிந்தபிறகு பாடல்களில் வரும் rustic எனப்படும் காட்டுப்புற குணத்தை உணரமுடிந்தபின் பாடல்களின் nuances எனப்படும் நுண்ணிய தன்மைகளை உணரமுடிந்தது.

{oshits} வாசிப்புகள் ராவணன் படப்பாடல்கள் குறித்த என்னுடைய இந்த observation-க்கு!

Related Articles