’பசங்க’ படத்துக்கப்புறம் நான் சமீபத்தில் மிகவும் ரசித்து பார்த்த தமிழ் படம் இந்த “தமிழ் படம்”. ஆங்கிலத்தில் பிரபலமாக உள்ள Spoof என்கிற ‘நக்கலடிக்கும்’ genre-ஐ தமிழுக்கு கொண்டு வந்துள்ள புதுமையான முயற்சி. இவ்வளவு காலமாக மக்களை ‘பொழுதுபோக்கு’ என்கிற பெயரில் எப்படியெல்லாம் ஏமாற்றி மூளையை மழுங்கடித்துக் கொண்டிருந்தது இந்த தமிழ் திரையுலகம் என்று நினைக்கும் போது மெலிதாக ஒரு கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இவர், அவர் என்று பாரபட்சமில்லாமல் மானாவாரிக்கு எல்லோரையும் ஓட்டி வாரியிருப்பது உண்மையிலேயே சுவாரசியம். இந்த படத்தை பார்த்துவிட்டு தமிழ் திரையுலகத்தினர் கோபத்தில் இருப்பதாகவும், அதை தயாரித்தது ‘பெரிய இடம்’ என்பதால் பொத்திக்கொண்டு இருப்பதாக படித்தபோது சிரிப்பு தான் வந்தது. தவறை சுட்டிக்காட்டினால் கோபம் வருவது இயற்கை தானே? இந்த படத்தில் வரும் காட்சிகளின் மூலப் படத்தை பார்த்த / அறிந்தவர்களுக்கு மட்டுமே இதை அனுபவிக்க முடியும் என்பதால் இந்த படத்தை என்னுடைய மற்ற மொழி நண்பர்களுக்கு காண்பிப்பதில் சிக்கல். Spoof-ஆக வரும் காட்சிகளை தமிழ் இயக்குநர்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டு அடுத்த படங்களில் ஹீரோயிஸ காட்சிகளாக புகுத்தி கழுத்தறுப்பார்களோ என்ற பயமும் வருகிறது.