அமரர் சுஜாதா எழுதிய இந்த புத்தகம் வாங்கி சரியாக 1 வருடம் 1 வாரம் கழித்து தான் படித்து முடிக்க நேர்ந்தது. கடந்த வருடம் அனன்யா அக்கா சென்னை வந்தபோது புத்தக கடைக்கு அழைத்து சென்றபோது அவருடைய பரிந்துரையில் பொறுக்கிய புத்தகம் இது. சுஜாதாவின் மூன்று குறுநாவல்களின் தொகுப்பு இது - (1) மேற்கே ஒரு குற்றம், (2) மீண்டும் ஒரு குற்றம் (3) மேலும் ஒரு குற்றம். வாங்கும்போதே அக்கா இதில் மூன்றாவது கதை அற்புதமாக இருக்கும், படித்துவிட்டு சொல் என்று சொன்னார். அதனால் இதை படிக்க ஆரம்பித்தபோது 3-1-2 என்ற வரிசையில் படித்தேன். தொடர்ந்து கணேஷ்-வசந்தை படித்த பாதிப்போ என்னவோ கடைசி (2) கதையை படிக்கும்போது ஆரம்பத்திலேயே முக்கிய முடிச்சை கண்டுபிடித்துவிட்டேன். என்னவோடா மகேஷ்வரா!!
இங்கே லண்டன் வரும்போது கொண்டு வந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. அலுவலகத்திற்கு வரும் / போகும் ரயில் பயணங்களில் இதை படித்து முடித்தேன். லண்டன் டியூப் பயணத்தில் மொபைல் ரேஞ்ச் கிட்டாது என்பதால் கிட்டத்தட்ட அனைத்து பயணிகளும் எதையாவது படித்தே பயண பொழுதை ஓட்டுகிறார்கள். அதனால் நானும் ஏதாவது புத்தகத்தை எடுத்து செல்வது வழக்கமாகிவிட்டது. அப்படி படித்து முடித்தது தான் இந்த “மூன்று குற்றங்கள்”. என்னால் முடிந்தவரை கதையின் திருப்பத்தை வெளியிடாமல், spoilers இல்லாமல் எனது அபிப்பிராயங்களை சொல்ல முயற்சிக்கிறேன். வரிசை - நான் படித்த வரிசை.
1. மேலும் ஒரு குற்றம்:- கணேஷ்-வசந்த் இருவரின் வழக்குகளில் மிக வித்தியாசமான ஒரு வழக்கு இது. கணேஷுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஓய்வு அவசியமாக, அந்த சமயத்தில் சில நாட்கள் தன்னோடு தங்கி தன்னை செஸ் விளையாட்டில் தோற்கடிக்குமாறு கூர்க் தோட்ட முதலாளி தாமோதரின் அழைப்பு வருகிறது. ஓய்வு தேடி போன இடத்தில் தாமோதரின் உண்மை முகம் வெளிப்பட கறுப்பு வெள்ளை கட்டங்கள் இல்லாமல் கணேஷ் - தாமோதர் இடையே ஒரு நிஜ சதுரங்க ஆட்டம் ஆரம்பமாகிறது. சுஜாதாவின் வழக்கமான நடையில், வழக்கமில்லாத களத்தில் மிக விறுவிறுப்பாக செல்லும் இந்த நாவலின் முடிவு நிச்சயம் சாமானிய வாசகர்களால் எதிர்பாராதது. கதைகள் எழுதும்போது சுஜாதா அந்த இடங்களுக்கே சென்று தங்கி எழுதுவாரோ என்று தோன்றும் அளவுக்கு மிக விஸ்தீரனமாக அதே சமயத்தில் economy of words எனப்படும் கதைக்கு அவசியமானவற்றை மட்டுமே எழுதி படிக்கும் நம்மை அந்த உலகத்திலேயே இருப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்தியிருக்கிறார்.
2. மேற்கே ஒரு குற்றம்:- இது ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட்டில் நடக்கும் குற்றத்தின் ஆய்வு. அதனால் தான் இது “மேற்கத்திய குற்றம்”. கணேஷ்-வசந்த்தை சந்திக்க வரும் தீபா, அவர்கள் தன்னை சந்திக்க சமயம் ஒதுக்காததால் ஏமாற்றம் அடைகிறாள். ஆனால் கணேஷ் - வசந்த்துக்கு சமயம் கிடைக்கும் போது தீபா உயிரோடு இல்லை. தன்னால் அவளுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தால் குற்ற உணர்ச்சி கொள்ளும் கணேஷ் அவளுக்கு அஞ்சலியாக இந்த வழக்கை எடுத்துக்கொள்ள, குற்ற முடிச்சுக்கள் ஜெர்மனி வரை நீண்டு ஒலிம்பிக் மைதானத்தில் முடிகிறது. இந்த கதை எந்த வித முகாந்திரமும் இல்லாமல் அத்துவானத்தில் ஆரம்பித்து கடைசி சில பக்கங்களில் தான் குற்றங்களின் பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. அதனால் கதை முழுவதும் வரும் ஒருவித uncertainity தான் இந்த நாவலின் பக்கங்களை வேகமாக நகர்த்த வைக்கிறது. பலவீனம் என்று பார்த்தால் குற்றம் எதற்காக என்பதை, அதுவும் கதை எழுதப்பட்ட 80-களில் சூழலை யோசித்தால், ரொம்ப யோசிக்காமலேயே யூகித்துவிடலாம்.
3. மீண்டும் ஒரு குற்றம்:- இதன் ஆரம்பமும் கிட்டத்தட்ட “மே.ஒ.கு” ஆரம்பம் போலவே இருக்கிறது. தன்னை சந்திக்க விரும்பும் சிவப்பிரகாசத்தை சந்திக்கும் முன்னரே அவர் கொல்லப்பட, கணேஷ் இந்த வழக்கில் முதல் சாட்சியாக இழுக்கப்படுகிறான். இந்த மூன்று நாவல்களிலேயே பலவீனமான நாவல் என்று பார்த்தால் அது இந்த “மீண்டும் ஒரு குற்றம்” தான். ஆரம்பத்திலேயே யூகித்துவிடக்கூடிய ஒரு முக்கிய சம்பவம், பிரேத பரிசோதனையை போலீஸ் கவனிக்காமலா விட்டிருப்பார்கள் என்ற கேள்வி, மற்றும் cliched crime motive என எல்லாமே சேர்ந்து இந்த கதையை பலவீனப்படுத்துகின்றன.
இந்த நாவல் தொகுப்பில் தான் நான் கணேஷ் மற்றும் வசந்த்தின் பாத்திர படைப்புகளை கொஞ்சம் ஆழமாக உள்வாங்க முடிந்தது. இவ்வளவு நாளாக பொத்தாம் பொதுவாக தான் ஒரு உருவத்தை அனுமானித்து வைத்திருந்தேன். ஆனால் இந்த முறை தான் மேலும் உணர முடிந்தது.
{medialibrary isbn=20100829TM}