ஆதி பயங்கர claustrophobic. அவனுக்கு வீட்டுக்குள்ளே இருப்பது சுத்தமாக பிடிக்காது. வெளியே போவது என்றால் அவனுக்கு இயற்கை சார்ந்த இடங்களை ரொம்ப ரசிப்பான். குறிப்பாக நீர்நிலைகள், காடு என இருக்கவேண்டும் அவனுக்கு. கூட வந்தவர்களை தூக்க சொல்லாமல் அவனே ஓடி ஆடி பயங்கரமாக enjoy செய்வான். எனக்கு அவனிடம் மிகவும் பிடித்த அம்சமே அது தான். ஆடு, மாடு, கோழி என எதை பார்த்தாலும் அப்படியே டேரா போட்டுவிடுவான். கடந்த முறை சேலம் வந்தபோது அவனை கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றபோது ஐயா செம ஆட்டம். ஒகேனக்கல்லிலும், மதுரை அழகர் மலையிலும் தலைவர் அடித்த லூட்டிகள் சுவாரசியம். நான் இயற்கையை ரசிப்பதைவிட அந்தந்த இடங்களில் அவன் முகத்தில் தென்படும் குதூகலத்தை ரசிப்பது இன்னும் இனிமை. அதனால் இந்த வாரம் சேலம் வந்தபோது அவனை எங்காவது இயற்கை சூழ்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று தோன்றியது. அப்போது என் அக்கா அவனை குரும்பப்பட்டியில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அழைத்துப்போ என்று suggest செய்தார். ஆனால் மிருகங்கள் அதிகமில்லை என்பதையும் சொன்னார். சரி! போய் தான் பார்ப்போமே என்று தோன்றியது.
ஏற்காடு போகும் வழியில் கோரிமேட்டில் இருந்து பிரிந்து செல்கிறது குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கான பாதை. அந்த பிரிவில் வைக்கப்பட்ட Board உயிரியல் பூங்காவுக்கு 4 கி.மீ தூரம் என்று சொன்னபோதும், நமது வண்டியின் odometer 6 கி.மீ காட்டுகிறது. மிக மோசமான பாதை... இதில் ”மிக”வுக்கு மேலாக ஏதாவது வார்த்தை இருந்தால் அதை கூட போட்டுக்கொள்ளலாம். அந்த அளவுக்கு மோசமான பாதை. தினசரிக்கு காலை 3 முறையும், மாலையில் 2 பஸ்களும் இந்த பாதையில் செல்கிறது. அதனால் அங்கே போக விரும்புபவர்கள் சொந்த வண்டியில் செல்வது உசிதம். வழியில் சில கிராமங்களை தாண்டி கடைசியில் உயிரியல் பூங்காவை சேரும் போது கொஞ்சம் நுரை தள்ளுகிறது தான். ஒரு வழியாக போய் சேர்ந்த பின்பு இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தது அவ்வளவு மோசமில்லை என்னும் அளவுக்கு பசுமையான மதில் சுவர் நம்மை வரவேற்கிறது.
இது மிகப்பெரிய பூங்காவெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட 32 ஏக்கர் பரப்பளவு தான். ஆனால் முடிந்த அளவுக்கு landscaping-ஐ இந்த குறுகிய இடத்துக்குள் கொண்டுவர முயற்சித்திருப்பது தெரிகிறது. ஒரு சிறிய ஏரி, அதில் ஒரு checkdam.. அதை ஒட்டி ஏறும் சிறிய மலைக்குன்று, இந்த ஏரியின் தண்ணீர் வழிந்து ஒரு ஓடையாக சென்று கிட்டத்தட்ட முடியும் இடத்தில் முதலை, பாம்பு ஆகிய மிருகங்கள் வசிக்கும் பகுதிகள் என அழகாகவே இருக்கிறது இதன் landscape. அதிகம் மிருகங்கள் இல்லை. சொல்லப்போனால் சின்ன circus-ல் கூட இதை விட பல மடங்கு அதிகம் விலங்குகள் இருக்கும். ஆனால் அவர்களை குறை கூறவும் ஒன்றுமில்லை. அதிகமாக மக்கள் வந்தால் தான் இந்த மிருகங்களின் எண்ணிக்கையை கூட்ட பணரீதியாகவும், உற்சாகரீதியாகவும் தோன்றும். சேலத்து மக்களுக்கே நிறைய பேருக்கு இந்த இடம் பற்றி தெரிவதில்லை. எனவே கிடைக்கும் சொற்ப வருமானமும், பயணிகள் எண்ணிக்கையும் வெறும் sustaining-க்கே போதுமானதாக உள்ளது. இனியும் அதிகம் மக்கள் வரும் பட்சத்தில் இந்த உயிரியல் பூங்கா மேலும் விரிவடையும் என்று நம்புவோமாக.
நுழைந்த உடனே நம்மை ஒரு மயில் கூட்டம் வரவேற்கிறது - அதில் சில வெள்ளை மயில்களும், இன்னும் சில சாதாரண மயில்களும் அடக்கம். அதை ஒட்டினாப்படி கொக்குகள் கூண்டு. வந்த களைப்பு தீர குழந்தைகள் விளையாட ஒரு குட்டி விளையாட்டு பூங்கா. அதை தாண்டி போனால் குரங்குகள் கூண்டு. பக்கத்தில்ருந்த ஓய்வு விடுதியில் ஒரு காதல் ஜோடி French kiss அடித்துக்கொண்டிருந்தது. அதை தாண்டி போனால் அழகாக ஏரியும் check dam-ம். அதை ஒட்டிய பகுதியில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு நகர்ந்தால் கடமான் இரண்டும், அதை தாண்டினால் புள்ளிமான் கூட்டமும் இருக்கிறது. அதை தாண்டிவிட்டால் அடுத்த குழந்தைகள் பூங்கா. சொல்லப்போனால் மிருகங்களிடம் இருக்கும் கூட்டத்தை விட இங்கே தான் கூட்டம் அதிகமாக இருக்கிறது. பாதி உயிரியல் பூங்கா இதோடு முடிந்துவிடுகிறது. ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேர்கிறோம்.
அடுத்த பாதி மயில் கூண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. ஒரு மூங்கில் காட்டுக்குள் அழகாக போடப்பட்ட சிமெண்ட் பாதை, அதில் 2-3 குட்டி பாலங்கள் என வசீகரமாக இருக்கிறது இந்த பகுதி. அதன் இறுதியில் தான் முதலை, பாம்பு, கிளிகள், முயல்கள் என ஒரு சிறிய பகுதி. முடித்துவிட்டு அந்த ஓடையில் புட்டுவை கால் நணைக்க வைத்துவிட்டு மீண்டும் வெளியே வந்தோம். அதிகபட்சம் 3 மணிநேரம் பிடித்தது. ஒருவேளை யாரையாவது “தள்ளிக்கொண்டு” வந்தால் இன்னும் அதிகநேரம் செலவழிக்கமுடியுமோ என்னவோ... திரும்ப வரும்போது எங்கள் வண்டிகாரர் நடுவில் ஓரிடத்தில் வேறு பாதையில் கொண்டுபோனார். அது கோரிமேடு தாண்டி ஏற்காடு ரோட்டின் பாதி வழியில் (ஷாரோன் மருத்துவமனை இங்கே என்ற Board இருக்கும் இடத்தில்) வந்து சேர்ந்தது. ஏற்காடு போய்விட்டு திரும்ப வரும் போது குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு வரவேண்டும் என்றால் இந்த வழியில் வந்துகொள்ளலாம். இந்த உயிரியல் பூங்காவில் எடுத்த சில போட்டோக்கள் உங்களுக்காக.
http://onlinegalatta.com/index.php/travel/83-leisure/587-2013-04-02-00-34-43#sigProId3222d84fb8