ஆமை புகுந்த வீடும், IT industry புகுந்த ஊரும் உருப்படாது என்பது பழமொழி. முன் பாதியை கேட்டிருக்கிறேன், ஆனால் இது என்ன இடைச்செருகல் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை. நான் IT துறையில் இருந்தாலும், பொதுவாக அது ஒரு ஊர் மீது ஏற்படுத்தும் (எதிர்மறையான) தாக்கத்தை வெறுப்பவன். சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது எனக்கு இந்த எண்ணம் இன்னும் வலுப்பட்டது. மதுரை என்றால் வீச்சருவாள், வன்முறை என்று தமிழ் சினிமாக்கள் ஏற்படுத்திய பிம்பத்திலிருந்து நிறைய வேறுபட்டிருப்பதாக தோன்றியது. மதுரையில் கிடைத்த அந்த vibe எனப்படும் அலைவரிசை பொருத்தம், அந்த ஊரின் தாளகதியில் (rhythm) ஒரு வித மண் வாசனையுடனான உயிர்ப்பும் இருப்பதாக உணர்வு. இத்தனைக்கும் இது எனக்கு இரண்டாவது பயணம்.
பொதுவாக (கல்யாணத்துக்கு முன்பு) தனியாக பயணம் செய்த அனுபவதை கொண்டு இப்போது இடங்களுக்கு போகலாம் என்று முன்னமே ஒரு idea இருப்பதால், குடும்பத்தினரை அலையவிடாமல் smooth-ஆக பயணம் செய்வதும் ஒரு இனிய அனுபவம் தான். அப்படி குடும்பத்தினரோடு சமீபத்தில் மதுரைக்கு கிளம்பினேன். கடந்த முறை பார்த்ததை விட இம்முறை புதிதாக எதுவும் பார்க்கவில்லை என்ற போதும், மீண்டும் பார்த்து ஞாபகப்படுத்திக்கொண்டது இனிமை.
இம்முறையும் அதே New College House-ல் தங்கினோம். அது heritage hotel என்பதால் பழைய காலத்து கட்டிடத்தை பெரிதாக மாற்றம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். அதுவே முதல் நல்ல point. அடுத்த நல்ல விஷயம் அதன் locality. மதுரை ரயிலடி, பெரியார் பேருந்து நிலையம், பெரிய கோவில் என எல்லாவற்றுக்கும் பொதுவான இடத்தில் அமையப்பெற்றிருப்பதால் commutation மிக வசதியாக இருந்தது. அடுத்த நல்ல விஷயம் என்றால், NCH ஒரு budget hotel என்ற போதும், குடும்பத்தோடு தங்கும் போது எந்தவித உறுத்தல்களும் இல்லாமல் decent-ஆக இருந்தது எனக்கு பிடித்திருந்தது.
இம்முறை சிறிய மாற்றமாக முதலில் திருப்பரங்குன்றத்துக்கு போனோம். நல்ல மொட்டை வெயிலில் சென்று மாட்டிக்கொண்டோம் என்பதை தவிர பெரிய குறை ஒன்றும் இல்லாத பயணம். மாலை நேரத்தில் தனியாக சென்றிருந்தால் ஒருவேளை பக்கத்திலிருந்த மலையில் ஏறியிருக்கலாம், ஆனால் அன்று அது நடக்கவில்லை. மேலே ஒரு சமண குகையும், மலையின் அடுத்த பக்கத்தில் ஒரு தர்க்காவும் இருப்பதாக அறிந்தேன். அடுத்த முறை வரும்போது பார்க்கவேண்டும்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் சிறப்பு என்னவென்றால் இதன் மூலஸ்தானம் / கர்ப்பகிருகம் மலையை குடைந்து உருவாக்கப்பட்டிருப்பது தான். காரைக்குடி அருகே திருமயத்தில் விஷ்ணு கோவில் கூட இதுபோல கட்டப்பெற்றது தான். இதிலும் அழகான தூண்கள், பாண்டியர்கள் style-ல், உயரமான வெளிப்புற மண்டபம் என கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. இங்கே உள்ள தூண்களில் நல்ல திடகாத்திரமான வீரர்கள் (தளபதிகள்???) சிலைகள் அதிகமாக இருந்தன. கூடவே அதிகம் குரங்குகள். புட்டு சிங் அந்த குரங்குகளை துரத்தி அவைகளோடு மல்லுக்கு நின்றுக்கொண்டிருந்ததை கொஞ்சம் பயத்தோடு பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தோம்.
எங்கள் Hotel-க்கு வந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டப்பிறகு, மாலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போவதா இல்லை திருமண நாயக்கர் மகாலுக்கு போவதா என்று ஒரு சின்ன குழப்பம். நான் கடந்த முறை வந்தபோது திருமலை நாயக்கர் மகாலில் ஒளியும் ஒலியும் காட்சி நிறுத்தப்பட்டு இருந்தது. அதனால் இம்முறை நிகழ்ச்சி இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகத்தின் காரணமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய்க்கொள்ளலாம் என்று முடிவு செய்து போனோம்.
நாங்கள் கிளம்பும்போது என்னுடைய கேமரா தொலைந்து விட்டது (என்று நினைத்துவிட்டோம்). அதனால் எந்தவித கடமையும் இல்லாமல் இயல்பாக கோவில் பிரகாரங்களையும், சிற்பங்களையும் சுற்றிப்பார்த்தோம். ஏற்கனவே இந்த கோவிலுக்கு வந்திருந்தபடியால், இம்முறை அந்த “முதல் பிரமிப்பு” நீங்கி, கோவிலின் அமைப்பு, சிற்சிறு நகாசுகள் ஆகியவற்றின் மீது கவனம் சென்றது. நாங்கள் சென்றபோது பிரகாரத்தில் அமர்ந்து ஒரு நண்பர் யாளி தூணை பார்த்து sketch செய்துக்கொண்டிருந்தார். அதை பார்த்ததும் எனது அடுத்த பயணத்தில் நானும் இதுபோல sketch book கொண்டு சென்று வரையவேண்டும் என்று தோன்றியது.
எனது inspiration ஆன கேரள ஓவியத்தை பார்த்தபோது ரத்தக்கண்ணீர் வராத குறை தான். வரைய ஆரம்பித்து 10 வருடங்கள் ஆன நிலையில், இன்னும் 10% கூட முடிக்கப்படாமலும், ஏற்கனவே வரைந்தது எல்லாம் மங்க / அழிய ஆரம்பித்துவிட்டது. இவ்வளவு பிரசித்தி வாய்ந்த கோவிலில் நல்ல ஓவியங்கள் வரைய ஆள் கிடைக்கவில்லையா? புராதின தமிழ் கோவிலில் வரைய ஆரம்பித்திருப்பதோ கேரள ஓவியம். ஆனால் அதை கூட முழுதாக முடிக்காமல் இழுத்தடிப்பது அதைவிட கேவலம். கேரளாவில் இதுபோல ஒரு ஓவியர் இழுத்தடித்தால் நடந்திருப்பதே வேறு. ஆனால் இது தமிழ்நாடாச்சே? பழங்கால ஓவியத்தின் மீது வெள்ளையடித்த மேதாவிகள் அல்லவா இந்த மதுரை கோவில் அதிகாரிகள். இவர்களிடம் என்னத்தை எதிர்பார்க்கமுடியும்?
http://onlinegalatta.com/index.php/travel/83-leisure/553-2013-04-02-01-01-52#sigProIdae22d6ffc9
ஆயிரம் கால் மண்டபத்தில் அமையப்பெற்ற அருங்காட்சியகத்தில் கடந்த முறை பார்த்து ஆனால் மறந்து போன சில ‘யானை தந்த சிற்பங்கள்’ மீண்டும் பார்க்கையில் ஒரு பிரமிப்பு. அப்படி சிறிய தந்தத்தில் நுணுக்கமாக இழைக்கப்பட்ட கலவி குறித்த சிற்பங்களும், சீன கோபுரத்தில் மீனாட்சி அம்மன் சிற்பம் ஆகியவை இந்த பயணத்தின் Take Home நினைவுகள். போதாக்குறைக்கு எங்கள் புட்டுசிங் வேறு கோவில் முழுவது ஓடி, ஓடி எங்களை அவன் பின்னாலே மூச்சிரைக்க ஓடவைத்துக்கொண்டிருந்தான்.
எனது புதிய chat நண்பர் லட்சுமணன் இரவு நேரத்து பள்ளியறை பூஜையை கட்டாயம் பார்க்குமாறு பரிந்துரைத்திருந்தார். எனவே கடைசி பூஜை எல்லாம் பார்த்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தபோது இரவு மணி 9:00. எனது மற்றொரு பழைய chat நண்பரான சுந்தர் என்னை முதல் முறையாக பார்க்க எங்கள் ஹோட்டலுக்கு வந்திருந்தார். குடும்பத்தினரை அறையில் settle செய்துவிட்டு ஊர் சுற்றக்கிளம்பினோம். நடுராத்திரியில் ஊர் சுற்றுவது அவ்வளவு உசிதமல்ல என்று முடிவு செய்து, ஏதாவது மொக்கை படத்து தியேட்டரில் உட்கார்ந்து அரட்டை அடிப்பது என்று முடிவு செய்து தியேட்டர் தியேட்டராக் சுற்றி கடைசியில் “மதி” தியேட்டரில் “குள்ள நரிக்கூட்டம்” போனோம்.
“குள்ள நருக்கூட்டம்” படமும் மதுரையில் அமைக்கப்பட்ட கதை என்பதால், படத்தில் பல காட்சிகளை மதுரையின் முக்கிய இடங்களில் படமாக்கியிருந்தார்கள். சுந்தரும் எது எந்த இடம், அங்கு எப்படி போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். கிட்டத்தட்ட மதுரையின் travelogue போல அமைந்திருந்தது அந்த படம். மதுரையில் சுற்றுலா வந்து, அந்த ஊரைப் பற்றிய படத்தை பார்த்தது வித்தியாசமான அனுபவம். அந்த வகையில் “குள்ள நரிக்கூட்டம்” என் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத படமாக மாறிவிட்டது.
அடுத்த நாள் காலை நிதானமாக கிளம்பி அழகர் கோவிலுக்கு சென்றோம். கடந்த முறை அழகர்கோவிலுக்கு சென்று விவரம் அறியாமலேயே பழமுதிர்சோலைக்கு நடந்து சென்றது ஞாபகம் வந்தது. இம்முறை நாங்கள் அறிந்தே அந்த காட்டுப்பாதையில் நடந்து சென்றோம். புட்டுவின் இரண்டாவது காட்டுப்பயணம். என் அம்மா கூட தளர்ந்துவிட்டார்கள் ஆனால் இந்த குழந்தை பாதி தூரத்தை நடந்தே வந்து எங்கள் எல்லாரையும் மகிழ்வித்துக்கொண்டிருந்தான்.
கொஞ்சம் ஓய்வுக்கு பின்பு கிளம்பி மாலை நாயக்கர் மகாலுக்கு வந்தோம். இம்முறை ஒளி - ஒலி காட்சிகள் மீண்டும் ஆரம்பித்துவிட்டதாக அறிந்தோம். ஆனால் எங்கள் சமயத்தோடு ஒத்துப்போகவில்லை. ஆங்கில காட்சி மாலை 6:45 மணி முதல் 7:45 வரையும், தமிழ் காட்சி 8:30 முதல் 9:30 வரை போடுகிறார்களாம். எங்கள் ரயிலோ இரவு 7:20 மணிக்கு. அதனால் அடுத்தமுறை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம்.
சுந்தருடன் பேசியதில் நான் பார்க்கவேண்டிய இடங்கள் சிலவற்றை suggest செய்தார். ஆனை மலை, திருப்பரங்குன்றத்து மலை என இடங்கள் தனியாக வந்தால் மட்டுமே போக முடியும் என்று தோன்றியது. அதனால் தனியாக ஒரு முறை மதுரைக்கு (மழை ஆரம்பித்த பிறகு) வரவேண்டும் என்று முடிவு செய்து மதுரையிடம் பிரியாவிடை வாங்கி கிளம்பினோம்.
{oshits} வாசகர்கள் எனது மதுரை பயணத்தை குறித்த இந்த பதிவை படித்துள்ளனர்!!!