ஒவ்வொரு வருஷமும் ஜனவரியிலே இந்த வருஷம் என்ன பண்ணனும்னு நினைக்கும்போது, கட்டாயம் 120 பதிவுகள் (மாசத்துக்கு பத்து வீதம்) போடனும்னு நினைச்சுப்பேன் ஆனா வருஷா வருஷம் பதிவுகள் எண்ணிக்கை அபாயகரமாக குறைஞ்சுகிட்டே போகுது. நான் பதிவுகள் எழுத ஆரம்பித்தபோது கூட ஓரளவுக்கு பிஸியா தான் இருந்தேன். ஆனால் ஆஃபீஸ் முடிச்சு வெளியே வந்ததும் வேலையை பத்தி சுத்தமா மறந்துடுவேன். ஆனா கடந்த ஒரு வருஷமா வீட்டுக்கு வந்தப்புறம் தான் நிறைய SAP பத்தி நினைக்கிறேன். இந்த project-ல வந்ததுல இருந்து மத்த விஷயங்கள்ல சுத்தமா ஈடுபாடு குறைஞ்சு போச்சு. புதுசா புத்தகம் படிச்சு ரொம்ப நாள் ஆயிடுச்சு. கடைசியா எப்போ தூரிகை (அது தாங்க paint brush) பிடிச்சேன்னு ஞாபகம் இல்லை. ஒருவழியா போன வாரம் Go-Live ஆனதும் கொஞ்சம் வேலை குறைஞ்சிரும்னு நினைச்சா இன்னும் குறைஞ்ச பாடு இல்லை. அடுத்த வாரம் சென்னை வந்து settle ஆனப்புறம் திரும்ப ஓவிய வகுப்புகளுக்கு போகனும்னு முடிவு செஞ்சிருக்கேன். இப்போ தான் மெல்ல மெல்ல மத்த விஷயங்கள்ல் மனசு போகுது. நம்ம வலைமனையை ரொம்ப நாளா கண்டுக்கவே இல்லையேன்னு நினைச்சு அதை புது version-க்கு update பண்ணினேன். இந்த look நல்லா இருக்கா இல்லையான்னு நீங்க தான் சொல்லனும்.
தமிழ் புத்தாண்டு சித்திரையில் பிறக்கனுமா இல்லை தையிலே பிறக்கனுமான்னு மஞ்சள் துண்டு தாத்தாவும், மெரூன் அம்மாவும் அறிக்கை போர் நடத்திக்கிறத பார்த்தா "நாட்டுல சுபிட்சம் பொங்கறதால் கவலைப்பட வேற விஷயமே இல்லைன்னு இதை கையிலே எடுத்திருக்கீங்களா?"ந்னு கேட்க தோணுது. பல்லாயிரக்கணக்கான வருஷங்களா சித்திரையில் இருந்து வருஷத்தை ஆரம்பிக்கிற வழக்கம் இருக்கும்போது இப்போ எதுக்கு அதை எடுத்து அரசியல் பண்ணனும்னு தெரியலை? 1971-ல கி.ஆ.பெ விஸ்வனாதம் தலைமையிலே தமிழறிஞர்களால பரிந்துரைக்கப்பட்டதுன்னு சொல்ற தாத்தா அதை ஏன் அப்போ செய்யாம கடந்த ஆட்சியில் கடைசி வருஷத்துல செய்யனும்? குடும்ப பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பனும், வரலாறு தன்னை பேசனும் என்ற நோக்கம் பச்சை குழந்தைக்கு கூட தெரியுதே. தாத்தா மாத்திட்டாருங்குற ஒரே காரணத்தால அது அம்மா கண்ணுல ஆணித்தரமா பதிஞ்சு ஆட்சி மாறின உடனே டப்புன்னு மாத்தியாச்சு. சித்திரையா, தையா-ங்குறத அதை கொண்டாடுற மக்கள் பாத்துக்கட்டும். இவங்க ஒரு ஆணியும் புடுங்காம இருந்தாலே போதும்.
இந்த மெரூன் அம்மாவும் லேசுபட்டது இல்லை. ஜோதிட காரணங்களுக்காக தன்னோட "தோழி"யை தள்ளிவைக்க போட்ட நாடகம் என்ன? அதை மக்கள் நம்பனும்னு எடுத்த "அதிரடி நடவடிக்கைகள்" என்ன? "பிரிவு காலம்" முடிஞ்சதும் "கண்கள் பனித்தன, இதயங்கள் இணைந்தன"ந்னு வசனம் மட்டும் தான் பேசலை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறலைங்குற மாதிரி தமிழ்நாட்டுல "குறுநில" மன்னர்கள் ஆட்சி மீண்டும் தலைதூக்குவதையும், கேவலமான காங்கிரஸ் ஆட்சியையும் பார்த்த பின்பு எனக்கு வெறுப்பு தான் வருகிறது. யார் சொன்னது இந்தியாவில் குடியரசு ஆட்சி நடக்கிறது என்று? கட்சிகளிலும், ஆட்சிகளிலும் வாரிசு இளவரசர்கள் தானே அடுத்து முடிசூடுகிறார்கள். கட்சி பாகுபாடு இல்லாமல் தொண்டர்கள் எல்லாம் சும்மா விரல் சூப்பிக்கொண்டு வேடிக்கை பார்ப்பது தான் பொழப்பே. அவங்களுக்கு புத்தி வந்துவிடக்கூடாது என்று கவனமாக இருக்கும் தலைமைகள். அவங்க (முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள், மத்திய அரசாங்கத்தின் அதிகார மையங்கள்)அவங்களோட குடும்பத்துக்காக நாட்டை அடகு வைத்து சுரண்டும்போது, வரிகொடுப்பவன் என்ற முறையில் என் காசு அவர்களால் சுரண்டப்படும்போது வயிறு எரிகிறது. சொந்த நாட்டில் கையாலாகாமல் இருப்பதற்கு பதில் அடுத்த நாட்டில் இரண்டாம் தர குடிமகனாக வாழ்வதே நல்லதாக படுகிறது. நான் "இந்தியன்" என்பதற்கு முதலில் ஒரு சராசரி "மனிதன்". அதனால் எனக்கு தேசபக்திக்கு முன்னதாக சுயமரியாதை தான் பெரிதாக படுகிறது. "Brain drain", "உண்ட வீட்டுக்கு இரண்டகம்" என்றெல்லாம் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை... இந்தியாவிலிருந்து வெளியேறுவதே என் சுயமரியாதைக்கும், value system-க்கு நல்லது என்று படுகிறது. இல்லையென்றால் நான் ஆதியை "இந்தியாவில் சட்டத்தை மதிப்பவன் முட்டாள், ஊழல் செய்பவனே இந்திய சமுதாயத்தில் மரியாதைக்குரியவன்" என்று சொல்லி வளர்க்கவேண்டிய கேவலத்துக்கு ஆளாகவேண்டியிருக்கும்.
வரி, வருமானம்னு பேசினதால இது ஞாபகத்துக்கு வருது... ஒவ்வொரு தடவை வேலை மாறும்போதும் Bank Balance புதுசாகவே ஆரம்பிக்கிறது. நான் Finance management-ல் எவ்வளவு மோசமாக இருக்கிறேன் என்று என் மீதே எனக்கு எரிச்சலாக வருகிறது. கடந்த முறை வரிவிலக்குக்காக Mutual Fund-ல் போட்டபோது அம்மா 'என்னை கேட்காமல் ஏன் இப்படி முதலீடு செய்தாய்?' என்று திட்டினார். அப்போது தங்கம் கிராம் ரூ. 950/-க்கு விற்றது. மூன்று வருடங்கள் கழித்தும் MF-ல் இருந்து பணத்தை எடுத்தபோது வெறும் 7% சேர்த்து வந்தது. அந்த சமயம் தங்கம் விலை ரூ. 2000/-த்தை தொட்டிருந்தது. பேசாமல் 30% வரி செலுத்தி தங்கம் வாங்கி போட்டிருந்தாலும் எனக்கு லாபமாக தான் இருந்திருக்கும். எங்கள் ஆதி குட்டி பெண் குழந்தையாக இல்லாததால் தங்கம் சேர்த்தும் பெரிய பிரயோஜனமில்லை. அதனால் Paper Gold பற்றி யாராவது சொன்னீர்கள் என்றால் எனக்கு உபயோகமாக இருக்கும். பயனுள்ள link-ஐ பின்னூட்டத்தில் போட்டீர்கள் என்றால் அது என்னை போன்ற மற்றவர்களுக்கும் உபயோகரமாக இருக்கும்.
ஒவ்வொரு தடவையும் படிச்சாலும் படிக்கலைன்னாலும் என்னோட Amazon Kindle-ஐ போகிற இடத்துக்கெல்லாம் தூக்கிட்டு போயிட்டு இருந்த நான் இந்த தடவை வீட்டிலேயே விட்டுட்டு வந்தப்புறம் தான் "கொண்டு வந்திருந்தா ஏதாவது புத்தகம் படிச்சிருக்கலாமே"ந்னு தோணுது. இம்முறை ஹோட்டல் ரூமிலே internet connection (கிட்டத்தட்ட) இல்லாமல் போய்விட்டதால் இப்படி தோன்றியிருக்கலாம். மனித மனம் எப்பொழுதும் இல்லாததையே நினைத்து ஏங்கும்ங்குறதுக்கு நானே சிறந்த உதாரணம். அது மட்டுமல்ல கடந்த இருவருடங்களாக Support project-ல இருந்தப்போ implementation project வேணும்னு மனசு கிடந்து தவிச்சுது. இப்போ project விஷயமா வெளியூர் வந்ததும் ஆதி போன்ல "நானும் மஹி அப்பாட்ட.." என்று சொல்லும்போது திரும்ப support project-க்கு போய்விடலாமான்னு தோணுது. ஒருவ்கையிலே என் வாழ்க்கையிலே எல்லாத்தையுமே மத்தவங்க அனுபவங்கள்ல இருந்து எடுத்துக்காம நான் Trial & error முறையிலே தான் கத்துக்கிட்டேன். பசங்க எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி onsite சுத்திமுடிச்சுட்டு கல்யாணத்துக்கு அப்புறம் வீட்டோட settle ஆவாங்க. ஆனா நான் அதுக்கு தலைகீழா கல்யாணத்துக்கு அப்புறம் தான் வேலைக்கும் ஆதிகு்ட்டிக்கும் நடுவிலே திரிசங்கு மாதிரி அல்லாடுறேன்.
இந்த தடவை ரூமிலே internet-டும் பழிவாங்கி விட்டதால் அப்பப்போ ஆபீஸ்ல இருந்து விஜய் டி.வியின் "அது இது எது" நிகழ்ச்சியின் சில பகுதிகள் மற்றும் வித்யா பாலனின் பேட்டிகள் என பதிவிறக்கம் செய்து பார்ப்பதிலேயே பொழுது போகிறது. இணையம் இல்லையென்றால் என் வாழ்க்கை எவ்வளவு பரிதாபகரமாக மாறிவிடுகிறது என்பதை இந்த பயணத்தில் தான் கண்டுகொண்டேன். வித்யாவின் பேட்டிகளை பார்க்கும்போது இந்த பெண்ணின் (ஆங்கில மற்றும் ஹிந்தி) மொழிவளத்தையும், தெளிவான பார்வையையும், தனது குறைகளையும், எல்லைகளையும் ஒத்துக்கொள்ளும் தைரியத்தையும், செய்யும் வேலையை ரசித்து செய்யும் பாங்கையும் பார்த்து பிரமிப்பு தான் தோன்றுகிறது. நானும் ஒருநாள் யோசித்தேன் - நாம் இந்த பெண்ணை இப்படி ரசிக்கிறோமே, புகழ்கிறோமே, ஆனால் இவரிடம் இருந்து ஏதாவது கற்றுக்கொண்டோமா? ஏனோ நான் பெறாத வெற்றிகளை, நிறைவேறாத ஆசைகளை இந்த பெண்ணின் வெற்றி, புகழில் பார்க்கும்போது எனக்கு ஒரு ஆசுவாசம். பின்னர் யோசித்தேன் - நாமும் இவரைப்போல வேலை செய்யும்போது நமது வேலையை மேலாளர் புகழ்கிறாரா, இல்லை appraisal-ல் பிரதிபலிக்குமா என்று கணக்கிடாமல், அதை 200% ரசித்து செய்தால் என்ன? அதை implement செய்தபின்பு (ஒருவேளை இது தான் நான் முதல் பத்தியில் இப்போதெல்லாம் நிறைய SAP பற்றி நினைக்கிறேன் என்று சொன்னதற்கு காரணமோ?) இப்போதெல்லாம் எனக்கு வேலை செய்யும்போது அவ்வளவு pressure தெரிவதில்லை, மாறாக ஒரு exhiliaration தான் தோன்றுகிறது. என் பிரச்சினைகள் எல்லாம் Status update கேட்டு, வேலை இல்லையென்றாலும் அலுவலகத்தில் இருக்க சொல்லி, தொந்தரவு செய்யும் project manager கிட்டே தான்.
{flippingbook_book 2}