சில சமயங்களில் ஏதோ ஒரு பொருள் நம்மை வேறு ஏதோ ஒரு பழைய ஞாபகங்களை தூண்டிவிடும். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டி.வி-யில் ”காதல் சொல்ல வந்தேன்” என்ற படம் போட்டிருந்தார்கள். ஆனால் 2000 - 2001 வருடத்தில் “காதல் சொல்ல வந்தேன்” என்ற பெயரில் ஒரு படம் தயாராகியிருந்தது. கார்த்திக் - இஷா கோப்பிகர் நடித்திருந்த அந்த படம் வெளிவரவே இல்லை. ஆனால் அதில் இரண்டு அற்புதமான பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஹரிஹரன் பாடிய “செம்பருத்தி பூவே..” மற்றும் “சொல்ல வந்தேன்... காதல் சொல்ல வந்தேன்” ஆகிய இரண்டு பாடல்களும் மனதை வருடுவன. அந்த பாடல்களை முதல் முதலாக கேட்டது ஒரு அழகான அனுபவம் ('காதல் சொல்ல வந்தேன்’ வெளிவராததால் அந்த பாடல் பின்னர் சுந்தர்.சி - அஞ்சலி நடித்த “ஆயுதம் செய்வோம்” படத்தில் சிற்சில மாற்றங்களுடன் “இன்னும் ஒரு வானம்” என்று வேறு வரிகளில் உபயோகப்படுத்தப்பட்டது).
அப்போது நான் கோவையில் MBA படித்துக்கொண்டிருந்தேன். அதே சமயத்தில் எனது Engg. college நண்பன் ரமேஷும் கோவையில் வேலைக்கு சேர்ந்திருந்தான். அவனுக்கு சொற்ப சம்பளம், எனக்கு சொற்ப மாதாந்திர செலவாணி. எனினும் எங்களுக்கு வெளியூர் போகவேண்டும் என்று ஆசையாக இருக்கும். அதனால் கோவையை சுற்றி எந்தெந்த இடங்களெல்லாம் அரசு போக்குவரத்து பேருந்துகள் மூலம் இணைக்கப்பெற்றுள்ளதோ அங்கே சென்று அந்த ஊர்களை ஆராய்வது வழக்கம். அப்படி ஒரு நாள் நாங்கள் ஏறிய பஸ் - 11A (தடாகம்). அங்கே இருந்து ஆணைகட்டி பஸ்ஸில் ஏறினோம். அது மலைப்பகுதி என்று எங்களுக்கு பேருந்து செல்லும் வரை தெரியாது. ஆணைகட்டி பஸ் கடைசியாக நின்ற இடத்தில் இருந்தவர்களிடம் ”இங்கே பார்க்க என்ன இடம் இருக்கு?” என்று கேட்டோம். அவர்கள் ஏதாவது ஜீப் பிடித்து ஷோரணூர் போனால் அங்கே மிளகு தோட்டங்கள், சில நீர்வீழ்ச்சிகள் எல்லாம் இருக்கிறது. ஆனால் அங்கே சுற்றுலா பயணிகள் எல்லாம் வருவதில்லை என்றார்கள்.
சரி என்று ஒரு ஜீப்பில் ஏறினோம். “மைனா”, “பிராமரம் (மலையாளம்)” படங்களில் வருவது போன்ற கரடுமுரடான மலைப்பாதையில் ஒரு த்ரில்லான ஜீப் பயணம். அந்த ஜீப்பில் தான் நான் முதல் முதலில் “செம்பருத்தி பூவே” மற்றும் “காதல் சொல்ல வந்தேன்” ஆகிய பாடல்களை கேட்டேன். முகத்தில் சில்லென்று முத்தமிட்டு செல்லும் மூடுபனி, சுற்றிலும் நிறைந்திருந்த பசுமை, இனிமையான இசை என மிகப்பிரமாதமாக எல்லா அம்சங்களும் பொருந்தி அந்த மலைப்பகுதி பயணம் காலத்துக்கு நினைவில் நிற்கும்படியாக அமைந்துவிட்டது. அதனால் அந்த பாடல்களை எப்போது கேட்டாலும் எனக்கு எப்போதும் அந்த பயணமும் ரமேஷும் நினைவுக்கு வருவார்கள். அந்த ஜீப் ஒரு எஸ்டேட்டின் வாசலில் எங்களை உதிர்த்துவிட்டு போனது. அங்கே கூலி வேலைக்கு போய்க்கொண்டிருந்த இளைஞர் ”அப்படி போங்க” என்று கை காட்டிவிட்டு செடிகளிடையே சரேசென்று மறைந்து போனார். நீரின் சலசலப்பு கேட்டு போனபோது ஒரு காட்டாற்றில் வந்து நின்றோம். ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாத்தாவும், சில ஆடுகளும் நாங்களும் மட்டும் தான் அந்த பனி மூட்டத்தில். ஜிலீரென்ற அனுபவம். அந்த தண்ணீரிலேயே நடந்து போய் பார்த்தோம். ஒரு காட்டு நீர்வீழ்ச்சியின் முகப்பில் நாங்கள் நின்றுக்கொண்டிருப்பதை கண்டோம். எங்கள் பிரமிப்பை நீங்களே புரிந்துக்கொள்ளலாம்.
அந்த பயணத்துக்கு ரூ. 30/- செலவானதாக ஞாபகம். ஆனால் ஆயிரங்கள் செலவு செய்தாலும் கிடைக்காத சந்தோஷ அனுபவம். எங்களிடம் அப்போது கேமிரா இல்லை. அதனால் அந்த நினைவுகளை செல்லுலாயிட்டில் பதிவு செய்யமுடியவில்லை. ஆயினும் என்ன? எங்கள் மனதில் அந்த பயணத்தின் ஒவ்வொரு அணுவும் ஆழமாக, அழகாக பதிந்துள்ளதே! அதற்கு பிறகு ஆணைகட்டிக்கு போகவேண்டும் என்று தோன்றும். ஆனால் மீண்டும் சென்றால் அதே பழைய சந்தோஷ அனுபவத்தை over write செய்யவேண்டியிருக்கும் என்ற காரணத்தால் நான் முயற்சிக்கவே இல்லை.
இப்போது ரமேஷ் பஞ்சாப் சண்டிகரில் மனைவி குழந்தையோடு செட்டில் ஆகிவிட்டான். சன் டி.வியில் “காதல் சொல்ல வந்தேன்” --> (வெளிவராத 2000-ம் வருட ”காதல் சொல்ல வந்தேன்” செம்பருத்தி பூவே) --> ஆணைகட்டி பயணம் --> ரமேஷ் என என்னுடைய thought process வேலை செய்து ரமேஷிடம் பேசி கொஞ்ச நாள் ஆகியிருந்தது என்று நினைவுபடுத்தியது. அந்த வார செவ்வாய் கிழமை மீண்டும் ரமேஷிடம் பேசினேன் :-)
நான் மிகவும் சிலாகித்த அந்த பாடலை இங்கே கேட்கலாம் -
{oshits} வாசகர்கள் என்னுடைய இந்த பின்னோக்கிய பயண நினைவுகளை படித்துள்ளனர்!!!