எனது முந்தைய பதிவை படித்துவிட்டு ஒரு நண்பர் "வாழ்க்கையில் பணத்தை தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை" என்று நினைப்பவனாக நான் மாறிவிட்டேன் என்று சொன்னார். எனக்கு மனதுக்குள்ளே சிரிப்பு சிரிப்பாக வந்தது. வாழ்க்கையில் பொருளாதாரம் மிக முக்கியம். இதை யாரும் மறுக்கமுடியாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைகள். இந்த ஓட்டங்களும் பிரிவுகளும், துயரங்களும் அந்த தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள தான். இந்த பணம் குறித்த விவாதம் கொஞ்சம் சுவாரசியமாகவே இருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே "வாழ்க்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் பணம் என்பது வெறும் காகித மூட்டைகள் தான்" என்று சொல்லிவிட்டார் என்றார் அந்த நண்பர். அவர் அதை சொல்வதற்கும் ஒரு பணக்கார நிலை வரவேண்டும். நான் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்றேன். அவர் இப்போது என்ன படங்களில் இலவசத்துக்கா நடித்து கொடுக்கிறார்? இல்லை நலிந்த தயாரிப்பளர்களுக்கு குறைந்த செலவில் நடித்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறாரா? இல்லையே? இவ்வளவு சம்பாதித்தும் இந்த மழைக்கு நிவாரணத்துக்கு அவர் கொடுத்தது வெறும் பத்து லட்ச ரூபாய் தானே?
Onsite-ல் பணம் சேர்க்க குடும்பத்தை விட்டு பிரிந்து கஷ்டப்படுபவர்கள் பேராசைக்காரர்கள் என்பது அவர் வாதம். பெற்றவர்களை ஊரில் விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் மனிதர்களே அல்ல என்பது அவரது அபிப்பிராயம். கூழோ கஞ்சியோ, கஷ்டமோ நஷ்டமோ.. குடும்பத்தோடு இருப்பது வாழ்வது தான் கலாச்சாரமாம். குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கொடுமையான விஷயம் தான். அது போய் வந்தவர்களுக்கு கட்டாயம் புரியும். ஆனால் அந்த காலத்தை பொறுத்துக்கொண்டால் பின்னால் கஷ்டங்கள் கொஞ்சம் குறைவே. ஆனால் அந்த சொற்ப பிரிவு காலத்தை பொறுக்கமாட்டேன் என்றால் காலத்துக்கும் குடும்பத்தையும் சேர்த்து கஷ்டப்படுத்திக்கொண்டு இருக்கவேண்டும். அது கிட்டத்தட்ட கசப்பு மருந்தை கொஞ்ச காலத்துக்கு குடிக்க மறுத்து காலத்துக்கும் நோயோடு கஷ்டப்படுவதற்கு சமம்.
அப்படி கஷ்டப்பட்டு பணம் சேர்க்கவேண்டும் என்றால் அந்த அளவுக்கு ஏன் கடனை இழுத்துக்கொள்ள வேண்டும்? அப்படி என்ன கடன் என்று கேட்டபோது பெரும்பாலானவர்கள் வீட்டுக்கடன் என்று சொன்னோம். அவர் கூற்றுப்படி வருமானத்துக்கு மீறி கடன் வாங்கி வீடு வாங்குவது தவறு. வீட்டுக்கடனை வங்கிகள் தான் 20 வருடங்களுக்கு தருகிறார்களே என்றார். வாங்கிய கடனை இருபது வருடங்கள் கட்டி முடிக்கும்போது வாங்கிய தொகையை போல 2.5 மடங்கு கூடுதல் கொடுத்திருப்பது மட்டுமல்லாமல், நமக்கு வயதாகி தளர்ந்து ஓய்ந்திருப்போம். ஃப்ளாட்டும் பழையதாக, மதிப்பு இழந்திருக்கும். கிட்டத்தட்ட வங்கிக்கு நாம் வாடகை கட்டிக்கொண்டிருந்திருக்கிறோம்.
அவர் விவாதங்கள் விதண்டாவாதமாக போய்க்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் நான் வெறுத்துப்போய் "எப்போது நான் ஒரு நகை கடைக்கு போய் என் மனைவியை நான் நேசிக்கிறேன். அவளை சந்தோஷமாக்க ஒரு வைர அட்டிகை வேண்டும் ஆனால் காசில்லை. நீங்கள் விலை குறைவாக தவணையில் கொடுத்தால் வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்ல, அதற்கு கடைக்காரரும் பணமா முக்கியம்? வாழ்க்கையில் சந்தோஷம் தான் முக்கியம். இந்தா எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறாறோ அன்று நான் Onsite-க்கு முயற்சிப்பதை கைவிட்டுவிடுகிறேன்." என்றேன். அதற்கு அந்த நண்பர் "இப்போ உங்கள் உதாரணம் படாடோபமாக உள்ளது" என்றார்.
அதற்கு "எப்போது என் மகன் படிக்கும் பள்ளியில் குழந்தைகள் படிப்பும் எதிர்காலமும் தான் முக்கியம், அதனால் கட்டணம் வேண்டாம் என்று சொல்கிறார்களோ, அது போல என்று கல்லூரிகள் கட்டணமும் நன்கொடையும் வசூலிக்காமல் இலவசமாக சொல்லித்தருகிறார்களோ அன்று நான் இந்த பண தேடலை நிறுத்திக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு எழுந்துவிட்டேன்.
வாழ்க்கையில் பணம் மட்டும் முக்கியமில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் பணமே முக்கியமில்லை என்பதை யாருமே ஒத்துக்கொள்ளமாட்டார்கள். ஒவ்வொருவருமே பணம் சம்பாதிப்பதை முக்கிய கடமையாக வைத்திருக்கும்போது அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதை ஏன் கீழ்த்தரமாக நினைக்கவேண்டும். இது ஒரு இரட்டைவேடம் தானே?