சென்னையிலும் தமிழகத்திலும் வரலாறு காணாத மழை. சென்னைவாசிகளுக்கு தங்களை பற்றி ஒரு செருக்கு இருக்கும். அந்த செருக்கால் அவர்களது attitude மற்றும் behaviours கொஞ்சம் rudeஆக இருக்கும். அந்த செருக்கை இந்த மழை அப்படியே கரைத்து ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடந்த நன்னடத்தையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த மழைச்சேதத்திலும் சந்தோஷப்படுத்தக் கூடிய விஷயம் இது என்று நம்மை நாமே ஆறுதல் சொல்லிக்கொள்ளலாம்.
இன்னுமொரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த இளைய தலைமுறையை பற்றிய பார்வை நல்லபடியாக மாறியுள்ளது. இளைஞர்கள் என்றால் எப்போதும் மொபைல் போனை பஸ்ஸிலும், தியேட்டர் வாசலிலும், காஃபி ஷாப்பிலும் நோண்டிக்கொண்டிருக்கும் ஜந்துக்கள் என்று நொந்துக்கொண்டிருந்த மூத்த தலைமுறையை, அதே மொபைல் போன் மூலம் சமூக வலைத்தளங்களை நல்லபடியாக உபயோகித்து நிவாரண உதவிகளை திறம்பட செய்து, பலே போட வைத்துள்ளது இந்த மழை.
இந்த மழை அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் அயோக்கியத்தனத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. சென்னையின் நீர்நிலைகளை எல்லாம் ஆக்கிரமித்து அதன் மீது வீடுகளும், வணிக நிலையங்களையும், கல்லூரிகள் என்ற பெயரில் வியாபார நிறுவனங்களையும் கட்டியது எல்லாம் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டு களவானித்தனமன்றி வேறு என்ன? ஊரே வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு திண்டாடுகையில் 165 எம்.எல்.ஏ-க்களில் ஒருத்தராவது மக்களொடு மக்களாக துணை நின்றார்களா? அதோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை.. வந்த நிவாரண உதவிப்பொருட்கள் மீது ஜெயலலிதா ஸ்டிக்கரை ஒட்டி அராஜகம் பண்ணியதற்கு வரும் தேர்தல் பதில் கிடைக்கும். இது தான் சாக்கு என்று எதிர்கட்சிகளும் இந்த அதிருப்தி அலையில் குளிர்காய முற்பட்டது எல்லா அரசியல்வாதிகளும் ஒரே சாக்கடையில் ஊறிய நாற்ற மட்டைகள் என்று நிரூபித்துள்ளது.
தங்களை "தேசிய ஊடகங்கள்" என்று சொல்லிக்கொள்ளும் வட இந்திய செய்தி தொலைகாட்சிகள் எப்படி தெற்கை கண்டுக்கொள்ளாதது மட்டுமல்லாமல், இருட்டடிப்பு செய்தது அவர்கள் நம்மை பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்துள்ளார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியுள்ளது. நியூயார்க், பாரீஸ் என வெளிநாடுகள் எல்லாம் "Save Chennai" campaign நடத்தி தங்கள் ஆதரவையும் உதவியையும் தந்துக்கொண்டிருக்க, வட இந்திய "தேசிய" ஊடகங்கள் ஷீனா கொலை வழக்கையும், மற்ற உப்பு பெறாத விஷயங்களையும் முக்கியத்துவம் கொடுத்து சென்னையை ஒரு பொருட்டாகவே மதிக்காததற்கு நாம் அவைகளை (அவர்களை அல்ல) புறக்கணிப்பதே பதிலடி.
ஒரு டிசம்பர் 6 இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரித்தது. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு அதே டிசம்பர் 6-ல் திருவல்லிக்கேணி கோவில் முஸ்லீம் நண்பர்களுக்கும், மசூதிகள் இந்துக்களுக்கு மனிதநேயத்துடன் அடைக்கலம் கொடுக்க, கடவுளே இந்த நேசம் இப்படியே நீடிக்கவேண்டும் என்று கையெடுத்து வேண்டிக்கொள்ள வைக்கிறது.
கடந்தவை எல்லாம் நடந்தவையாக கழியட்டும். இனி நடப்பவை எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்ற ஆசை, வேண்டுதல்... என்னவாகவோ இருக்கட்டும். இந்த பேரிடர் நமக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. அவற்றை காலத்துக்கும் மறக்காமல் நல்லபடியாக வாழவேண்டும்.