குழந்தைகள் - இவர்கள் தங்கள் அப்பாவித்தனத்தாலும், அழகாலும், சிரிப்பாலும் நம்மை சந்தோஷப்படுத்துபவர்கள் மட்டுமல்ல, நம்மை தங்களுடைய சிறிய சிறிய செயல்களால் பிரமிப்பூட்டுபவர்கள் மட்டுமல்ல, சமயத்தில் நம்மை அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உள்ளாக்குபவர்கள். நான் முன்பே சொன்னதுபோல எனக்கு புட்டூவை பார்ப்பதிலேயும், அவனை ரசிப்பதிலும் தான் அதிக சந்தோஷம். ஆனால் கடந்த வாரம் புட்டு கடந்த வாரம் ஒரு மெல்லிய அதிர்ச்சியை கொடுத்தான். அந்த அதிர்ச்சி சில கேள்விகளை உண்டாக்கியது. ஆதிக்கு கோபம் கொஞ்சம் அதிகமாக தான் வருகிறது. அதற்காக அவன் எப்போதும் அடம் பிடித்துக்கொண்டு இருக்கிறான் என்று அர்த்தமில்லை. ஆனால் கோபம் வந்தால் கொஞ்சம் அதிகமாக வருகிறது.
கடந்த வாரத்தில் ஒரு நாள் அவன் ஒரு மருந்து பாட்டில் மூடியை வாயில் வைத்து கடித்துக்கொண்டு இருந்தான். அவன் வாயிலோ அல்லது நாக்கிலோ கிழித்துவிடும் என்று எண்ணி அவனிடம் இருந்து பாட்டில் மூடியை பிடுங்கினேன். அவ்வளவுதான்... காலை தரையில் உதைத்துக்கொண்டு நின்ற மேனிக்கு ஒரு சுற்று சுற்றி, கையையும் காலையும் உதறிக்கொண்டு அழுதுக்கொண்டே ஓடினான். அழுகையில் கண்ணை மூடிக்கொண்டு ஓடியதால் சுவற்றில் மூடிக்கொண்டு விழுந்தான். அழுகை இன்னும் அதிகமாகி அவனை சமாதானப்படுத்துவதற்குள் போதும்போதுமென்று ஆகிவிட்டது. "இத்துனூண்டு உருவத்துக்குள்ளே இவ்வளவு கோபம், வன்முறையா?" என்பது தான் முதல் கேள்வியாக தோன்றியது.
அடுத்து ஒரு நாள் மாதாந்திர மாளிகை வாங்குவதற்காக டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு போனோம். பொதுவாக வெளியே போகும் போது முடிந்தவரை புட்டுவையும் தூக்கிக்கொண்டு போவது வழக்கம். காரணம் அவனுக்கு வெளியே சுற்றுவது என்றால் கொள்ளை பிரியம். கடையில் அவன் டிராளியில் உட்கார்ந்தபடியே கைக்கு கிடைத்ததை எல்லாம் இழுக்க ஆரம்பித்தான். "ஆதி வேண்டாம்... புட்டு வேண்டாம்.." என்று மெதுவாக சொல்லிப்பார்த்தேன். அவன் கேட்பது போல இல்லை. பின்பு அவனை தோளில் தூக்கிக்கொண்டேன். அப்போதும் கைக்கு கிடைத்தவற்றை இழுக்க ஆரம்பித்தான். சற்றே உயர்த்திய குரலில் "புட்டு.." என்று சொன்னேன். நான் கோபமாக இருக்கிறேன் என்று அவனுக்கு புரிந்து விட்டது. ஒரு 10 வினாடிகளுக்கு என் முகத்தை சலனமில்லாமல் அமைதியாக பார்த்துவிட்டு "ஈ.." என்று சிரித்தான். கூடவே ஒரு 'கண்ணாடிப்பு' இலவச இணைப்பாக. இதற்கு மயங்காமல் இருக்க முடியுமா? கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன். ஆதி திரும்ப தன் வேலையை ஆரம்பித்துவிட்டான். இப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ஆதிக்கு ஒரு வயது இப்போது தான் முடிந்தது. அதற்குள் இவனுக்கு தரையை உதைத்துக்கொண்டு அழும் அளவுக்கு கோபம் வருகிறது. தன் மீது கோபப்படும் அப்பாவை பார்த்து சிரித்தால் அமைதி ஆகிவிடுவார் என்று தெரிகிறது. பொதுவாக குழந்தைகள் பச்சை களிமண் போல.. நாம் தான் அவர்களை நல்ல பொம்மைகளாக உருவாக்க வேண்டும் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நமது பழக்கங்கள், நடவடிக்கைகள், பேசும் விதம் இவற்றை பார்த்து தான் அவர்கள் தங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதனால் குழந்தைகள் முன்பு நாம் 'ஆதர்ஷமாக' நடந்துகொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆனால் இந்த குழந்தைகளுக்கு ஏற்கனவே இந்த சூட்சுமங்கள் தெரிகிறபோது நாம் என்ன தான் சொல்லிக்கொடுப்பது? அப்படியே சொல்லிக்கொடுத்தாலும் அது எவ்வளவு பலனளிக்கும்?
அவர்களுக்குள்ளேயே குணாதிசயங்கள் ஏற்கனவே உருவாகியிருப்பதும், அதற்கு மாறாக நாம் எதுவும் சொல்லிக்கொடுக்க முயற்சிக்கும்போது தான் இடைவெளிகள் உருவாக காரணமோ? இந்த சமயத்தில் நாம் அவர்களை அமைதிப்படுத்த செய்யும் மிரட்டல்கள் அப்பா மீது "அப்பா என்றால் மிரட்டுபவர், அம்மா என்றால் அடைக்கலம் கொடுப்பவர்" என்ற பிம்பத்தை உருவாக்குகிறது என்பது எனது அபிப்பிராயம். அதனாலேயே பிள்ளைகள் அப்பாவை விட அம்மாவிடம் அதிகம் அன்னியோனியமாக இருக்கிறார்கள் போல. பிள்ளைகளுக்கு 25-26 வயது ஆகும்போது தான் அப்பா நமது நன்மைக்காக கண்டிப்பாக இருந்தார் என்று உணரமுடியும். ஆனால் அந்த சமயத்தில் பழையபடி இழைந்து பழக ஒருவித தயக்கம் உண்டாகும். அதனாலேயே அப்பாக்கள் சம்பாதித்து போடும் தியாக செம்மல்களாக உலாவருகிறார்கள் போல.
இப்போது எனக்கு ஒன்று மட்டும் தோன்றுகிறது. புட்டுவை அவனது போக்கிலேயே விட்டு தான் சரியான பழக்க வழக்கங்களுக்கு கொண்டுவர வேண்டும். ரோபோவை புரோகிராம் செய்வது போல புட்டுவை வெறுமனே உத்தரவுகள் கொடுத்து நல்ல மனிதனாக கொண்டுவர முடியாது. மாறாக நானும் அவனுடனேயே 'வளர்ந்து' தான் அவன் சரியான பாதையில் போகிறான் என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். பெற்றோராக இருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல போல.
{oshits} வாசகர்கள் ஒரு பெற்றோராகிய என் பரவசத்தையும், கேள்விகளையும் புரிந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்.