Relationships
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Click the image to read further

கடந்த வாரத்தில் ஒரு நாள். மதியம் ஆபீஸுக்கு போகும்போது 98.3 FM-ல் ஹிந்தி பாடல்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். முதலில் ‘Love Aaj Kal’ அடுத்து ‘Dil Chahta Hai’ என வரிசை வந்தது. இந்த இரு படங்களை குறித்து கூட வந்த ஊழியர்கள் பேச ஆரம்பித்தனர். எனக்கு அந்த இரு படங்களும் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் பிரதிபலித்ததாக தோன்றியது. ‘Love Aaj Kal’ - Time zones மாறும் போது உறவுகளும் மாறக்கூடும் ஆனால் உண்மையான உறவுகள் காலத்தை மீறி ஜெயிக்கும் என்ற கருத்தை கொண்டது. எனக்கு உடனே விஜய்யின் நினைவு வந்தது. Time zone காரணமாகவும், அலுவலகங்களில் chat client-கள் மறுக்கப்பட்டதும் எங்களிடையே (மின்னஞ்சல்) கடிதப் போக்குவரத்து குறைய ஆரம்பித்தது அப்போது உரைக்க ஆரம்பித்தது. அதற்காக அன்பு குறைகிறது என்று அர்த்தமில்லை ஆனால் காலப்போக்கில் மற்ற விஷயங்கள் முன்னோக்கி வந்து இதை பின் தள்ளக்கூடும் என்று தோன்றியது. ஆனால் ‘Dil Chahta Hai’ நினைவு என்னை கொஞ்சம் கூடுதலாகவே பாதித்தது. காரணம் - எனது பள்ளித்தோழன் செல்வராஜ்.

நான் பள்ளியில் படிக்கும்போது செல்வராஜுக்கும் எனக்கும் சில பொதுவான நண்பர்கள் இருந்திருந்த போது எங்களுக்குள் பேச்சுவார்த்தை இருந்ததில்லை. ஆனால் improvement exam எழுத வீட்டில் இருந்தபோது தான் அவனுடன் நட்பு துளிர்த்து தழைத்தது. சொல்லப்போனால் எனது பள்ளி நண்பர்களிலேயே அதிக நாள் நீடித்தது செல்வராஜுடன் தான். இது காலத்துக்கும் நீடிக்கப்போகும் நட்பு என்று எனக்கு தோன்றியது. அதற்கேற்றார் போல செல்வராஜ் எங்கள் வீட்டுக்கு வருவதும், நான் அவர்கள் வீட்டுக்கு தினந்தோறும் போவதும் நாங்கள் இருவரும் எங்கள் (இருவருடைய) பெற்றோர்களுடனும் நன்றாக பழகிக்கொண்டதும் ஒரு நீண்ட கால நட்புக்கான அடித்தளமாகவே தோன்றியது. துரதிர்ஷ்டவசமாக செல்வா உள்ளூரிலேயே கல்லூரிப்படிப்பை தொடர, நான் வெளியூருக்கு போய்விட, எங்கள் நட்பில் ஒரு variety மற்றும் relationship-ல் space-ம் கிடைத்தது.

வார கடைசிகளில் நான் ஊருக்கு வரும்போது விட்டுப்போன நாட்களுக்கும் சேர்த்து குதூகலம் நடக்கும். அதிர்ஷ்டவசமாக என் நண்பர்கள் யாருக்குமே குடிப்பழக்கமோ, புகைக்கும் பழக்கமோ கிடையாது. எனினும் வயசு பசங்க என்ன சந்தோஷத்தை கண்டுட்டீங்கன்னு நீங்க கேக்குறது என் காதுல விழுது. அப்பா அம்மா பள்ளிக்கூடம் போனப்புறம் செல்வா, ராஜா மற்றும் செல்வாவின் சில நண்பர்கள் எல்லாம் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். செல்வாவும், ராஜாவும் தீவிரமான ஆங்கில பட ரசிகர்கள். எனக்கோ ஆங்கிலம் புரியாது. அதனால் ராஜா வரும்போதே சமீபத்திய ஆங்கில ஹிட் படத்தின் கேசட்டை வாடகைக்கு எடுத்து வருவான். செல்வா நூடுல்ஸும்,முட்டையும் வாங்கிவருவான். ராஜாவும் (சில சமயத்தில்) நானும் சேர்ந்து நூடுல்ஸ் சாமைத்துவிட்டு படம் பார்க்க உட்கார்வோம். அவ்வப்போது செல்வா எனக்கு வசனங்களை மொழிபெயர்த்து சொல்ல சந்தோஷமாக படம் பார்த்து கழியும் அந்த பொழுது. (சில சமயங்களில் நல்ல படத்துக்கு பதிலாக பலான பட கேசட்டுகளும் வந்ததுண்டு. அதில் கூட எங்கள் ரசனை ஒத்துப்போகும் - வெறும் வெளிநாட்டு சரக்கு தான் எங்களுக்கு பிடித்தவை). மாலை நேரங்களில் அம்மாவை பள்ளியில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு தேவனாம்பட்டினம் கடற்கரையில் சென்று கடலில் குளித்து ஆட்டம் போடுவோம். என் தங்கை அவ்வப்போது திட்டுவாள் - 'நமக்கு எப்போவாவது தண்ணி சுடவைத்து கொடுத்திருக்கிறானா? set சேர்ந்து அவங்களே சமைத்து அவங்களே சாப்பிட்டுக்குறாங்க'. நாங்கள் சேர்ந்து வெளியே போனது பிச்சாவரத்துக்கு. "Dil Chahta Hai" படத்தில் அந்த நண்பர்கள் கோவாவில் வருடத்துக்கு ஒரு முறை சந்தித்துக் கொள்வது போல நாம் பீச்சாவரத்தில் சந்தித்துக்கொள்ளலாம் என்று பேசிக்கொள்வோம்.

எனக்கு செல்வாவிடம் பிடித்த, சொல்லப்போனால் அவனை பார்த்து imbibe செய்துக்கொண்ட பழக்கம் என்று பார்த்தால் - எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டான். சமயத்தில் அந்த அலட்சியமே வினையாக அமைந்ததும் உண்டு. எம்.சி.ஏ-வில் 90% மதிப்பெண் எடுத்தபோதும் நேர்முகத்தேர்வுகள் நடக்கும் சமயத்தில் மூடு இல்லை என்று அவன் சில நிறுவனங்களை நிராகரித்தது பின்னர் வினையாக முடிந்தது. ஆனால் நானோ வாழ்க்கையில் எதற்குமே மிக desperate-ஆக இருப்பேன். அதனாலேயே இன்னும் better offer-க்கு முயற்சிக்கலாம் என்று தைரியம் இல்லாமல் கிடைத்த வேலையில் சேர்ந்து ஒரு விட சலிப்போடேயே வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருந்தேன். இப்போது எனக்கு கொஞ்சம் அசட்டு தைரியம் வந்துள்ளது என்றால் அது செல்வாவின் பாதிப்பே. அது போல அவனுக்கு உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் (ஆனால் அவன் ஜிம் பக்கமே ஒதுங்கியது இல்லை என்பது வேறு விஷயம்). அப்போது அவனிடம் இருந்து எனக்கு ஒட்டிக்கொண்ட ஆர்வம் இப்போது தான் செயல்படுத்த முடிந்தது.

செல்வாவை பொறுத்தவரை நான் ஒரு திறந்த புத்தகம். என் மனதில் உள்ள விஷயங்களை, எனது பலவீனங்களை, சொல்லப்போனால் எனது Dark Side எல்லாம் அவனுக்கு மட்டுமே தெரியும். நான் படிக்கும் போது ஒரு நண்பனின் தங்க்கையை ஒருதலை பட்சமாக காதலித்ததை அவன் மட்டுமே கண்டுபிடித்திருந்தான். அந்த அளவுக்கு நான் அவனுக்கு transparent-ஆக இருந்தேன். எனது சந்தோஷங்களை பகிர்ந்துக்கொள்ள, எனது கஷ்டங்களை காது கொடுத்து கேட்கக்கூடிய ஒரு சுமை தாங்கியாக செல்வா இருக்கிறான் என்பதே ஒரு தெம்பாக இருந்தது எனக்கு. மிகவும் பிடித்தவர்களிடம் குழந்தையாக குழைந்துவிடும் பழக்கம் அப்போது எனக்கு இருந்தது. எனவே செல்வா உடனிருக்கும்போது எல்லாம் நான் சமயத்தில் குழந்தை போல அடம் பிடிப்பது வாடிக்கையாக இருந்தது. நான் MBA-வுக்கு முயற்சித்த போது அவ்வப்போது எனக்கு word list மனப்பாடம் செய்ய உதவியது செல்வா தான்.

நான் செல்வாவை கொண்டாடிய அளவுக்கு அவன் என்னை தான் நண்பனாக கொண்டாடவில்லையோ தோன்ற வைத்த சம்பவங்கள் பிற்பாடு நடந்தது. எனது முதல் வேலை கிடைத்ததும் நான் 1 வாரம் அவகாசம் கேட்டுவிட்டு ஆர்வத்தோடு வீட்டுக்கு வந்தேன். அந்த 1 வாரம் - எனது இந்த இரண்டு நண்பர்களுடன் சந்தோஷமாக சுற்றித்திரிய வேண்டும் என்பதற்காக வாங்கிப்பெற்ற அவகாசம். ஆனால் செல்வாவோ 'அப்படியா? வாழ்த்துக்கள்!' என்று சொல்லிவிட்டு மாயமானவன் தான். அந்த 1 வாரம் அவனை பிடிக்கவே முடியவில்லை. பின்னொரு சமயம் என் மனதில் தோன்றிய ஆதங்கத்தை - உனக்கு முன்னாடி நான் வேலைக்கு போய்விட்டது உனக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிட்டதா? என்று கேட்டபோது "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை... உனக்கு தோன்றியதாக இருக்கும்" என்று சமாளித்துவிட்டான். பின்னர் வழக்கம்போல வார இறுதிகளில் வீட்டுக்கு வரப்போக ஓரளவுக்கு நிலைமை சகஜமானது. ஆனாலும் அவ்வப்போது "அவன் சித்தப்பா வீட்டுக்கு போய்விட்டான்" என்று அவன் அம்மா தொலைபேசியில் சொல்வதும் வழக்கமாகிவிட்டது. நான் கோவைக்கு மாறிவிட்ட, பின்னர் அங்கிருந்து அபுதாபிக்கு கிளம்ப, கடைசி சமயங்களில் எல்லாம் செல்வாவை பிடிப்பதே குதிரைக்கொம்பாக இருந்தது. 1-2 சமயங்களில் இரவு 10 மணிக்கு மேல் அவன் வீட்டுக்கு போவேன் - இந்நேரத்துக்காவது வீட்டுக்கு வந்திருப்பான் என்ற நினைப்பில். ஆனாலும் அவனை கடைசியாக எப்போது பார்த்தேன் என்று நினைவில்லை.

அபுதாபியில் இருந்த போது அவனிடம் போன புதிதில் இ-மெயில் வந்துக்கொண்டிருந்தது. என் அப்பாவுக்கு செல்வாவை ரொம்ப பிடிக்கும் & அவனும் என் வீட்டோடு நன்றாக பேசிக்கொண்டு இருந்தான். அதனால் வீட்டுக்கு அழைக்கும்போது எல்லாம் செல்வாவை விசாரிப்பதும், அவனிடம் என் வீட்டில் ஏதாவது செய்யவேண்டும் என்றால் அவனை செய்ய கேட்பது என்று நிலமை சீராவது போல தோன்றியது. ஆனால் கடைசியாக அவனிடம் இருந்து எனக்கு வந்த இ-மெயில் "நியூ" திரைப்படத்தை பற்றி 2-3 வரிகள் எழுதியிருந்தான். ஒரு முறை துபாயில் அதிகம் அனுபவம் இல்லாத கம்ப்யூட்டர் முதுகலை பட்டதாரி வேண்டும் என்று யாரோ சொன்னபோது செல்வாவிடம் அவனது ரேஸியூம் கேட்டு எழுதிய மெயிலுக்கு பதிலே இல்லை. அதன் பின்னர் முதல் வருஷ விடுப்பில் வந்தபோது என் தங்கைக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருந்தது. எனக்கு நண்பர்கள் என்று இருந்தது 2 பேர் மட்டுமே. அந்த வகையில் செல்வாவை அழைக்க என் அம்மாவோடு போனபோதும் எனக்கு கிடைத்தது வழக்கமான அதே பதில் தான் "அவன் சித்தப்பா வீடு கட்டுகிறார். அவருக்கு உதவியாக போயிருக்கிறான்". வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்களே என்று மரியாதை நிமித்த தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை. கல்யாணத்துக்கு கூட வரவில்லை. அதற்கு பிறகு நானும் அவனை தொடர்பு கொள்வதை விட்டுவிட்டேன். எனினும் அவனுடைய மின்னஞ்சல் முகவரி இருந்ததால் நான் எழுதும் மொக்கை ஜங்க் மெயில்கள் எல்லாம் அவனுக்கு கும்பாலோடு கோவிந்தாவாக அனுப்பி நான் உயிரோடு இருக்கிறேன் என்று காட்டிக்கொள்வேண். எனினும் பதில் எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை.

நான் அபுதாபியில் இருந்து திரும்ப வந்து IT-யில் வேலை தேட ஆரம்பித்தேன். அப்போது 6 மாதம் வீட்டில் இருந்த போதும், ஊரில் வெளியே எங்காவது போகும் போது செல்வா கண்ணில் படுவான் என்று எதிர்பார்ப்பேன். ஆனால் ஒன்றிரண்டு முறை அவன் பெற்றோர்கள் தான் கண்ணில் பட்டார்கள். செல்வா எங்கள் ஊரிலேயே அவன் படித்த St. Josephs Arts College-லேயே MCA-ல் Lecturer-ஆக சேர்ந்துவிட்டான் என்றும், அவனை அந்த academic year-லேயே permament ஆக்கிவிடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாகவும், அதே நேரம் செல்வாவுக்கு கல்யாணத்துக்கு பெண் தேட ஆரம்பிக்க போவதாக சொன்னார்கள். இந்நேரத்துக்கு அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்கும். சில நாட்களுக்கு முன்பு அந்த மின்னஞ்சலும் bounce ஆகிவிட ஏதோ என்னுள்ளே அறுந்து போனது போல தோன்றியது. அன்றைக்கு உண்மையிலேயே பயங்கர வருத்தமாக இருந்தது எனக்கு.

School Photo

நான் செல்வாவை மிகவும் miss செய்தாலும், அவன் வீடு என் சொந்த ஊரில் 3-4 தெருக்கள் தள்ளி இருந்தாலும், அவன் வீட்டுக்கு சென்று பார்க்க / விசாரிக்க எனது ஈகோ முட்டுக்கட்டையாக உள்ளது. என்னை விட அவன் திறமைசாலியாக இருந்தாலும் அவனுக்கு அவன் விரும்பியது போல வாழ்க்கை அமையாத ஏமாற்றம் ஒருவேளை என்னிடம் இருந்து ஒதுக்கிவிட்டதா என்று தோன்றுகிறது. இந்த statement கொஞ்சம் அவமானப்படுத்துவதாக கூட இருந்தாலும் எனக்கு தெரிந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் வரை அப்படி தான் தோன்றுகிறது. நான் ஏதாவது தவறு செய்திருந்து அவனை காயப்படுத்தியிருந்தால் “இது பிடிக்கவில்லை. ஏன் இப்படி செய்தாய்?” என்று கேட்டிருந்தால் நட்பு நீடிக்க வேண்டும் என்ற விருப்பமும், உரிமையும் இருந்திருக்கிறது என்று தோன்றியிருக்கும். ஆனால் அவனுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக ஒதுங்கிவிட்டான். அவனது முடிவை மதித்து அவனை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவது அவனுக்கு என் வகையில் நான் செய்யும் மரியாதை.

எனினும் எப்போது Dil Chahta Hai பாடல்களை கேட்கும்போது அரைகுறையாக முடிந்து போன எங்கள் மூவரின் கதை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

Related Articles