Hindi
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


The Dirty Pictureபொதுவாக iconic-ஆக விளங்கும் கனவு கன்னிகளுக்கு அவர்கள் வாழும்போது அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. மாறாக அவர்கள் இறந்த பிறகே அவர்களை உலகம் உச்சத்தில் தூக்கிவைத்து பாராட்டு மழை பொழியும். ஹாலிவுட்டில் ஒரு ”மர்லின் மன்றோ” என்றால் நம் தென்னிந்தியாவுக்கு ஒரு ”சில்க்” ஸ்மிதா. இருவரும் வாழ்ந்த காலத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் வாழ்ந்து, தனிமையில் இறந்து போனவர்கள். ஏனோ... ஆண்களின் தூக்கத்தை கெடுத்த இவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் நிம்மதியாக தூங்கமுடியாமல் தனிமையில் தவித்து கடைசியில் வாழ்வதை விட சாவதே மேல் என்று தங்கள் கதையை முடித்துக்கொண்டார்கள். அவர்களின் கதையை படமாக எடுக்கும்போது அவர்களின் அந்தரங்கங்களை சொல்லவேண்டியதால் அது ஒருவித titilating factor-ஆக மாறிவிடுகிறது. இந்த நடிகைகளின் துயரங்களை காசாக்க (மட்டுமே) முயற்சிக்காமல் வெகு சிலர் தான் அவர்களது வாழ்க்கையை மனதில் பதியும்படி சொல்கிறார்கள். ”சில்க்” ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் ஹிந்தியில் வந்து பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் “The Dirty Picture" ஒரு வகையில் புதிய முயற்சி என்றே சொல்லவேண்டும்.

நடனம் மீது கொண்ட ஆர்வத்தால் அம்மாவிடம் அடிவாங்கி சிறிய வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்துவிடும் ரேஷ்மா (Silk என்று அர்த்தம்), கஷ்டப்பட்டு துணை நடிகையாக வாய்ப்பு வாங்கி, Item girl - ஆக கவனிக்கப்படுகிறார். தனது படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துக் கொண்டிருப்பதை தடுக்க ஒரு நல்ல “கவர்ச்சி / sex appeal” தேடும் நடிகர் சூர்யகாந்த்தின் பார்வை சில்க்கின் மேல் பட, அவர் தொடும் 501வது பெண்ணாக சூர்யகாந்த்தின் “ஆசை நாயகி” ஆக மாறி தென்னிந்திய திரையுலகத்தின் தவிர்க்கமுடியாத கவர்ச்சிப்புயலாக மாறுகிறார் சில்க். ஒரு கட்டத்தில் சூர்யகாந்த்தின் புகழையும் சில்க் தாண்டிப்போக, தன்னை சூர்யகாந்த் ஒரு கவர்ச்சி பகடையாக மட்டுமே பயன்படுத்துவதை கண்டு பொருமி, சூர்யகாந்த்தை சீண்டிவிடுகிறார் சில்க். அதே சமயம் சில்க்கை காதலிக்கும் சூர்யகாந்த்தின் தம்பி ரமாகாந்த், அவரை தன் பெற்றோரிடம் பேசும் வேளையில் சில்க் அவருக்கு போட்டியாக இறக்கப்பட்ட ஷகீலாவுடன் மோத, அதை தொடர்ந்து ஏற்படும் வாக்குவாதத்தில் பிரிகிறார். வாய்ப்புகள் குறைந்து, உடம்பு ஊதிப்போய், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனிமையில் வெறுத்து போயிருக்கும் சில்க்குக்கு இயக்குநர் ஆபிரஹாமின் நட்பு ஆசுவாசத்தை தருகிறது. அது ஒரு சுபமான முடிவில் கலக்கும் முன்பு ஒரு ஆபாச பட வாய்ப்பில் சிக்கும் சில்க் மனம் வெறுத்து தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்.

பொதுவாக ஒரு நடிகர் / நடிகையின் வாழ்க்கையை பற்றி எடுக்கப்படும் படங்கள் என்றால் ஒருவித darkness & depressing - ஆக இருக்கும். உதாரணம் - லேகயுடே மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (மலையாளம்), Sunset Bouleward. ஆனால் "The Dirty Picture" அப்படி இல்லாமல் மிக இயல்பாக, சொல்லப்போனால் கலர்ஃபுல்லாக இருக்கிறது. இருந்தும் அந்த intensity-ல் குறை வைக்கவில்லை. Showbiz பெண்களின் வாழ்க்கையை சொல்லும் கதை எனினும் sympathetic approach இல்லாமல் இயக்குநர் மிலன் லூத்ரியா சொல்லியிருப்பது தான் இதன் சிறப்பு. சில்க் நடிகையாக மாற ‘நோயால் தவிக்கும் அம்மாவோ, கல்யாணத்துக்கு காத்திருக்கும் தங்கையோ, கடன் தொல்லையில் வாடும் அப்பாவோ’ காரணமில்லை. அதே சமயம் தன்னிடம் உள்ள இளமையை உபயோகப்படுத்தி முன்னேறும் knack-ம் தெரிந்து பொறுமையாக அடிமேல் அடிவைத்து முன்னேறுகிறார். உதாரணம் - தன்னிடம் தவறாக நடக்க முயலும் ஆளை அடிக்கும் சில்க், தனக்கு முன் 500 பெண்களுடன் படுத்தவன் என்றபோதும் தயங்காமல் படுக்கையை பகிர்ந்து சினிமா உலகம் தனக்கு ரத்தின கம்பளம் விரிக்கவைக்கிறார். இருப்பினும் ஒரு உறுத்தல் - ”தனக்கு சூர்யகாந்த் மீது எந்த உரிமையும் இல்லை என்பது தெரியும். இந்த உறவு தொழில்ரீதியானது மட்டுமே” என்று சொல்லும் சில்க், சூர்யகாந்த்துடன் படுக்கையில் இருக்கும்போது அவன் மனைவி வந்துவிட்டதால் சூர்யகாந்த் தன்னை வெளியே தள்ளிவிட்டதற்காக கோபித்துக்கொண்டு அவனை வெறியேற்றுவது குழந்தைத்தனம். அதே சமயம் என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று தன்னை பற்றி எப்போது அவதூறாக எழுதும் பத்திரிகை எடிட்டரின் வீட்டு முன் சாலையில் ஆடி அவருடைய வீட்டில் நடக்கும் பார்ட்டியை ஒன்றுமில்லாமல் ஆக்குவதாகட்டும், தன்னை மரியாதை குறைவாக நடத்தும் இயக்குநரிடம் “நான் சில்க்... தெரியுமில்லை” என்று ருத்ர தாண்டவம் ஆடுவதாகட்டும்... அந்த தைரியத்துக்காகவே ஆண்கள் சில்க்கை வாய்பிளந்து பார்த்ததில் ஆச்சரியமில்லை.

படம் முழுக்க வித்யா பாலனின் ராஜ்ஜியம் தான். முதல் ஷாட்டில் இருந்து கடைசி ஷாட் வரை ஒவ்வொரு frame-லும் நீக்கமற நிறைந்திருக்கிறார் வித்யா. சொல்லப்போனால் இதன் கதாநாயகன் இவர் தான். கதாநாயகர்கள் மூவரும் supporting character ஆக ஒருபடி கீழேயே இறங்கி நிற்கிறார்கள். வித்யா பாலனை பொம்பள ஆமீர் கான் என்று சொல்லலாம். படத்துக்கு படம் இவரது திறமையும், ஆளுமையும் கூடிக்கொண்டே போகிறது. படத்தின் still-களை பார்த்து திடுக்கிட்டவர்களுக்கு படம் இன்னும் அதிர்ச்சியை கொடுக்கும். அவ்வளவு revealing costumes இதில். பச்சையாக சொல்லப்போனால் வித்யாவிடம் இனியும் மறைக்க ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு ’காமிக்கும்’ உடைகள். எனினும் ஒரு இடத்தில் கூட ஆபாசமாக தெரியாதது வித்யா இந்த character-ஐ எப்படி துணிச்சலாக குறுகுறுப்பு இல்லாமல் சில்க்காகவே வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு சான்று. சொல்லப்போனால் இந்த படத்தின் still-களை பார்த்து வித்யாவை வெறுக்கும் நிலையில் இருந்தேன். ஆனால் படத்தோடு பார்க்கும்போது ஒரு இடத்தில் கூட எனக்கு வித்யா பாலனே தெரியவில்லை. மாறாக சில்க்.. சில்க்.. சில்க் தான். சில்க் அளவுக்கு வித்யாவுக்கு கவர்ச்சி இல்லை என்ற வாதத்தையெல்லாம் நினைவுக்கே வராமல் செய்துவிடுகிறார் வித்யா. வித்யாவின் ரசிகனில் இருந்து தீவிர ரசிகனாக இன்னும் ஒருபடி உயர்த்தியது இந்த படம் என்றால் மிகையில்லை. ஒருவேளை வித்யாவின் lifetime opportunity-ஆக இந்த படம் தேங்கிவிடும் ஆபத்தும் உண்டு. வித்யாவால் அவர் ஏற்றிவைத்த benchmark-ஐ அவராலேயே கடக்கமுடியாமலும் போகலாம்.

படத்தின் அடுத்த பலம் இதன் வசனங்கள். ரஜத் அரோராவின் வசனங்கள் ஒவ்வொரு வரியும் பஞ்ச் டயலாக் தான். குறிப்பிட்டு சொல்லக்கூடிய வசனம் என்று பார்த்தால் - இடைவேளையில் விருது வழங்கும் விழாவில் சில்க் பேசும் ”எல்லாரும் வேலை செய்து பேர்/புகழ் வாங்குவாங்க... நான் என் பேரை சீரழிச்சு புகழ் பெற்றிருக்கேன்” என்று கொட்டும் ஆதங்கமாகட்டும், ஆபிரஹாமுடம் “என்னிடம் உனக்கு என்ன பிரச்சினை? படம் ஓடுவதற்கு மூன்று காரணங்கள் தான் - entertainment, entertainment, entertainment... அந்த entertainment-ஏ நான் தான்” என்று கண் சிமிட்டுவதாகட்டும்.. சூர்யகாந்த் “ஒரு பெண் உடையோடு தன் வெட்கத்தை களைந்துவிட்டு தொழிலுக்கு வரும்போது முதல் சந்தோஷம் சமுதாயத்தில் உள்ள யோக்கியர்களுக்கு தான்” என்று சினிமாவில் நடக்கும் casting couch-ஐ சாதாரணமாக் சொல்வதாகட்டும்.. ஒவ்வொரு வசனமும் தியேட்டரில் கைதட்டு பெற்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஹிந்தி தெரிந்தவர்கள் இந்த வசனங்களை விசிலடித்து ரசிக்கலாம். படத்தின் பலவீனம் என்று பார்த்தால் இரண்டாவது பகுதியில் ஆபிரஹாமுடன் சில்க் காதல் வயப்பட்டபின் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு. இருந்தாலும் க்ளைமேக்ஸில் தன்னை ஏமாற்றி நீலப்படும் எடுக்கும் இடத்தில் கொண்டுவந்துவிட்டு போலீஸுக்கு பயந்து தெருவில் ஓடும் நிலைமைக்கு வந்துவிட்டதை எண்ணி மனமுடைந்து தற்கொலை செய்துக்கொள்வது பார்ப்பவர்களின் மனதில் பாரத்தை ஏற்றும்.

The Dirty Picture Poster
The Dirty Picture Poster

விளம்பரங்களில் சொல்வது போல இது “celebration of life". ஒரு இடத்தில் கூட படம் பார்ப்பவர்களை depress செய்யவில்லை. ஏன் இந்த பெண் இப்படி அசட்டுத்துணிச்சலோடு ஆட்டம் போடுகிறாள் என்று மட்டுமே தோன்றுகிறது. அதே சமயம் சில்க்கின் மரணம் நம் தொண்டையை அடைக்கவும் செய்கிறது. இந்த படம் சில்க்கின் வாழ்க்கையை அப்பட்டமாக எடுக்கவில்லை என்றபோதும் ஓரளவுக்கு career graph / life sketch - ஐ பார்வையாளர்களுக்கு காண்பிக்கிறது. சில்க் வாழ்ந்த காலத்தில் இளமையில் இருந்தவர்கள் இன்னும் கூடுதலாக identify செய்துக்கொள்ளலாம். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது - பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டில் நான் இருந்தபோது மாலை வீட்டுக்கு வரும்போது செய்தித்தாளின் spread out-ல் பார்த்து சில்க்கின் மரணத்தை தெரிந்துகொண்டபோது என் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப்பார்த்தது. ஏனோ... sex bomb-ஆக இல்லாமல் எனக்கு சில்க்கை ரொம்ப பிடிக்கும். கோழி கூவுது படத்தை சில்க்குக்காகவே பலமுறை பார்த்திருக்கிறேன். ”ஜீவா” படத்தில் வரும் ”மர்லின் மன்றோ போஸ்” என்னுடைய favourite. இன்றைக்கு ஸ்ரேயாவும், முமைத் கானும் அணிவதை விட அதிகமாக தான் சில்க் அணிந்திருக்கிறார். எனினும் சில்க்கின் கண்ணும், பாதி திறந்த lip gloss போட்ட உதடும் ஏற்படுத்திய sex appeal / கிளுகிளுப்பு வேறு எந்த நடிகைக்கும் இல்லை. சில்க்கின் கவர்ச்சி இதில் தான் இருந்தது... உடைகளில் அல்ல.

வாய்ப்பு கிடைத்தால் 1950-ல் வெளிவந்த "Sunset Boulevard" படத்தை பாருங்கள். உச்சத்தில் இருந்த நடிகை தான் தன் prime-ஐ கடந்துவிட்டதை கூட உணராமல் இன்னும் மாயையிலேயே இருப்பதையும், எப்படி நிகழ்காலத்துக்கு வருகிறார் என்பதை engaging-ஆக சொல்லும் படம் அது. அரை நூற்றாண்டுகள் மாறியும் நடிகைகள் வாழ்வு பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ஆச்சரியமாகவே உள்ளது.

பின்குறிப்பு: இதில் எத்தனை முறை வித்யா வித்யா என்று ஜபித்திருக்கிறேன் என்று எண்ணி பின்னூட்டம் இடவும் ;-)

Related Articles