Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

நமக்கு சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது & என்னுடைய அந்த வரிசையில் இடம் பெற்ற ஒரு திரைப்படம் - ‘சதி லீலாவதி’. கமல்ஹாஸன் - கிரேஸி மோகன் கூட்டணியின் முத்தான படைப்புக்களில் இதுவும் ஒன்று. படம் சீரியஸான படம் போல இருந்தாலும், இதில் வரும் காமெடி காட்சிகள் ஒரு நகைச்சுவை சுரங்கம். கமல்ஹாஸனின் சொந்த பேனரிலிருந்து வழக்கம் போல இதுவும் ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் - மெரில் ஸ்ட்ரீப் நடித்து 1989-ல் வெளிவந்த ‘She Devil'-ன் தமிழ் பதிப்பு. இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ளாமல் ‘கதை - அனந்து’, ’திரைக்கதை - பாலுமகேந்திரா’ என்று போடுவதிலிருந்தே காமெடி ஆரம்பித்துவிடுகிறது. நிமிஷத்துக்கு 100 காமெடிகள் வருவதால் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நமக்கு புதிதாக இருக்கும். அதிலும் கமல்ஹாசனும், கோவை சரளாவும் வரும் காட்சிகள் அத்தனையும் எனக்கு மிக மிக பிடித்தவை. எனக்கு சோர்வாக இருக்கும் போதெல்லாம் நான் அந்த காட்சிகளை போட்டுவிட்டு குழந்தைகளை போல ‘கெக்கே பெக்கே’ என்று சத்தமாக சிரிப்பது வழக்கம். இந்த பதிவு என் பார்வையில் ‘சதி லீலாவதி’யின் விமர்சனம் அல்ல, எனக்கு பிடித்த ஆனால் அதிகம் கவனிக்கப்படாத சில காட்சிகளின் குறிப்பு.

 

1. என்னையே பிடிக்கலையாமாம்...

கிளைமேக்ஸில் வரும் இந்த வசனம் எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்க தவறாது. கோவித்துக்கொண்டு கார் ஓட்டிக்கொண்டு போகும் கோவை சரளாவை சமாதானப்படுத்த, கமலும், அவர் மகனும் மோட்டார் பைக்கில் தொடர்கிறார்கள். வண்டியில் பிரேக் இல்லை என்பது ஓட்டிப்போகும் கோவை சரளாவுக்கு தெரியாது. கர்ப்பமாக இருக்கும் கோவை சரளாவிடம் கமல் ‘பக்குவமாக’ விஷயத்தை உடைப்பார். “பழனி கண்ணு, நான் உனக்கு ஒரு அதிர்ச்சியான சமாச்சாரம் சொல்லப்போறேன், அதை நீ ஆனந்தமா எடுத்துக்கனும், இல்லை இல்லை அமைதியா எடுத்துக்கனும்” என்று பலமான பீடிகை போட்டுவிட்டு “வண்டியிலே பிரேக் பிடிக்கலை” என்று சொல்வார். அதற்கு கோவை சரளா “என்னையே பிடிக்கலையாமாம்... பிரேக் பிடிக்கலைன்னா என்ன?’ என்று அசராமல் திருப்பி அடிப்பார். ஐய்யோ... எத்தனை தடவை பார்த்தாலும் இந்த வசனத்துக்கு என்னால் சிரிக்காமல் இருக்க முடியாது. எனக்கு தெரிந்து இதை நிறைய பேர் கவனிக்கவில்லை. அடுத்த தடவை "Don't miss it"

2. Chance or Choice

{mosimage}சண்டை போட்டுவிட்டு ஹீராவுடன் போய்விடும் ரமேஷ் அரவிந்தின் மனைவி கல்பனாவுக்கு ஆறுதல் சொல்ல வருவார்கள் கமலும், கோவை சரளாவும். படத்துக்கு சீரியஸான காட்சி என்றபோதும் காட்சியின் ஆரம்பத்திலிருந்தே நகைச்சுவை நுழைந்துவிடும். அழும் கல்பனாவை சமாதானப்படுத்த கோவை சரளா கமலின் தோளை மெதுவாக உரசி சிக்னல் கொடுப்பார். ஆனால் கமலோ மூடுக்கு வந்து திரும்ப உரசுவார். அதே காட்சியில் பின்பு சொல்வார் “அம்மணி ஒரு ஆம்பளைக்கு. இந்தாடா எடுத்துக்கோன்னு சான்ஸோ சாய்ஸோ குடுக்கக்கூடாது. ரெண்டுத்தையும் எடுத்துக்குவான்” என்று சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு சொல்ல, அதற்கு கோவை சரளா ஆவேசமாக “கண்டிஸ்ஸனா செய்வானுங்க கெரகம் புடிச்சவனுங்க” என்று பதிலளிக்க, அதற்கு கமலின் முகத்தில் ஒரு அற்புதமான helpless expression குடுப்பார். இதை எத்தனை பேர் கவனித்தார்களோ தெரியவில்லை.

3. முதலில் கேட்டிருக்க வேண்டியது...

கல்பனா எழுதி கொடுத்தபடி ஹீராவை சந்தித்து, அவளின் Materialistic attitude-ஐ சாடும் விதமாக சில கேள்விகள் கேட்பார் கமல். ரெஸ்டாரண்டில் வரும் இந்த காட்சியில், சில கேள்விகளை மறந்துவிடுவார். பிறகு அந்த கேள்விகளை ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு டேபிளுக்கு கீழே வைத்துக்கொண்டு, “இந்த கேள்வியை முதல்ல கேட்டிருக்கனும், பரவாயில்லை” என்று சமாளிப்பார். அந்த காட்சியில் ஹீராவின் முதுகுப்பக்கத்தில் கேமரா இருக்கும், கமல் மெதுவாக காகித துண்டை கேமராவுக்கு தெரிவதுபோல டேபிளுக்கு அடியில் நகர்த்தியவாறே பேசுவார். Really funny moments.

4. வெளியே எதுவும் சாப்பிட்றதில்லை.

{mosimage}கல்பனாவின் திட்டப்படி ஹீராவை ஒருதலையாக காதலித்த ராஜா கமலின் வீட்டுக்கு 4 மணிக்கு வருவார். அப்போது அவரை வெளியே பதற்றத்தோடு வந்து வரவேற்கும் கமல்ஹாஸன், ராஜாவை உள்ளே அழைக்காமலேயே “என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்க, ராஜா “நான் வெளியே எதுவும் சாப்பிடுறதில்லை” என “முன்பின் தெரியாதவர்கள் வீட்டில் எதுவும் சாப்பிடுவதில்லை என்று பொருள்பட பதிலளிப்பார். அதை கவனிக்காமல் கமல்ஹாஸன் “வாங்க உள்ளே போய் சாப்பிடலாம்” என்று இழுத்துக்கொண்டு போவார். அதே காட்சியில் உள்ளே படுக்கை அறையில் ராஜாவை இருத்திவைத்துவிட்டு கமல்ஹாஸன் “டீ, காபி.. என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்பார். ராஜா “காபி” என்று பதில் சொல்ல, அதற்குள் கமல் “எதுவும் வேணாம்னா பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு அவசரமாக வெளியே போக, ராஜாவின் குழப்பமான முகபாவங்கள் நன்றாக இருக்கும்.

5. ஐய்யோ நிக்கிறீங்களே..

கிளைமேக்ஸ் காட்சியின் ஒவ்வொரு நொடியும் நகைச்சுவை தான். ஹீரா கமலை யதார்த்தமாக அணைத்து நன்றி சொல்ல, பக்கத்தில் நிற்கும் ராஜாவிடம் தர்மசங்கடமாக ”தேங்க்ஸ் சொல்றாங்கலாம்” என்று சொல்ல, அதே நேரத்தில் கோவை சரளா வீட்டுக்குள்ளே நுழைந்து கமலையும், கட்டிப்பிடித்து நிற்கும் ஹீராவையும் பார்த்துவிட்டு பேயறைந்தது போல நிற்க, ஹீரா “திருத்தணி” என்று கோவை சரளா வந்திருப்பதை சொல்ல, அதிலிருந்து தொடக்கும் அதிரடி காட்சிகளில் (முக்கால்வாசி காட்சி ஒரே ஷாட்டில் எடுத்து இருப்பார்கள், கவனிக்கவும்), கோவை சரளா கோபித்துக்கொண்டு போக, கல்பனா கமலிடம் கோவை சரளாவை போய் சமாதானப்படுத்துங்கள் என்ற அர்த்தத்தில் “நிக்கிறீங்களே...” என்று சொல்ல, கமல் சீரியஸாக உட்கார்ந்துக் கொள்வார். கொஞ்சம் மொக்கை என்றபோதும், சிரிப்பை வரவைக்கும் நொடி அது.

6. ஏண்டா நீ கூட அலையுறே...

{mosimage}ஹீராவின் பிறந்தநாள் அன்று மனைவிக்கு தெரியாமல் இரவு விருந்தை (ஹீராவையும்) முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்படுவார் ரமேஷ் அரவிந்த். (அந்த காட்சி கூட கொஞ்சம் கிக்காக இருக்கும். சாப்பிட்டு முடித்தவுடன், படுக்கையில் அமர்ந்துக்கொண்டு ரமேஷ் ஹீராவிடம் “பர்த்டே டிரஸ் எங்கே என்று கேட்க, ஹீரா தான் கட்டியிருக்கும் புடவையை காட்டி இது தான் என்று சொல்ல, ரமேஷ் அரவிந்த் “நீ பொறக்கும் போது எந்த டிரஸ்ஸா போட்டிருந்தே” என்று விஷமமாக கேட்க, அதை புரிந்துக்கொண்டு ஹீரா “டாய்” என்று செல்லமாக சினுங்கியபடி ரமேஷ் அரவிந்த் மீது சாய்வார்). பிறகு அவசரம் அவசரமாக வீட்டுக்கு போகும்போது கூட கூட்டிவந்த நாயை மறந்துவிடுவார். பாதி வழியில் ஞாபகம் வந்து திரும்ப போய் நாயை இழுத்துக்கொண்டு வருவார். அப்போது வாக்கிங் போகும் மற்றொருவரின் பெட்டை நாயை பார்த்துவிட்டு ரமேஷின் நாய் சங்கிலியை இழுத்துக்கொண்டு போகும். அதை சிரமப்பட்டு திரும்ப இழுத்து வரும் ரமேஷ் “ஏண்டா நீ கூட அலையுறே..” என்று அங்கலாய்த்துக்கொள்வார்.

கமல்ஹாஸன் - கிரேஸி கூட்டனி எப்போதுமே வெற்றிக்கூட்டணி தான். அவர்களின் நகைச்சுவை சமயத்தில் நாடகத்தனமாக இருந்தாலும், சாதாரண ரசிகர்களால் முதல்முறையிலேயே புரிந்துக்கொள்ள முடியாத subtle-ஆன காமெடி காட்சிகள் நிறைய இருக்கும். அது தான் இந்த கூட்டணியின் வெற்றி ரகசியம். பலமுறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக தோன்றவைக்க கூடிய அற்புதமான யுக்தி. அதனால் தான் “மைக்கேல் மதன காமராஜன்”, “அவ்வை சண்முகி”, ”காதலா காதலா” ஆகிய படங்களை எததனை தடவையென்றாலும் சலிக்காமல் பார்க்கமுடிகிறது.

ஆனாலும் இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது கோவை சரளா தான். சச்சு, மனோரமா வரிசையில் தமிழுக்கு கிடைத்த கடைசி நகைச்சுவையாளினி இந்த கோவை சரளா. ஆனால் தமிழ் திரையுலகம் இவரை மதிக்காமல் விட்டது தான் சோதனை. தான் பெரிய ஹீரோ என்றாலும் தனக்கு ஜோடியாக ஒரு நகைச்சுவை நடிகையை போட்டது கமலின் அபார நம்பிக்கை என்றாலும், கிடைத்த இந்த வாய்ப்பை தவறவிடாமல் ஸ்கோர் செய்தது கோவை சரளாவின் திறமை. ஒரு காட்சியில் கூட தான் ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்கிறோம் என்ற பதற்றம் / குறுகுறுப்பு (intimidation) இல்லாமல் ஜெயித்து இருப்பது சரளாவின் தைரியம். இந்த படத்தின் ஹிந்தி பதிப்பான “பீவி நம்பர் 1”-ல் இந்த பாத்திரத்தை ஏற்று நடித்தது திறமை வாய்ந்த தபூ என்றபோதும், தபூவால் கோவை சரளாவின் நடிப்புக்கு நூற்றில் ஒரு பங்கு கூட எட்டமுடியவில்லை.

இதுவரை {oshits}வாசகர்கள்... இந்த பதிவுக்கு.. Ofcourse உங்களையும் சேர்த்து தான்!!!!

Related Articles