மிக யதேச்சையாக தான் தெரிந்தது - இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள். இசையருவி தொலைகாட்சியில் என் உள்ளம் கவர்ந்த பாடகி சித்ராவின் பேட்டியை பார்த்தபோது தான் தெரிந்துகொண்டேன். சில நாட்களாகவே இசைஞானியின் சமீபத்திய படைப்பான "கண்களும் கவிபாடுதே" படப்பாடல்களை பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து இருந்தேன். இன்று அதற்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இசைஞானியை வாழ்த்த வயதும் அருகதையும் எனக்கு இல்லை, ஆனால் அவர் நீண்டகாலம் ஆரோக்கியத்தோடும், ஆர்வத்தோடும் வாழ்ந்து மேலும் பல படங்கள் பண்ணவேண்டும், என் போன்ற ரசிகர்கள் கேட்டு இன்புறவேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் "கண்களும் கவிபாடுதே" படப்பாடல்களை இதுவரை கேட்கவில்லை என்றால் உடனே கேளுங்கள். இசைஞானியை 80-களில் கேட்ட அதே சிலிர்ப்பு கிடைக்கிறது. மொத்தம் 5 பாடல்கள், அதில் 4 தேவாமிர்தம்.
2. நாளை இந்நேரம்:- ஆனந்த நாராயணன், கார்த்திக், திப்பு ஆகியோர் பாடியுள்ள இந்த பாடலில் முதலில் பளிச்சென்று தெரிவது அப்பா இளையராஜா தான் "... யுவன் சங்கர் ராஜா பாட்டு நிச்சயமுண்டு" என்ற வரிகளில் அவரின் பெருமிதம் தெரிகிறது. அடுத்த நாள் கல்யாணம் நடக்க்ப்போகும் குஷியில் நண்பர்கள் ஆடிப்பாடுவது இந்த பாடலில் முழுசாக நம் கண் முன் விரிகிறது.
3. பொட்டுமேலே பொட்டு வைத்து:- ரொம்ப நாட்களுக்கு பிறகு இயல்பாக ஒரு கிராமத்து சாயலில் வந்திருக்கும் அருமையான பாடல். கிருஷ்ணராஜ், மாலதி ஆகியோர் பாடியுள்ள இந்த பாடலின் இசையமைப்பு நம்மை தமிழிசையின் பொற்காலமான 80-களின் இறுதிக்கு கொண்டுபோகிறது. கேட்க கேட்க புளித்த கள்ளு போல நம்மை ஆட்கொள்ளும் பாடல்.
{mosimage}
4. சொல்லும் வரை காதல் ஈர சிறகு:- திப்பு, மஞ்சரி ஆகியோர் பாடியுள்ள இந்த பாடலின் அழகு அதன் தாளம் (rhythm). தெளிவான வார்த்தைகள், தேன் சொட்டும் மஞ்சரியின் குரல், துள்ளலான இசையமைப்பு - வேறென்னவேண்டும் ஒரு பாடலுக்கு.
5. ஹேய்! மாமு..:- கார்த்திக், ஹரிசரண், திப்பு ஆகியோர் பாடிய இந்த பாடல் வழக்கமான காலேஜ் பாடல் என்பதால் நான் அதிகம் கேட்கவில்லை. அதனால் இதை பற்றி எழுத எனக்கு உரிமையில்லை.
நம் 10வது வகுப்பில் இருந்து 22-23 வயது வரை வரும் பாடல்களுக்கு எப்போதும் நம் மனதில் தனி இடம் இருக்கும். என் அந்த பருவத்தில் இளையராஜாவின் உச்சத்தில் இருந்த்ததால் அற்புதமான பாடல்கள் என் வாழ்க்கையின் அங்கமாக மாறியதில் எப்போதுமே ஒரு பெருமிதம் எனக்கு. இப்போது இசை என்ற பெயரில் இளைய தலைமுறை ஏமாற்றப்படுவதை பார்த்தால் பரிதாபம் தான் மிஞ்சுகிறது.
எப்போது நான் இளையராஜாவை ஆராதிக்க தொடங்கினேன் என்று தெரியவில்லை ஆனால் அது அவரது இசையை கேட்டு, ஊறி திளைத்த பின்பு ஒரு பிரமிப்பில் உண்டானது என்று மட்டும் தெரியும். சொல்லப்போனால் இளையராஜா, கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா, லதா மங்கேஷ்கர் ஆகியோர் வானில் வாழும் இசை தேவதைகளின் அவதாரம் என்று நம்பும் அளவுக்கு அவர்களை பூஜிக்கும் இசை பிரியர்களில் நானும் ஒருவன் என்பதில் சந்தோஷம். குறிப்பாக சித்ராவின் மலையாள பாடலான "கார்முகில் வர்ணண்டே சுண்டில்" (நந்தனம்), கே. ஜே. யேசுதாசின் "பிரமதவனம் வீண்டும்" (ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா) ஆகிய பாடல்களில் உள்ள தெய்வீக தன்மையை உணர்ந்தீர்களானால் நீங்களும் அவர்களை அவதாரங்கள் என்று நம்புவதில் ஆச்சர்யம் இல்லை.
பாடகி சித்ராவுக்கு கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட 15-20 வருடங்கள் கழித்து தான மகள் நந்தனா பிறந்தாளாம். இளையராஜாவிடம் ஆசிர்வாதம் வாங்க குழந்தையை அவர் வீட்டுக்கு கொண்டுசென்றாராம் சித்ரா தம்பதியினர். அப்போது இளையராஜா குழந்தையை பியானோவின் மேலேவைத்து இசைத்து ஆசீர்வாதம் செய்தாராம். சித்ரா பரவசத்தில் அழுதுவிட்டாராம். இந்த நிகழ்ச்சியை படித்தவுடன் எனக்கு மெய்சிலிர்த்தது. இளையராஜாவால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த குழந்தையை நினைத்து பொறாமை படாமல் இருக்கமுடியவில்லை.