எப்போது நான் கடைசியாக ஒரு படம் பார்த்த போது என் கவனத்தை முழுவதுமாக அந்த படத்தின் கதாநாயகி ‘ஹை-ஜாக்’ செய்தது? ம்ம்ம்.... 2006-ல் ‘பரிணீதா’. அதில் படம் முடிந்த பிறகு என் மனதில் முழுவதுமாக வியாபித்தது அனுபவம் வாய்ந்த ‘சஞ்சய் தத்’தோ அல்லது இயக்குநர் பிரதீப் சர்க்காரோ அல்ல. மாறாக எந்த வித பரபரப்பும் இல்லாமல் அறிமுகமான புதுமுகம் வித்யா பாலன். அதற்கப்புறம் இன்று நிதி சுப்பையா. இன்று நான் பார்த்த கன்னட படம் ‘பஞ்சரங்கி ’(2010)-யில் படம் முடியும் தருவாயில் படத்தின் அழகான காட்சியமைப்புகள், கவிதைத்தனமான வசனங்கள், மனதை வருடும் இசை என எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளிவிட்டு என்னை கொள்ளையடித்துப் போனது இதன் நாயகி - நிதி சுப்பையா. நிதியின் இந்த தேவதை அந்தஸ்துக்கு காரணம் - இயக்குநர் யோகராஜ் பட்டின் கதாபாத்திரமா இல்லை தியாகுவின் கேமரா கைவண்ணமா என்று நான் ஆராயப்போவதில்லை.
படத்தில் ஆரம்பத்தில் மினி ஷார்ட்ஸ்களில் வலம் வரும் நிதி, அந்த ஆரஞ்சு பாவாடை சட்டை போட்ட உடனேயே அப்படியே பாந்தமாக மாறிவிடுகிறார். ‘அம்பு’ என்றழைக்கப்படும் சுட்டிப்பெண் அம்பிகாவாக வரும் நிதி, திகாந்த்துடன் காதல் வந்ததும் கோவிலில் உறங்கும் திகாந்த்தை பார்த்துவிட்டு அந்த ஆரஞ்சு பாவாடையை பிடித்துக்கொண்டு படிகளில் இறங்கி தெருவில் தென்றலாய் ஓடும் காட்சி என்ன, அதே போல தூங்குவதாக நடிக்கும் திகாந்த்திடம் தன் காதலை வெளிப்படுத்துவதில் உள்ள நளினமென்ன... அந்த ‘அம்பிகா’ பாத்திரத்துக்கு வேறு யாராவது இந்த அளவுக்கு பொருந்தியிருப்பார்களா என்பது சந்தேகமே. சில பெண்கள் (சரி நடிகைகள்) ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்காகவே பிறந்தவர்களோ என்று தோன்றும். உதாரணம் - ‘ரோஜா’ மதுபாலா, ‘கீதாஞ்சலி’ கிரிஜா, ‘பரிணீதா’ வித்யா மற்றும் ‘மௌனராகம்’ ரேவதி. அதுபோல இந்த ‘பஞ்சரங்கி’ நிதியை பார்த்ததும் இந்த பெண் ‘அம்பிகா’வாக நடிக்கவே பிறந்த பெண்ணோ என்று தோன்றியது.
கர்நாடகத்தின் ‘கூர்கி’ இனத்தை சேர்ந்த நிதி முதலில் “ஃபேர் அண்டு லவ்லி” விளம்பரத்தில் அறிமுகமானாராம். ஆனால் ரேம்ப்புகளில் பிரபல மாடலாக திகழ்ந்தவராம் இந்த பெண். அதற்காக நான் நிதியை பிரமாதமான அழகி என்றெல்லாம் சொல்லமாட்டேன். மிகச்சுமாரான பெண் தான். சொல்லப்போனால் தமிழிலும் (ஜெய் ஆகாஷ் கூட ஒரு படத்தில் நடித்ததாம் இந்த பெண். அவன் படத்தை விட கூட நடிக்கும் நடிகைகள் மீது தான் கண்ணாக இருப்பானாம்) கன்னடத்திலும் எடுபடாமல் போல ‘அட்டு’ ஃபிகர் தான். ஆனால் இந்த படத்தை பார்த்தபோது அந்த பெண்ணின் கடந்த கால குறைகள் எல்லாம் துடைக்கப்பட்டு கொஞ்சம் நல்ல கதாபாத்திரங்கள் இந்த பெண்ணுக்கு கிடைக்கக்கூடும் என்று தோன்றியது. சரி! இந்த பெண்ணை விட்டுவிட்டு படத்தை பற்றிய சில வரிகள்.
”பஞ்சரங்கி” பிரபல கன்னட இயக்குநர் யோகராஜ் பட்டின் நான்காவது வெற்றிப்படம். வழக்கமான யோகராஜ் பட்டின் படங்களை போல சற்றே off beat-ஆன கதைக்களம், wafer thin கதையை மட்டும் நம்பாமல் காட்சிகள் மூலம் படத்தை நகர்த்தும் technique, கண்ணுக்கு குளிர்ச்சியான கேமிரா, மனதை மயக்கும் இசை , கதாநாயகனாக வழக்கமான திகாந்த் மன்சலே என எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியது. வாழ்க்கையின் 5 நிலைகளை பஞ்சவர்னக்கிளியின் இறகுகளோடு ஒப்பிட்டு நகரும் கதை இந்த ”பஞ்சரங்கி”. கதாநாயகனின் அண்ணனுக்கு பெண் பார்க்க வரும் திகாந்த்தின் குடும்பத்தினருக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே உருவாகும் அன்னியோனியத்தை 2 நாள் நிகழ்வாக, அழகாக கொண்டு போயிருக்கிறார் யோகராஜ். படத்தின் கதாநாயகர்கள் என்று பார்த்தால் வசனமும், கேமராவும், இசையும் தான். மங்களூர் வீதிகளும், கடற்கரையும் ஒரு முக்கிய களமாகவே மாறிவிடுகின்றன. அழகான பாடல்கள் - “உடிசுவே (என்னுடைய personal favourite)" மற்றும் “Life இஷ்டேனே” & (படத்தில் இடம்பெறாத) அரே ரே ரே பஞ்சரங்கி” என மொழி புரியாதவர்கள் கூட ரசிக்கக்கூடிய அழகான பாடல்கள் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். இந்த படத்தின் original DVD வெளிவரும்போது கட்டாயம் என்னுடைய collection-க்காக வாங்கிவைப்பேன்.