Miscellaneous
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஏழாம் உலகம்பொதுவாக நான் dark-ஆன நாவல்களை / படங்களையும் படிப்பதை அல்லது பார்ப்பதை தவிர்த்துவிடுவேன். காரணம் அந்த அனுபவங்களிலிருந்து வெளியே வர எனக்கு நாட்கள் பிடிக்கும். அதனால் தான் ரொம்ப நாட்களாக ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலை படிக்காமல் தவிர்த்து வந்தேன். இந்த நாவலை பாலாவின் ‘நான் கடவுள்’ வெளிவந்தபோது தான் முதன் முதலில் கேள்விப்பட்டேன். ‘நான் கடவுள்’ படத்தையே எனக்கு பார்க்க பிடிக்கவில்லை அப்படியிருக்க ‘ஏழாம் உலக’த்தை அவ்வளவு சீக்கிரம் படிக்க தோன்றுமா? எனினும் சமீபத்தில் ஜெயமோகனின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தவுடன் இதனை படிக்க முடிவு செய்தேன். இந்த நாவல் எதை பற்றியது என்று ஏற்கனவே தெரிந்துவிட்டதால் மனதை ஓரளவுக்கு தைரியப்படுத்திக் கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன். எனினும் நான் அந்த குறையிலிகளின் உலகத்துக்கு இழுத்துச்செல்லப்படுவதை தவிர்க்கமுடியவில்லை.

கோவிலுக்கு போகும் போதும் வெளியே வரும்போதும் வழியில் நாம் காணும் உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களுக்கு சில சில்லறைகளை போடுவதோடு நம் கருணையை மெச்சிக்கொள்கிறோம். ஆனால் அவர்களுக்கென்று ஒரு தனி உலகம் இருப்பதை இந்த நாவலின் மூலம் சொல்கிறார் ஜெயமோகன். அந்த உலகத்தில் நாம் வாழும் உலகத்தை போல மக்கள் இல்லை. உயிர் இருந்தும் ”உருப்படிகள்” என்றழைக்கப்படுகின்றனர். அவர்களை நம் உலகத்தவர்கள் உயிரிலிகளாக, மற்றுமொரு பொருட்களாக நடத்தும் ஆபாசத்தை படிப்பவர்களின் மனதில் பாரமேற்றும் வகையில் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன்.

கதை நடப்பதாக கூறப்படும் களம் பழனி. கதையின் நாயகனாக கோவிலில் பூ விற்கும் பண்டாரம் ’உருப்படி’களை வைத்து 'வியாபாரம்’ செய்கிறார். கிட்டத்தட்ட ஒரு கசாப்பு கடைக்காரன் ஆடு மாடுகளை வைத்து வியாபாரம் செய்வது போல. கதை நெடுகிலும் ’உருப்படி’களை வாங்குவதும் விற்பதுமாக நிகழ்கிறது. பண்டாரம் தன் மகள்களை மட்டும் பாசமாக நடத்துகிறார். ஆனால் அதே சமயம் உயிருள்ள ‘உருப்படி’களுக்கு ஒரு பொருளுக்கான மரியாதை கூட தராமல் கேவலமாக நடத்துகிறார்.

கோவிலுக்கு வருபவர்களின் பரிதாபத்தை சம்பாதிக்க அந்த பிச்சைக்காரர்களை ஊனமாகவே வைத்திருக்க செய்யப்படும் செயல்கள் நம்மை பெரிதும் தொந்தரவு செய்பவை. குறிப்பாக கதை ஆரம்பிக்கும்போது முத்தம்மையின் பிரசவம் நடக்கும். ஒரு கை, கால் சூம்பிப்போய் உடல் கண்களுக்கு பதிலாக சதை இருக்கும் முத்தம்மையை மற்ற குறையிலிகளுடன் புணரவைத்து ஊனமுற்ற குழந்தைகளாக பெறவைத்து அவற்றை வைத்து பிச்சை தொழிலை செய்வார்கள். முத்தம்மை பிரசவிக்கும்போது அந்த குழந்தை ‘முழுமை’யாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு ஊனமாக குழந்தைக்கு பால் கொடுக்க மறுப்பாள். ஆனால் பண்டாரம் அவளை காலால் மிதித்து பால் குடுக்க செய்வார். அங்கே ஆரம்பிக்கும் அதிர்ச்சி பாதி நாவல் வரை தொடர்ச்சியாக நமக்கு அடி மேல் அடியாக விழுகிறது. குறிப்பாக எல்லா ‘உருப்படி’களையும் குப்பை குவியல் போல லாரியில் ஏற்றிச்சென்று கொட்டுவதாகட்டும்... உடலுறுப்புக்காக உருப்படியை விற்பதாகட்டும்.. படிக்க ஆரம்பித்த முதல் மூன்று நாட்களுக்கு என்னுள்ளே அவ்வளவு உளைச்சல் & பாதிப்பு.

அடுத்து நாம் அவர்களது உலகத்துக்குள் நுழைந்த பிறகு அந்த மனிதர்களின் சந்தோஷத்தையும், கேலி கிண்டலையும், அனத வியாபார dynamics-ஐயும் அறிகிறோம். அவர்களுக்கு வலி உண்டு.. ஆனால் அது அவர்கள் வாழ்வதை தடுக்கவில்லை. சிரிக்கிறார்கள், அழுகிறார்கள் ஆனால் அதே சமயம் தங்களை சீரழிக்கிறார்கள் என்று தெரியாமல், அவர்கள் வாழ்வின் மீது அவர்களுக்கே உரிமை இல்லை என்பது தெரியாமல் சந்தோஷமாக வாழ்வது படிக்கும் நம் மனதை அசைக்கிறது. தங்களை சீரழிக்கும் முதலாளிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். தங்கள் முதலாளிக்கு குடும்பத்தில் கஷ்டம் என்று வரும்போது தங்களை கேவலமாக நடத்துவதற்கு பலன் என்று சந்தோஷப்படாமல் அவருக்கு ஆறுதல் சொல்கிறார்கள். ஆனால் அவர்களை சுற்றியுள்ள சமூகத்தில் மதிக்கப்படும் மனிதர்களின் மனவக்கிரங்களுக்கு ஆளாகிறார்கள்.

பூசாரி போத்தி முத்தம்மையை நிர்வாணமாக பார்க்க ஆசைப்படுகிறான். கை கால் விளங்காத எருக்கு போலீஸால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறாள். ஆனால் அவளை கன்யாஸ்த்ரீகள் கொண்டு போவதை தடுக்க முதலாளியின் கையாள் முருகன் கட்டும் மஞ்சள் கயிறை தாலியாக ஏற்றுக்கொண்டு அவனை கணவனாக எண்ண ஆரம்பித்துவிடுகிறாள். முத்தம்மையை புணர்ந்து குழந்தைக்கு காரணமான தொரப்பன் அந்த குழந்தையை தொட்டுப்பார்க்க ஆசைப்படுவதும், அது பற்றி இருவரும் பேசிக்கொள்ளும் குழந்தை கொஞ்சல் வசனங்களாகட்டும்.... அவர்கள் சந்தோஷம் படிக்கும் நமக்கு overwhelming-ஆக இருந்து கண்ணீரை வர வைக்கிறது. அது முடுயும் முன்னரே தொரப்பன் உடலுறுப்புக்காக விற்கப்பட்டு தூக்கிச்செல்வது படிப்பவர்களின் துக்கத்தை compound செய்கிறது. சொல்லப்போனால் இரண்டாவது பாதியில் melodrama இல்லாமல் படிப்பவர்களை துக்கிக்கிறார்கள்.

கதையின் போக்கில் ஹிந்துக்கள், கம்யூனிஸம், போலீஸ் என சகட்டுமேனிக்கு எல்லோரையும் ஒரு வாரு வாருகிறார் ஜெயமோகன். சக மனிதர்களை ”சகா” என்று விளிக்கும் கம்யூனிஸ்ட்டு இந்த ‘உருப்படி’ வியாபாரம் செய்வதை ‘முதலாளித்துவம்’ என்று சப்பைக்கட்டு கட்டுவதும், கடவுள் இல்லை என்று சொல்லும் கம்யூனிஸ்டு ஒரு பிச்சைக்காரனை ‘சாமியார்’ என்று முன்னிறுத்தி ஆன்மீகத்தை விற்பதாகட்டும், கர்ப்பகிருகத்துக்குள்ளேயே வெற்றிலையை மென்று துப்பி, சிறுநீர் கழிக்கும் பூசாரி போத்தி... தட்டில் இருநூறு ரூபாய் தட்சிணை போடும் குடும்பத்தினரிடம் extra sweet-ஆக இருக்கும் பூசாரி ஒரு சாதாரண குடும்பம் வரும்போது அவர்களை மிரட்டும் பூசாரி இப்போதும் எல்லா கோவில்களிலும் பார்க்கலாம். அதற்கு பூசாரி சொல்லும் விளக்கம் - ”உனக்கு அது சாமி... எனக்கு 6 அடி கல்.. அதை தொட்டு கழுவி பூஜை செய்வது என்னுடைய தொழில். அவ்வளவே!” அதனால் தான் காஞ்சிபுரம் தேவநாதன்கள் கர்ப்பகிருகத்துக்குள்ளேயே கூச்சமில்லாமல் பல பெண்களுடன் உடலுறவு கொள்ள முடிகிறது.

‘உருப்படி’களை வைத்து விற்கும் பண்டாரம் தீவிர முருக பக்தர். நெற்றி நிறைய திருநீற்றுப்பட்டை அடித்துக்கொண்டு தினமும் முருகனை காணவில்லை என்றால் பதறுகிறார். அவருக்கு தான் செய்யும் வியாபாரம் குறித்து எந்த உறுத்தலும் இல்லை... கிட்டத்தட்ட ஒரு கசாப்பு கடைகாரன் போல. ’உருப்படி’களை உயிருள்ள பிறவிகளாக மதிக்காத பண்டாரம் தன் இளைய மகள் கோவித்துக்கொண்டாள் என்பதற்காக இரவோடு இரவாக தட்டானை எழுப்பி தங்க நகைகளை வாங்கி அவள் கண்விழிக்கும் முன்பு கொடுக்கவேண்டும் என்று துடிக்கிறார். சொல்லப்போனால் சமூகத்தில் எல்லோரும் இந்த வகை சுயநலவாதிகள் தான். இந்த ஊனமுற்றவர்களை வைத்து பிழைக்கும் பண்டாரத்துக்கு குழந்தைகளை கடத்தி கண்ணை நோண்டி விற்கும் கும்பல் கெட்டவர்களாக தெரிகிறது. அந்த வகையில் தங்களை பக்திமான்களாக, நல்லவர்களாக காட்டிக்கொள்ளும் சுயநல மாந்தர்களை சாடுகிறார் ஜெயமோகன்.

முத்தம்மையின் பிரசவத்திலிருந்து ஆரம்பிக்கும் கதை மீண்டும் அவளை வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவதில் முடிகிறது. 18 குழந்தைகளை பெற்று அத்தனை குழந்தைகளையும் பண்டாரம் விற்றுவிடுகிறார். எனினும் முத்தம்மைக்கு குழந்தைகளின் மீதான பாசம் வற்றவே இல்லை. ‘அதுக்கு பால் குடுக்கும்போது நம்ம காம்ப கடிக்கும்போது என்னவோ சொல்வது போல இருக்கும்...” என்று தாய்மையின் சொரூபமாக இருக்கும் முத்தம்மை ஒரு முறை தன் குழந்தையை கவ்வ வந்த நாயை அதன் குரல்வளையை கடித்து கொன்றுவிட்டதை ராமப்பன் ஒரு இடத்தில் சொல்கிறான். தன் குழந்தையை விற்கும்போதெல்லாம் தானும் சாகிறேன் என்று உண்ணாவிரதம் இருக்கும் முத்தம்மையை (ஒரு தடவை பத்து நாள் அன்னம் தண்ணியில்லாம கிடந்தா என்கிறார் பண்டாரம்) ஒரு குறையிலியை பெற்றெடுக்கும் காமதேனுவாக நடத்துகின்றனர். முத்தம்மைக்கு ஒரு ஆசை - ஒரு முறையேனும் ‘முழுமை’யான ஒருத்தனுடன் புணர்ந்து குறையில்லாத குழந்தையை பெறவேண்டும் என்று. ஆனால் முடிவில் அவளுக்கு பிறந்த ஒரு குழந்தையையே அவளுடன் மலங்காட்டில் புணரவைத்து அதை அவள் தடுக்க முயற்சித்தும் முடியாமல் கதறுவதோடு முடிகிறது.

ஏழாம் உலகம் - சம்பவங்கள் என்பதை தாண்டி யோசித்தால் நம் சமூகத்தை பற்றி மணிக்கணக்காக பேசும் அளவுக்கு கருத்துகள் பொதிந்துள்ளன. இது சாதாரண வாசகர்களை சென்றடைய தடையாக இருக்கக்கூடிய அம்சம் என்னவென்று பார்த்தால் இது எழுதப்பட்ட கன்னியாகுமரி தமிழ். மலையாளமும் நாங்குநேரி தமிழும் கலந்து எழுதப்பட்ட எழுத்துநடை நமக்கு பழக கொஞ்சம் சமயம் பிடிக்கிறது. முடிக்கும் போது தான் கவனித்தேன் - நாவலின் முடிவில் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்திருக்கிறார். அடுத்த பதிப்பிலேனும் இதை முதலிலேயே பிரசுரித்தால் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். நவீன இலக்கியங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘ஏழாம் உலகம்’ நாவலை படித்ததையே கொஞ்சம் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். இதன் dark nature-ஐ நினைத்து பயந்து போய் படிக்காமல் விட்டுவிடாதீர்கள். இதை படித்தபிறகு உங்களுக்கு உங்களை சுற்றியுள்ள அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை பார்க்கும் பார்வை மாறலாம். அல்லது நாம் ஓரளவுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று தோன்றலாம். ஆனால் உங்களுக்குள் ஒரு மாற்றம் நிச்சயம்.

புத்தக விவரம்:-
பதிப்பாளர்கள்: கிழக்கு பதிப்பகம், நெ. 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 18.
பக்கங்கள்: 274
விலை: ரூ. 150/-

Related Articles