சமீபத்தில் (கடந்த 2-3 வருடங்களாக) ஏதோ ஒரு வகையில் ஜெயமோகனை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அவரது எழுத்துகளை படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்துக்கொண்டே இருந்தது. எங்கோ அவரது “விஷ்ணுபுரம்” பற்றி கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு அதை படிக்கவேண்டும் என்று தோன்றியது. எனது நண்பர் அண்ணாமலை சுவாமியிடம் ஒருமுறை அவரது எழுத்துக்கள் பற்றி கேட்டபோது “ஜெயமோகனின் எழுத்துக்களில் ஒரு ஆணவப்போக்கு இருக்கும். அது எனக்கு பிடிக்காது” என்று சொன்னார். மேலும் எனது circle-ல் நவீன இலக்கியம் படிக்கு நண்பர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ஜெயமோகனின் எழுத்துக்களை பற்றிய சாமானியனின் கருத்துகள் கிடைக்கவில்லை. இப்படியாக 2-3 வருடங்கள் கழிந்துவிட்டன.
மறைந்த எழுத்தாளர் சுஜாதாவை அடுத்து திரை இயக்குநர்கள் பாலா (நான் கடவுள்), வசந்தபாலன் (அங்காடி தெரு), மற்றும் மணிரத்னம் (கைவிடப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ & தற்போதைய ‘பூக்கடை’) ஆகியோர் விரும்பி நாடும் எழுத்தாளர் என்பது அவரது aura-வை கூட்டிக்கொண்டே போனது. கடைசியில் சமீபத்திய சென்னை பயணத்தில் ஹிக்கின்போத்தம்ஸில் இருந்த அவருடைய புத்தகங்களை துணிந்து வாங்கிவிட்டேன். வாங்கியவை - நாவல்கள் ”உலோகம், ஏழாம் உலகம், விஷ்ணுபுரம்” மற்றும் சிறுகதை தொகுப்புகள் ”மண் & ஆயிரம் கால் மண்டபம்”. இதில் முதலில் நான் படிக்க தொடங்கியது - உலோகம்.
உலோகம் - இது ஈழத்து பின்னணியில் அமைந்த ஒரு சாகச த்ரில்லர் வகை எழுத்து. தைரியம், நம்பிக்கை, துரோகம், கொலை என ஒரு த்ரில்லருக்கு தேவையான அத்தனை ரசங்களையும் உள்ளடக்கிய நாவல் இது. ஈழத்து நாவல் என்ற போதும் இதில் அரசியல் இல்லை என்று முன்னுரையில் ஒரு வாக்கியம் போட்டு தன்னை தற்காத்துக்கொண்டார் ஜெயமோகன் என்று சொல்லலாம். கதை இந்தியாவில் நடப்பதாக எழுதப்பட்டாலும் இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் இலங்கை தமிழர்கள் என்பதால் நாவல் முழுவதும் இலங்கை தமிழில் எழுதப்பட்டுள்ளது. எனினும் உறுத்தவில்லை.
சார்லஸ் என்கிற சாந்தன் என்கிற போராளி ஈழத்திலிருந்து பேர் குறிப்பிடப்படாத இயக்கத்தின் மூலம் இலங்கையிலிருந்து தோணி மூலம் இந்திய கடற்கரையில் இறங்குவதாக ஆரம்பிக்கிறது. பின்னர் சாந்தன் இலங்கை அகதி முகாமில் அடைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து 120 நாட்களுக்கு பிறகு வெளியே வந்து தான் அனுப்பப்பட்ட இயக்கத்திற்காக ஆணையிடப்பட்ட செயல்களை செய்து, கடைசியில் தனது இயக்கத்துக்கு துரோகியாக கருதப்பட்ட பொன்னம்பலத்தாரை கொல்வதோடு இந்த நாவல் முடிகிறது. உண்மையிலேயே த்ரில்லர் வகை நாவல் தான். இது த்ரில்லர் வகையை சேர்ந்தது என்ற போதிலும் ஒரு glamorous / stylish த்ரில்லர் இல்லை. மாறாக ஒரு Off beat வகையை சேர்ந்தது. அது என்ன த்ரில்லர்களில் commercial / off beat என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் 'Drohkaal (Hindi)" மற்றும் “குருதிப்புனல் (தமிழ்)” ஆகிய இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தால் நான் சொல்லும் விஷயம் புரியும். Drohkaal-ன் remake தான் இந்த குருதிப்புனல். ஆனால் குருதிப்புனலில் இருந்த gloss-ம் style-ம் Drohkaal-ல் missing. இதுவும் அதே வகை தான். ‘உலோகத்தில்’ சுஜாதா எழுதும் த்ரில்லர்களை போல style இல்லை எனினும் ஒரு மனித ஆயுத்தத்தின் மனதை அப்படியே பரவவிட்டு படிப்பவர்களுக்கு ஒரு தனி அனுபவத்தை தந்திருக்குறார் ஜெயமோகன்.
கதை முழுவதும் சார்லஸ் / சாந்தனின் பார்வையிலேயே நகர்கிறது. அதனாலோ என்னவோ எனது கற்பனையில் காட்சிகள் கூட அவனது கண்களை கேமிராவாக கொண்டு காட்சிகள் விரிந்தன. கடைசிவரை சாந்தனின் கதாபாத்திரத்துக்கு என்னால் முகம் கொடுக்கவே இயலவில்லை. மேலும் ஜெயமோகனின் எழுத்துகளில் ஒரு மந்திர தன்மை இருக்கிறது. உதாரணத்துக்கு அவர் அகதிகள் முகாமில் வாழ்க்கை முறையை எழுதியிருப்பதும், பனி படர்ந்த டெல்லி அதிகாலையும், ஜென்ஸியுடனான சாந்தனின் உடலுறவும். என்னை போன்ற சாதாரண ரசிகர்களை தனது on the face எழுத்துநடையால் வசீகரத்திருந்தபோதும் பெயரில்லாத அமைப்புகளும், சில கொலைகளுக்கான காரணங்களும் குழப்பமானவை. கணவன் ஜோர்ஜ் இறந்து பத்து நாட்களுக்குள்ளாகவே ஜென்ஸியின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களும், அதை அவள் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்வதற்கான காரணங்கள் சொல்லப்படாததும் கொஞ்சம் உறுத்தல். தமிழ்நாட்டு தமிழர்களுக்கு சினிமா, சினிமா தான் முக்கியம் என்றிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.
ஜெயமோகனின் எழுத்துக்கள் அவ்வளவாக பரிச்சயம் இல்லாதவர்களுக்கு அவரது எழுத்துக்கள் படிக்க ஆரம்பிக்கும்போது அவரது எழுத்துநடை பழக கொஞ்சம் சமயம் பிடிக்கும். அதனால் அவரது சிறுகதை தொகுப்புகளையும், இந்த ‘உலோக’த்திலும் இருந்து ஆரம்பிக்கலாம். நேரடியாக ’விஷ்ணுபுரம்’ படிக்க ஆரம்பித்தால் அவர்களால் 10 பக்கங்கள் கூட தாண்டினால் அது பெரிய விஷயம் தான்.
புத்தக விவரங்கள்:-
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18
பக்கங்கள்: 216
விலை: ரூ. 50/-