இம்முறை சென்னை புத்தக கண்காட்சியில் நான் அதிகம் வாங்கியது ரவீந்த்ரநாத் தாகூரின் படைப்புக்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள். (இம்முறை சென்னை புத்தக கண்காட்சிக்கு போனது பற்றி ஒரு பதிவு இடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன் ஆனால் நேரம் தான் கிடைக்கமாட்டேன் என்கிறது). சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே மாறி மாறி சுற்றிக்கொண்டிருந்ததாலும், புது வீடு ஒழுங்குபடுத்திக்கொண்டிருப்பதாலும், படிக்கவும் அதிகம் சமயம் கிடைக்கவில்லை. எனினும் ஒரு சிறிய புத்தகமாக பார்த்து எடுத்து படித்தேன். அது ரவீந்த்ரநாத் தாகூரின் - சாருலதா. வங்காளத்தில் “நஷ்டநீர்ஹ்” (உடைந்த கூடு) என்ற பெயரில் வெளிவந்து, பின்னர் 1964-ல் திரு. சத்யஜித் ரே அவர்களால் “சாருலதா” என்ற பெயரில் எடுக்கப்பட்டு பல விருதுகளை அள்ளியதாம். இன்றும் தனக்கு மிகவும் திருப்தி தந்த (என்னை அந்த படத்தை மீண்டும் எடுக்க சொன்னால் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே எடுக்கும் அளவுக்கு நிறைவான படம் - சத்யஜித் ரே) படைப்பாக சத்யஜித் ரே-யால் சிலாகிக்கப்பட்ட பெருமை இந்த சாருலதாவுக்கு மட்டுமே உண்டு. இதன் கதை என்ன? உறவுகளில் உள்ள சிக்கல்களை, அதன் complexity-ஐ காமத்தை மீறிய ஈர்ப்பை இயல்பாக சொல்கிறது இந்த குறுநாவல்.
நமது நாயகி - சாரு என்கிற சாருலதா, 1870-ல் ஒரு மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்தவள். நல்ல புத்திசாலி, கலை & இலக்கிய ரசனை கொண்டவள் எனினும் பணக்கார வர்க்கத்தை சேர்ந்தபடியால் ‘வெறுமனே’ வேலையாட்களை வேலை வாங்கிக்கொண்டு பொழுதுபோக்கும் ‘அதிர்ஷ்டம்’ வாய்ந்தவள். அவள் கணவன் பூபதி ஒரு பத்திரிகையை நடத்திக்கொண்டு இருக்கும் workholic. பூபதி மிகவும் யதார்த்தமானவன் ஆனால் சாருவோ கொஞ்சம் கற்பனை உலகத்தில் வசிப்பவள். தன்னையும் தன்னுடைய கலை ரசனையயும் பற்றி பேச ஆள் தேடும் சுபாவம் கொண்டவள். எனினும் சாருவின் மீது இருக்கும் அன்பின் காரணமாக அவளுக்கு பொழுதுபோக வேண்டும் என்று வேலையை காரணம் காட்டி தன் தம்பி அமோல்-ஐ அழைத்து வருகிறான். அமோலுக்கும் சாருவுக்கு வழக்கமான அண்ணி - மைத்துனன் உறவை மீறி ஒரு நெருக்கமான அன்னியோனியம் ஏற்படுகிறது. சாருவின் சகோதரன் பூபதியை ஏமாற்றி பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுகிறான். அமோலும் கல்யாணத்துடன் வந்த மேற்படிப்பு சம்பந்தத்தை ஏற்றுக்கொண்டு வெளிநாடு போய்விடுகிறான். பூபதி தன் வாழ்க்கையை, இளமையை மனைவியுடன் கழிக்காமல் வேலை வேலை என்று இருந்துவிட்டோமே என்று சாருவின் நெருக்கத்தை நாடுகிறான். ஆனால் அமோலின் வெறுமை சாரு வெகுவாக வாட்ட அவள் பூபதி தன்னை impress செய்ய எடுக்கும் முயற்சிகளை பெரிதாக கண்டுக்கொள்ளாமல் தனிமையில் அழுது தவிக்கிறாள். அந்த தவிப்பு பூபதிக்கும் சாருவுக்குமான உறவில் விரிசல் ஏற்படுத்துகிறது.
சாராம்சத்தை படிக்கும்போது ஒரு மூன்றாம் தர soft porn நாவலுக்கான அபாயம் இருந்தாலும் உறவுகளுக்கிடையே இருக்கும் அந்த மென்மையான சிக்கலை (delicacy) லாவகமாக கொண்டுபோயிருக்கிறார் ரவீந்த்ரநாத் தாகூர். சொல்லப்போனால் படிக்கும்போது எந்த வித சலனத்தையும் ஏற்படுத்தாமல், படித்தபின் அதை அசைபோடும்போது நமக்கு பலவித கேள்விகளையும், பரிமாணங்களையும் அளிப்பதே இதன் சிறப்பு. குறுநாவல் என்பதால் பல விஷயங்களை ப்டிப்பவர்களின் interpretation-க்கு விட்டிருப்பது ஒரு intellectual reading-க்கு வழிகோலியிருக்கிறது. குறிப்பாக இந்த நாவலின் பல சம்பவங்களை மீண்டும் மீண்டும் அலசும்போது இதன் ஆழம் நமக்கு புரிகிறது. மனித உறவுகளில் பதி பக்தி, வாத்ஸல்யம், காதல், காமம் இவை அனைத்தையும் தவிர ஒரு அன்னியோனியம், comfort level உள்ள உறவை மனித மனம் நாடுவதை தாகூர் அழகாக சொல்லியிருக்கிறார். சமூகத்தின் பார்வையில், இவை தவறானவையாக தோன்றினாலும் சம்பந்தப்பட்டவர்களின் பார்வையில் இருந்து பார்க்கும்போதே அதன் ஆழம் புரியும்.
இந்த நாவலில் எந்த இடத்திலும் சாருவும் அமோலும் காதலிப்பதாகவோ அல்லது காமம் கொண்டதாகவோ வரவில்லை. என்றாலும் அதையும் தாண்டிய ஒரு அன்னியோன்யம் இருவரிடையே இழைந்தோடுவதை படிக்கும் நாமே உணரலாம். இது காதலா என்பது படிப்பவர்களின் மனநிலை / வளர்ந்த சூழலை பொருத்தது. படிக்கும் நமக்கு அதில் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்தாலும், பூபதியின் கோபத்தையும் நாம் ஆதரிக்கும் மனநிலையில் தான் இருக்கிறோம். தன் மனைவிக்கு தன்னை விட வேறொருவரிடம் அன்பு அதிகமாக இருக்கிறது என்பதை எந்த கணவன் தான் தாங்கிக்கொள்ள முடியும்? மீராவை நாம் கண்ணனின் மிகச்சிறந்த பக்தை எனப்போற்றினாலும், எத்தனை பேர் அவளுடைய கணவனின் நிலையில் யோசித்திருக்கிறோம்? என் மனைவிக்கு என்னை விட கண்ணன் தான் முக்கியம் என்ற நினைப்பு அவள் கணவனுக்கு எவ்வளவு வலியை கொடுத்திருக்கும்? ஏன் கணவன் மனைவி உறவுக்கு போவானேன்? நமது நண்பருக்கு நம்மை விட வேறொரு நபர் தான் மிகவும் விருப்பமானவர் என்பதை நம்மில் எத்தனை பேர் எந்த வித வலியும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளமுடியும்? எனவே பூபதி சாருலதாவுடனான உறவை முறித்துக்கொள்ள முடிவு செய்வது இயற்கையாக இருக்கிறது என்றாலும், கடைசியில் இருவரும் இணைகிறார்கள் என்பதை பூடகமாக நம் யூகத்துக்கு விட்டிருப்பது அழகான கவிதை. என்னை பொருத்தவரை இருவரும் பிரிந்துவிடுகிறார்கள் என்கிற எதிர்மறையான முடிவு கூட அழகான & அர்த்தமுள்ள முடிவு தான்.
இந்த நாவலை பற்றிய விமர்சனங்களை தேடியபோது ”நஷ்டநீர்ஹ்” (தமிழில் ‘சாருலதா’) நாவல் (மொழிபெயர்ப்பு பதிப்பு நான் படித்தது) ’சாருலதா’ என்கிற பெயரில் படமாக்கப்பட்ட போது நாவலை விட அழகாக, இன்னும் அதிகமாக தகவல்கள் சேர்க்கப்பட்டு (உதாரணத்துக்கு - சாரு தன் கணவனுக்கு கைக்குட்டையில் பூவேலை செய்யும் காட்சியின் மூலம் அவனுடன் ஒவ்வொரு வினாடியிலும் உடனிருக்க விருப்பப்படுவது, பூபதி காரில் ஏறுவதை சாரு Opera glass எனப்படும் தொலைநோக்கியின் மூலம் பார்க்கும் காட்சியின் மூலம் இருவருக்குமிடையே தூரம் அதிகமாகிக்கொண்டிருப்பதை symbollic-ஆக உணர்த்தியிருந்தாராம் சத்யஜித் ரே. மேலும் நாவலில் பூபதியின் வயதும், சாருவுக்கும், அமோலுக்கும் இடையிலான வயது வித்தியாசம் பற்றி பெரிதாக ஒன்றும் விவரிக்கப்படவில்லை. ஆனால் திரை வடிவத்தில் இது குறித்து நல்ல வித்தியாசம் காட்டப்பட்டுள்ளதாம்.
மேலும் சத்யஜித் ரேயின் படங்களிலேயே கவிதையான காட்சியமைப்பு கொண்டது இந்த ’சாருலதா’ என்றும் அறிய முடிகிறது. மாதவி முகர்ஜீ (சாருலதா), சௌமித்ரா சட்டர்ஜீ (அமோல்), சைலேன் முகர்ஜீ (பூபதி) ஆகியோரது நடிப்பில் 1964-ல் வெளிவந்த ’சாருலதா’, சத்யஜித் ரேயின் மிகச்சிறந்த படைப்பாகவும், அவருக்கு இரண்டாவது முறையாக பெர்லின் திரைப்பட விழாவின் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி கரடி விருதும், அந்த வருடத்தின் இந்திய தேசிய விருதையும், Acapulco-வின் சிறந்த திரைப்படம் ஆகிய பெற்று தந்ததாம். இந்த படத்தை இணையத்தில் தேடியபோது Google videos-இல் இரண்டு பகுதிகளாக கிடைத்தது. தரவிறக்கம் செய்திருக்கிறேன் பார்க்க தான் சமயம் கிடைக்க மாட்டேன் என்கிறது.