இது எழுத்தாளர் சுஜாதாவின் முதல் நாவலாம். 1968-இல் குமுதத்தில் 14 வார தொடராக வந்திருந்ததாம். நிச்சயம் அந்த காலகட்டத்திய வாசகர்களுக்கு முற்றிலும் புதிய எழுத்து நடையாக, புத்தம் புது படிக்கும் அனுபவமாக இருந்திருக்கும். நீண்ட வாக்கியங்கள் இல்லை, சுற்றி சுற்றி பேசப்பட்ட பெரிய வசனங்கள் இல்லை. மாறாக நறுக்கு தெரித்தாற்போல straight to matter - சிறிய வாக்கியங்கள், விறுவிறுப்பான துப்பறியும் நடவடிக்கைகள், இன்றும் கூட contemporary-ஆக உள்ளது. சுஜாதா தன் முன்னுரையில் இந்த நாவலை தற்போது படிக்கும் போது இன்னும் சில மாற்றங்கள் செய்திருக்கலாம், ஆனால் முதல் முயற்சி என்பதால் அதை மாற்றம் செய்ய விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறார். பம்பாயில் ஒரு பெண்பித்தனான கிருஷ்ணன் கொலை செய்யப்படுகிறான், அதை பிராசிக்யூஷன் அவசரம் அவசரமாக ஹரிணி, அவள் சகோதரன் தேவ் ஆகியோரால் செய்யப்பட்ட ’சொந்தப் பகையால் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று முடிக்க முயல்கிறது. அதை குற்றம் சாட்டப்பட்ட தேவ்-இன் வக்கீல் கணேஷ் சாமர்த்தியமாக உடைத்துவிட்டுகிறான். இந்த கேசை ஒரு ரிட்டையர் ஆகப்போகும் போலீஸ் சூப்பரிண்டெண்ட் ராமநாதன் தன் கடைசி 15 நாட்களில் கையில் எடுத்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கிறார். அந்த வழக்கை ராமநாதன் உடைப்பது படு சுவாரசியம். வயது பெண்கள் தங்களை கிருஷ்ணன் போன்ற பெண்பித்தர்களிடம் எப்படி இழக்கிறார்கள், அதை தொடரும் சட்டவிரோதமான கருக்கலைப்பின் ஆபத்துகளும் இந்த நாவலின் பாடங்கள். கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் துப்பறியும் படம் பார்ப்பது போல விறுவிறுப்பு. இந்த புத்தகம் அவருடைய பயணத்துக்கு ஒரு நல்ல தொடக்கம். இன்று கூட ரசிக்கும் அளவுக்கு காலத்தை தாண்டி நிற்கிறது.
புத்தக விவரம்:-பதிப்பாளர்கள்: விசா பதிப்பகம், சென்னை.
பக்கங்கள்: 144 பக்கங்கள்
விலை: ரூ. 41/-