இது வைத்தியிடம் இருந்து தொற்றிக்கொண்ட பழக்கம். ஏதெங்கிலும் பயணத்தின் நினைவாக புத்தகங்கள் வாங்கி அந்த பயணத்தை பத்திரப்படுத்துவது. இந்த முறை கோவை சென்றபோது சென்ட்ரலில் உள்ள ஹிக்கின்போத்தம்ஸில் வாங்கியது சுஜாதாவின் 'இரண்டாவது காதல் கதை'. இதன் நடை சுஜாதாவின் 'அனிதாவின் காதல் கதை'யை ஒத்திருந்தாளும், இம்முறை கதையின் களம் Board Room Politics-ல் மையம் கொண்டுள்ளது. வாழ்க்கையை பட்டாம்பூச்சியை போல சிறகடித்துக்கொண்டு மகிழ்ச்சியாக நடமாடிக்கொண்டிருக்கும் நிதியின் வாழ்க்கையில் காதல் நுழைகிறது, கூடவே எதிர்ப்புக்களும். வாழ்க்கையை போல கட்டுப்பாடான ஆசானும் இல்லை. நிதியின் வாழ்க்கையில் இரண்டாம் காதல் நுழைகிறது. வழக்கமான தனது விறுவிறுப்பான நடையில், சுஜாதாவின் முத்தியரையோடு ஜிவ்வென பறக்கிறது இந்த 'இரண்டாவது காதல்'.
Page 1
நிதியின் தந்தைக்கு சந்தேகம் வரும் வகையில் ஒரு நாள் காலையில் ஒரு blank call வருகிறது. அவரின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவதை போல நிதி அவளது செல்ல 'டம்போ'வுடன் காதலில் இருப்பது தெரிகிறது. அவளது விருப்பத்துக்கு எதிராக பெங்களூரை சேர்ந்த குமாருடன் திருமணம் நிச்சயிக்கப் படுகிறது. நிதியின் காதலன் திருமணத்துக்கு தயாராக இல்லாததால் நிதி குமாரை மணக்க சம்மதிக்கிறாள். இந்த நிகழ்ச்சி அவளது பெண்மையின் மென்மையை ஓரங்கட்டிவிடுகிறது. தனது வாழ்க்கையை தன் கையில் எடுத்துக்கொள்ளும் நிதி, அதை நேர்படுத்த முயற்ச்சிக்கிறாள்.எனக்கு சுஜாதாவிடம் மிகவும் பிடித்தது அவரது நேரடியான எழுத்துக்கள், without any pretense or pretext. அவருடைய பாத்திரங்கள் இலக்கிய நடையில் யோசிக்க மாட்டார்கள். மனதிலிருந்து யோசிப்பதைவிட புத்தியிலிருந்து யோசிப்பவர்கள். எனவே அவர்களுடைய நடவடிக்கைகளில் ஒரு வேகம் இருக்கும், அதை படிக்கும்போதே நமக்கு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இந்த முறை அவர் எடுத்துக்கொண்டுள்ள பின்புலம் Boardroom Politics எனப்படும், நிர்வாக பிரச்சனைகளும், அதை சார்ந்த நிகழ்வுகளும். Shares மற்றும் Board of Directors, இவர்களது நடவடிக்கைகளும், அவை கம்பெனியின் செயல்திறனில் ஏற்படுத்து தாக்கங்களும், எளிய தமிழில், எந்த ஒரு சாமானியரும் புரிந்துக்கொள்ளும் வகையில் கதையை நகர்த்திகொண்டு போய் இருக்கிறார்.
பொத்தாம் பொதுவாக பார்த்தால் இது 'பூவொன்று புயலான' கதை தான். தான் தெளிவாக முடிவெடுக்காத காரணத்தால், தன் தந்தை தேர்ந்தெடுக்கும் கயவனுக்கு வாழ்க்கைப்படும் நிதி, இனி மூலையில் அழுதுகொண்டு அமர்ந்திருப்பதில் பயனில்லை என்று தன் தந்தைக்கு எதிராக Board Room-ல் களம் இறங்குகின்றாள். அந்த மெல்லிய பெண் புலியாக மாறும் பரிமாற்றம் மிக நேர்த்தியாக, convincing-ஆக சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு வகையில் இந்த நாவல் எழுதப்பட்ட காலக்கட்டத்தை வைத்து, இதை ஒரு coming of the age novel என்று சொல்லலாம். சுஜாத நிதியை தன்னுடைய 'பிரிவோம் சந்திப்போம்' நாயகியுடன் ஒப்பிட்டு கால மாற்றத்தை விளக்குகிறார்.
கதையில் நிதியின் பாத்திரம் மிகவும் பலமாக அமைந்துள்ளது. ஆனால் என்னை பொறுத்தவரை இயல்பாக அமைந்தது என்றால் அது நிதியின் தந்தை கதாபாத்திரம் தான். ஒரு சராசரியான தந்தையை, அந்த பணக்கார பகட்டை, அடிபட்டவுடன் சீறும் சிங்கம் போல தன் மகளிடம் மோதுவதை மிக நேர்த்தியாக படைத்து நம் கண் முன் உலாவ விட்டிருக்கிறார் சுஜாதா. இந்த கதையின் மிகவும் பலவீனமான பாத்திரப் படைப்பு என்றால் அது குமார் தான். அசத்தலான அறிமுகத்தோடு சரி, பிறகு ஒரு சொத்தையான வில்லனாக அடிபட்டு சாமார்த்தியத்திலோ அல்லது வில்லத்தனத்திலோ சோபிக்காமல் போய்விடுகிறான்.
நிஜ கதா நாயகன் என்றால் அது சுஜாதா தான். மனிதர் வேகத்தை எழுத்துக்களில் கலந்துகட்டி, நம்மை புத்தகத்தை கீழே வைக்க முடியாமல் செய்து விடுகிறார். நான் பொதுவாகவே ஒரு நாளைக்கு 40-50 பக்கங்களுக்கு மேலே படிப்பதில்லை என்று வைத்திருக்கிறேன். காரணம் தினமும் படிக்கவும், படித்ததை அசைபோடவும், நான் வேகமாக படிக்கும் பழக்கத்துக்கு ஒரு வேகத்தடை போட்டு வைத்து இருக்கிறேன். ஆனால் வெகு சில புத்தகங்களுக்கு இந்த கொள்கை தளர்த்தல் நடக்கும். இந்த 'இரண்டாவது காதலு'க்கும் கொள்கை மீறல் நடந்தது. இந்த அத்தியாயத்தோடு மூடி வைக்கலாம், இன்னொன்று மட்டும் என்றே நான் கிட்டத்தட்ட முழு வீச்சில், ஒரே மூச்சில் முடித்துவிட்டேன்.