ஐய்யோ!!! ஒரு இடத்துக்கு போய்வந்த அனுபவதை எழுதுவதற்கு நேரமில்லை... காரணம் உடனே அடுத்த பயணம் அமைந்து விடுகிறது என்று செல்லமாக அலுத்துக்கொள்ளும் அளவுக்கு சமீபத்தில் பயணங்கள் அமைந்து வருவது கடவுளின் அனுக்கிரகம் என்று தான் சொல்லவேண்டும். சில பயணங்கள் ‘சரி’ என்ர ஒற்றை வார்த்தையில் திடீரென்று அமைந்துவிடுவதுண்டு. மதுரை போய்வந்த அடுத்த வார இறுதியில் ரயிலில் சேலம் போய்க்கொண்டு இருந்தோம். அப்போது யதேச்சையாக ஹொகேனக்கல் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அகிலா ‘நாளைக்கு ஒகேனக்கல் போகலாமா?’ என்றாள். எனக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே உரைக்கவில்லை. பின்பு சுதாரித்துக்கொண்டு ‘சரி’ என்று சொன்ன உடனே அடுத்த பயணத்திட்டம் முடிவானது. பெரிசுகள் இல்லாமல் சிறிசுகள் பட்டாளம் மட்டும் கிளம்புவது என்பது எனது முடிவு. வீட்டில் என் அம்மா, அண்ணி எல்லாம் மிக ஆர்வமாக கிளம்ப தயாராக, கொஞ்சம் கஷ்டப்பட்டு அவர்களை “இம்முறை வேண்டாம்... நாங்கள் அங்கே இடத்தை அறிந்துக்கொண்டு வருகிறோம், நாம் அடுத்த முறை சிரமமின்றி போகலாம்” என்று சொல்லி சமாளித்து சென்றோம்.
சேலத்திலிருந்து நேரடி பஸ்கள் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றுமாக தான் இருக்கிறது என்பதால் தருமபுரி சென்று அங்கே இருந்து அடுத்த பஸ் பிடித்துக்கொள்ளலாம் என்று முடிவானது. நான், அகிலா, புட்டு சிங், மணிகண்டன், நந்தினி & மணிகண்டன் என குழந்தைகள் பட்டாளமாக கிளம்பினோம். அன்று பௌர்ணமி என்பதால் தருமபுரி பஸ்நிலையத்தில் பயங்கர கூட்டம். ஒரு கும்பல் மேட்டூருக்கும், மற்ற கும்பல் ஒகேனக்கலுக்கும் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கஷ்டப்பட்டு பிள்ளைகளுக்கு இடம் பிடித்து உட்காரவைத்துவிட்டு ஃபுட்போர்டு அடித்து போனோம். தருமபுரியில் இருந்து கிட்டத்தட்ட 40 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒகேனக்கல் காட்டுப்பகுதியில் நுழைந்ததும் பயணம் கொஞ்ச தூரம் பள்ளத்தாக்கில் பயணிக்கிறது. ஜப்பான் அரசின் உதவியுடன் வளர்ந்துவரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரம்மாண்டம் நம்மை பிரமிக்க வைக்கிறது. வழி நெடுக ஆள் உயர விட்டத்துக்கு உலோக குழாய்கள் தண்ணீர் கொண்டுசெல்ல அடுக்கப்பட்டு வருகின்றன. கூட வந்தவர் அந்த உலோக குழாய்களை எப்படி உள்ளே சென்று வெல்டு செய்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு வந்தார்.
ஒரு வழியாக ஒகேனக்கல் பஸ்நிலையத்தில் நாங்கள் உதிர்க்கப்பட்டோம். புது இடமாதலால் எந்த பக்கம் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அப்போது தான் முதலில் தனியாக வந்திருக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். பிள்ளைகளையும், குழந்தையையும் இழுத்துக்கொண்டு அங்கங்கே விசாரித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். அருவிக்கு அருகே சாப்பாடு கிடைக்காது என்று யாரோ ஒருவர் கொளுத்திப்போட, அதை நம்பி பஸ் நிலையம் அருகே இருந்த ஒரு கடையில் மொத்தமாக பரோட்டாக்களை அள்ளிக்கொண்உ போனோம். ஆனால் அருவியை நெருங்கும்போது வழி நெடுக நிறைய சாப்பாட்டு கடைகள். இங்கேயே வந்து சுடச்சுட சாப்பிட்டிருக்கலாமே என்று நொந்துப்போனோம்.
வழியெங்கும் ”மசாஜ் செஞ்சுக்குறீங்களா?”, “பரிசிலில் ஏறுங்க”, “சாப்பாடு செஞ்சு போடனுங்களா?” என பலவித inquiries. அவற்றை கடந்து அருவிகளுக்கு அருகே வந்தோம். அன்று பயங்கர கூட்டம். எனினும் அத்தனை பேரையும் accomodate செய்யும் அளவுக்கு இடங்கள் உள்ளன. ஒரு ஒதுக்குப்புறமான பாறையில் உட்கார்ந்து எங்கள் ஜலக்கிரீடையை தொடங்கினோம். இது எதிர்பாராமல் கிளம்பிய பயணம் என்பதால் கேமிரா இல்லை. அதனால் எங்கள் மொபைல் கேமிராவில் முடிஞ்ச அளவுக்கு பதித்தோம். அந்த தண்ணீர் பிரவாகத்தில் கிட்டத்தட்ட 2 மணி நேரம், எல்லோரும் தண்ணீரிலேயே ஊறிக்குளித்தோம். புட்டு சிங் கூட பயங்கரமாக enjoy செய்தான். அவன் enjoy செய்வதை பார்த்தபோது எங்கள் சந்தோஷம் பலமடங்காக பெருகியது.
நாங்கள் சென்றது நண்பகல் என்பதால் வெயில் கொளுத்தியது. அதிலிருந்து தப்பிக்க தான் இந்த ஜலக்கிரீடைகள். எங்கள் திட்டப்படி ஒரு 3:30 - 4:00 P.M வரை தண்ணீரில் கிடந்துவிட்டு பிறகு ஓரளவுக்கு வெயில் தாழ பரிசிலில் சுற்ற கிளம்பவேண்டும். ஆனால் அதற்குள் மணிகண்டன் நூறு தடவையாவது அருவிக்கு போகனும் என்று அடம்பிடிக்க ஒரு 3:00 மணி வாக்கில் பரிசிலில் ஏறக்கிளம்பினோம். அழகாக organised-ஆக பரிசில்கள் நமக்கு ஒதுக்கப்படுகிறது. மூங்கிலில் நெய்யப்பட்டு, அடிப்பக்கம் தார் கொண்டு பூசப்பட்டு கிட்டத்தட்ட 10 அடி விட்டத்தில் அமைந்துள்ள அதிகபட்சமாக 10 நபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாங்கள் ஐந்து பேர் இருந்ததால் எங்களை equal space-ல் உட்காரவைத்து கிளம்பினார் பரிசில்காரர். தலைக்கு ரூ. 110/- என்ற வீதத்தில் (புட்டு சிங் உட்பட) கணக்கிடப்பட்டு கரையிலேயே பணம் வாங்கிவிட்டார்கள்.
முதலில் ஒரு 5 நிமிட பயணத்துக்கு அப்புறம் நம்மை இறங்க சொல்லிவிட்டு, பரிசிலை தலையில் சுமந்துக்கொண்டு அருவியின் அடிப்பாகத்துக்கு நடந்து செல்கிறார் பரிசில்காரர். பிறகு மீண்டும் தண்ணீரில் பயணம். நாங்கள் சென்ற சமயம் பயங்கரமாக தண்ணீர் வரத்து இருந்த காரணத்தால் பாறைகளில் மேலே முக்கால் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டன. பரிசில்காரர் “நீங்கள் off season-ல் வந்திருந்தால், இங்கே தண்ணீர் மட்டம் குறைந்து பாறைகள் எல்லாம் செங்குத்தாக இருக்கும். அப்போது நமக்கு அண்ணாந்து பார்க்குமளவுக்கு அருவி உயரத்தில் இருந்து விழும். அது ஒரு தனி அனுபவம்” என்று சொன்னார். அதுவுமில்லாமல் தண்ணீர் மட்டம் உயர்ந்துவிட்டதால் கீழே பாறைகளிடையே அமைந்த இயற்கை குகைகள் மூழ்கிவிட்டன, பின்னொரு சமயத்தில் வந்தால் பார்க்கமுடியுமாம்.
எங்களுக்கு வந்த பரிசில்காரரிடம் ஒரு comfort level வந்துவிட்டது. அவர் பெயர் மணி என்று சொன்னார். மணி எங்களை சில குட்டி குட்டி அருவிகளில் அடியில் பரிசிலை நிறுத்தி எங்களை நனையவைத்தார். தண்ணீர் அத்தனை வேகமாக நம் தலையில் செல்லமாக மொத்துவது ஒரு சிலிர்ப்பான அனுபவம். ஆதி கூட அந்த அருவியில் நனைந்தான். பாறைகளில் ஏறும்போது மணி புட்டுவை தூக்கிக்கொண்டு நடந்தார். குழந்தையும் அவரிடம் ஒட்டிக்கொண்டான். ஆற்றின் நடுவில் பரிசிலை பம்பரம் போல சுழற்றிக்காண்பித்தார் மணி. வழியில் ‘ராவணன்’ பாறை, ‘இணைந்த கைகள்’ பாறைகள் என ஒவ்வொன்றாக காட்டினார். பின்பு பரிசில் வெண்ணையில் வழுக்கிக்கொண்டு செல்வது போல கர்நாடக எல்லையை நோக்கிப்போனது.
கர்நாடக எல்லைக்கு கொஞ்சம் முன்பு கிட்டத்தட்ட beach போல ஒரு பெரிய மணல்மேடு இருக்குமாம். ஆனால் அப்போது தண்ணீர் அதிகமாக இருந்ததால் அன்று மணல்மேடு இல்லை. அதனால் ஒரு பாறை அருகில் கொண்டுபோய் நிறுத்தினார். அகிலாவும், குழந்தைகளும் மீன் சாப்பிடவேண்டும் என்று பிரியப்பட்டார்கள். நல்ல பெரிய மீன், பொறிக்கப்பட்டது ஆனால் பேரம் பேசவேண்டியிருக்கிறது. தண்ணீரில் நனைந்ததால் வந்த மயக்கம், கூடவே பரிசில் சுழற்சியில் ஏற்பட்ட கிறக்கம், கொஞ்சம் தணிந்த வெயில் எல்லாம் ஒன்றாக சேர்த்து கண்ணை சுழற்றியடிக்க, அதற்கு இந்த மீன் நல்ல சேர்த்தி. பரிசில் நேரடியாக அருவிக்கடியில் கொண்டு சென்றதால், பரிசிலிலும் தண்ணீர் தேங்கிவிட்டுருந்தது. கூடவே எங்கள் பையும் நனைந்து போய்விட்டன. இனிமேல் போகும்போது பைகள் எல்லாவற்றையும் கரையிலேயே வைத்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டோம். தண்ணீரில் நனைந்ததால் வந்த மெல்லிய மயக்கம், மாலை வெயிலின் கிறக்கம், மணி பரிசிலை தட்டாமாலை போல சுற்றியது எல்லாம் சேர்ந்து எங்களை கிட்டத்தட்ட ஒரு சொர்க்கத்துக்கே கொண்டு சென்றது.
http://onlinegalatta.com/index.php/travel/81-nature/556-2013-04-02-00-34-12#sigProIde1173a9027
வெளியே வந்து உடை மாற்றிக்கொண்டு பஸ் நிலையத்துக்கு வந்தோம். நம் தமிழ்நாட்டு போக்குவரத்து துறையின் கையாலாகாதத் தனத்தை அங்கே பார்க்கலாம். அவ்வளவு சுற்றுலா பயணிகள் வந்துபோகும் இடத்துக்கு கூடுதல் பஸ்கள் விட்டால் வருமானத்துக்கும் வருமானம், பயணிகளுடைய வசதிக்கு வசதி. வந்து செல்பவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். ஆனால் மணிக்கொரு பஸ் வந்துக்கொண்டிருந்தது. வரும்போதே நிறைமாத கர்ப்பினி போல முழுவதுமாக ரொப்பிக்கொண்டு வந்தது. வெறுத்துப்போய் நாங்கள் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் அந்த காட்டுப்பாதையில் நடக்க ஆரம்பித்தோம். எதிரில் வரும் பஸ்ஸை நிறுத்தி ஏறிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டோம். மாலை நேரமாதலால் வந்த சுற்றுலா பயணிகள் எல்லாம் திரும்ப தொடங்கியிருந்தனர். அவர்களில் முக்கால்வாசி பேர் தண்ணியடித்துவிட்டு வந்துக்கொண்டிருந்தனர். இருட்டும் வேளை, கையில் குழந்தை, கூட மது, நந்தினி இருவரும் சின்ன பெண்கள். குழந்தை இல்லாதபோது யாராவது வம்பு பண்ணினால் கூட தைரியமாக சண்டை போடலாம், ஆனால் அந்த சூழலில் புட்டுவை வைத்துக்கொண்டு பயங்கர handicapped - ஆக feel செய்தேன். இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் ‘தைரியமாக’ நடந்துக்கொண்டிருந்தேன்.
ஒரு பிக்கப் வண்டியில் கிட்டத்தட்ட 10 பேர் நின்றுக்கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், சுற்றுலா வந்திருக்கிறார்கள் போல தோன்றியது. எங்கள் நிலைமையை பார்த்து வண்டியை நிறுத்திய போது அந்த ஓட்டுநர் trip அடித்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது. அந்த பிக்கப் வண்டியில் open air-ல் நின்று பயணம் செய்ததும் ஒரு வித்தியாச அனுபவம். பெண்ணாகரம் வந்து சேர்ந்து, பின்ன்ர் ஒரு மணி நேரம் காத்திருந்து தருமபுரி பஸ் பிடித்து, ஒரு வழியாக சேலம் வரும்போது இரவு மணி பத்து. இந்த சிரமங்கள் இந்த ஒகேனக்கல் பயணத்தின் இனிமையை கொஞ்சம்போல அழித்தாலும், மொத்தத்தில் பார்க்கும்போது நல்ல அனுபவமாக தான் இருந்தது. இனிமேல் ஒகேனக்கல் வரவேண்டும் என்றால் சொந்த வண்டியில் தான் வரவேண்டும் என்று தெரிந்துக்கொண்டோம். ஜூலை / ஆகஸ்ட்டில் அதாவது கர்நாடகத்தில் மழை நின்ற பிறகு மீண்டும் வரவேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். அப்போது தான் தண்ணீர் மட்டம் குறைவாக, பாறைகள் நெடுநெடுவென வளர்ந்திருக்கும் அந்த பிரம்மாண்டத்தை அனுபவிக்க முடியும் என்று தோன்றியது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!!!!
{oshits} வாசகர்கள் இந்த பதிவை படித்துள்ளனர்!!!