கல்லூரியில் காதல்... சோதனைகள் வந்தபோதும் விடாது இணைந்து நின்று கல்யாணம் செய்த காதலர்கள்.. கணவன் தன் படிப்பை முடிக்கட்டும், அதுவரை அடுப்பெரிய நான் வேலைக்கு போகிறேன் என்று யதார்த்தத்தை உணர்ந்த துணிச்சலான காதல் மனைவி ... அவள் ஆசைப்படியே கணவனுக்கு வேலை கிடைக்கிறது. கஷ்டங்கள் எல்லாம் முடிந்தது என சென்னைக்கு சென்று தன் கல்யாண வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று சந்தோஷத்தோடு பிறந்தநாளுக்கு ஆடை எடுக்க சென்றவர்களுக்கு விதி வேறு பரிசளிக்கிறது. அவள் கண் முன்னே அவள் காதல் கணவன் மூன்று அடியாட்களால் நடுத்தெருவில் கொல்லப்படுகிறான். இது ஏதோ சினிமா கதை அல்ல.. சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் நடந்த கொடூரம். கல்லூரியில் படிக்கையில் காதலித்து மணந்த சங்கர் - கௌசல்யா ஆகியோரின் கண்ணீர் கதை இது.
இங்கு வில்லன் பொருளாதாரமோ இல்லை கல்வியோ அல்ல. தேவர் பெண்ணை காதலித்த தலித் பையன் என்பதே காரணம். கடந்த மூன்று வருடங்களில் தமிழகத்தில் நடந்த 81 கௌரவ கொலைகளில் இது கடைசி. இதுவே கடைசியாகவும் இருந்துவிடக்கூடாதா என்ற ஆதங்கத்தை நசுக்கும் இதன் ஆதரவு குரல்கள். சமூக வலைகளில் தேவர் சாதி வெறியர்களின் கொக்கரிப்பு நம் சமூகம் எங்கே போகிறது என்பதை காட்டுகிறது. இதற்கு முன்பு ஈரோடு பள்ளிப்பாளையத்தில் கௌரவ கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கேசில் அந்த இளைஞனை கொலை செய்த யுவராஜ் சரணடைய வந்தபோது ஏதோ உலகை ரட்சிக்க வந்த தலைவன் ரேஞ்சுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதும், தர்மபுரியில் கடைசியில் "தற்கொலை" செய்துக்கொண்ட இளவரசன் கேஸில் பா.ம.க கட்சியின் தலையீடும் அனைவரும் அறிந்ததே.
என்ன தான் கல்வியறிவு வளர்ந்தாலும் இன்னும் நம்மிடையே பொறுக்காதத்தனம் இருப்பதே பல பிரச்சனைகளுக்கும் காரணம். தாழ்ந்த சாதிக்காரன் பொருளாதாரத்தில் தாழ்ந்தே இருந்தால் உயர்ந்த சாதிக்காரன் அவனை அரவணைத்து செல்லும் பெருந்தன்மையுடன் இருப்பான். ஆனால் தாழ்ந்த சாதிக்காரன் படித்து பொருளாதார ரீதியில் முன்னேற ஆரம்பித்தால் அதை ஜீரணித்துக்கொள்வது உயர்ந்த சாதிக்காரர்களுக்கு கஷ்டமாகவே உள்ளது. 'அவன் பூர்வீகம் எனக்கு தெரியாதா" என்று ஆரம்பித்து அங்கலாய்த்துக் கொள்வதிலிருந்து சாதி வெறி வெளிப்பட ஆரம்பிக்கிறது.
கல்வி அறிவு பெருக பெருக சாதி ஒழியும் என்று பாரதியார் மற்றும் பெரியாரின் நம்பிக்கை கடைசியில் அவநம்பிக்கையாக விஸ்வரூபமெடுப்பதை பார்க்க மட்டுமே என்னால் முடிகிறது. கல்விக்கும் சாதி ஒழிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை வருடந்தோறும் பெருகிவரும் ஜாதிக்கட்சிகள் நிரூபிக்கின்றன. சாதி பிரச்சினை என்று சொல்லும்போது அனைவரும் உயர்ந்த ஜாதி மற்றும் தலித்துகள் என்று மட்டுமே நினைக்கின்றனர். ஆனால் சாதி வெறி என்பது எல்லா இடங்களிலும் உள்ளது. 7 கோடி தமிழர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பிராமணர்களாக மட்டும் இருப்பது என்? ஐ.டி துறையில் 'உயர்ந்த சாதி' மேலாளர்கள் தங்கள் டீம் மெம்பர்களை தேர்ந்தெடுப்பதும், அப்பரைசல் செய்யும் முறையும் எல்லோரும் அறிந்ததே. இதுவும் ஒரு வகையில் சாதி வெறித்தனம் தானே? இதை எந்த தமிழ் பத்திரிகைகளும் பேசாது. அதற்கும் காரணம் நிங்கள் யூகிக்கக்கூடியதே.
இதை எல்லாம் நினைத்து பொறுமுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத கையாலாகாத மனிதன் நான். என் குடும்பம் வரை என்னால் சாதி பற்றிய ஈடுபாடு இல்லாமல் செய்யமுடியும். ஆனால் இந்த சமூகத்தை என்னால் மாற்ற முடியாது. அதனால் என்னால் தன் கணவனை இழந்து வாடும் அந்த இளம்பெண் கௌசல்யாவுக்காக பிரார்த்திப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. கடவுள் அந்த பெண்ணுக்கு இந்த துயரத்தில் இருந்து மீண்டுவர தைரியம் கொடுக்கட்டும்.