இணையத்தில் கிடைக்கும் "virtual"நட்புக்கள் குறித்து பலவித கருத்துக்கள் நிலவி வந்தாலும், நம் இணையவாசிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிச்சயம் ஒரு "virtual" நண்பராவது வந்து நம் வாழ்க்கையை அசைத்துப்பார்த்திருப்பார்கள். Yahoo-வும், AOL, ICQ எல்லாம் தத்தமது புகழின் உச்சியிலிருந்த நேரத்தில் நான் அவற்றில் எல்லாம் இருந்ததே இல்லை. ஆனால் எனது வலைப்பதிவுகளை தொடங்கிய பின்பு எனக்கு சில நண்பர்கள் கிடைத்தார்கள்.
எப்படியோ விதிவசத்தால் எனது பதிவுகளை படித்துவிட்டு மெனக்கட்டு தங்கள் கருத்துகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க, நான் நன்றி தெரிவித்து பதிலளிக்க... இப்படி ஆரம்பித்த தொடர்பு காலத்துக்கும் நீடிக்கும் நட்பாக வளர்ந்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நாங்கள் சந்தித்து வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் கிட்டத்தட்ட எங்கள் தினப்படி வாழ்க்கையில் நடப்பது மற்றவர்களுக்கு தெரிவித்துக்கொண்டு இருப்போம். இப்படிப்பட்ட ஒரு சிநேகிதியை பற்றி சொல்லவேண்டும்.
எனது ஒரு பதிவில் நான் புட்டுவை (ஆதி) கொஞ்சும் வீடியோவை போட்டிருந்தேன். அந்த பதிவை பார்த்துவிட்டு அந்த தோழி ''பூவே பூச்சூடவா"" படத்தில் வரும் 'இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே சென்று நான் சேர வேண்டும்... பாச ராகங்கள் பாட வேண்டும். 'என்ற வரிகளை தன் கருத்தாக கமெண்ட்டில் போட்டுவிட்டு, எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தான் கருவுற்றிருப்பதாகவும், குறிப்பிட்ட எழுத்தில் சில பெண் குழந்தைகள் பெயர்களை பரிந்துரைக்க முடியுமா?? "என்று எழுதியிருந்தார். நான் அதற்கு பதிலளிக்கவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் மின்னஞ்சல் அனுப்பியதற்கு நான் பதிலளிக்கையில் மீண்டும் பதிலாக தன் பெண் குழந்தைக்கு வைத்திருந்த பெயரை தெரிவித்தார். இப்படியாக தொடங்கியது அந்த சிநேகிதியின் நட்பு.
அதற்கு பிறகு எனது பதிவுகளுக்கு அவர் கருத்து தெரிவிப்பதும், பின்னர் நாங்கள் Gtalk-ல் அவ்வப்போது உரையாடிக்கொள்வதும், எப்போதாவது அலைபேசியில் பேசிக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது. எங்கள் இருவருக்கும் கிட்டதட்ட ஒரே ரசனை, அலைவரிசை . புத்தகங்கள், வலைப்பதிவு எழுதுவது, பயணங்கள், இலக்கியம், கட்டிடக்கலை என எங்கள் உரையாடல்கள் எல்லாமே ஒருவர் நினைப்பதை மற்றவர்கள் சொல்வது போலவே இருக்கும். சில காலங்களுக்கு பிறகு எங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்துக்கொள்ள ஆரம்பித்தோம்.
இணையத்து நட்பில் இந்த anonymity ஒரு வசதி. முகம் பார்க்காமல் உரையாடும்போது நாம் நம் நெருங்கிய குடும்பத்தினரோடு பகிர்ந்துக்கொள்ள தயங்கும் விஷயங்களை கூட தயக்கமில்லாமல் பகிர்ந்துக்கொள்ள முடிகிறது. எதிர்பக்கத்தில் இருப்பவர்கள் நம் சூழலை advantage-ஆக எடுத்துக்கொள்ளாத நண்பராக கிடைத்துவிட்டால் அவர்களது முகம் முக்கியமில்லை. அவரது மண வாழ்க்கையில், தினசரி அலுவலகத்தில் உள்ள பிரச்சனைகளை என்னிடம் சொல்வார். நான் எனக்கு தெரிந்த வரையில் அறிவுரைகள் சொல்வேன். சில சமயம் அவரது பக்கம் நியாயம் இருக்கும். சில சமயங்களில் அவரது எதிர்பார்ப்புகள் impractical-ஆக இருப்பதால் ஒரு ஆணின் பக்கத்து பார்வையை / கருத்தை சொல்வேன். எனது பிரச்சினைகளை அவரிடம் சொல்லும்போது அவர் மூலமாக "பெண்" perspective கிடைக்கும்.
அவரும் நானும் நாங்கள் வேலை மாறும்போது, onsite போகும்போது மற்றவர்களுக்கு தெரிவிப்போம். புது வேலை, புது ஊர் அனுபங்கள் ஆகியவற்றை பகிர்ந்துக்கொள்வோம். ஏதேனும் சந்தோஷமான நிகழ்வு நடந்தால் பகிர்ந்துக்கொள்ள விரும்பும் நெருங்கிய நண்பர்கள் வரிசையில் அவரும் ஒருவர். இத்தனைக்கும் நான் அவரை ஒரே ஒரு முறை தான் சந்தித்திருக்கிறேன், அதுவும் பொது இடத்தில் வைத்து காஃபி குடித்துக்கொண்டு. ஆனாலும் என் நெருங்கிய நண்பர் வரிசையில் அவர் இருக்கிறார், ஒரு Goodluck charm ஆக. இந்த பதிவு அவருக்கு dedication.
இவ்வளவு சிலாகிக்கும் தோழியை ஏன் அடிக்கடி சந்திக்க முயலவில்லை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. என்ன தான் நெருங்கிய நட்பாக இருந்தாலும் நமது சமூகத்தில் ஆண் பெண் நட்பு என்பது மிகவும் delicate-ஆக தான் இருக்கிறது. மற்றவர்கள் பார்வையில் இந்த நட்பு ரசாபாசமாக படலாம். கோவையில் இருந்தபோது அலுவலகத்தில் ஒரு நெருங்கிய தோழி இருந்தார். அவருக்கு கல்யாணம் ஆன பின்பு அவரது புகுந்த வீட்டுக்கு போன பிறகு ஒரு நாள் நான் அவருக்கு போன் செய்தபோது அவர் பேசிய விதம் ஏண்டா அவருக்கு போன் செய்தோம்? என்று நொந்துக்கொள்ளும் அளவுக்கு இருந்தது. ஆரம்பத்தில் எனக்கு வருத்தமாக இருந்தாலும் அவர் பார்வையில் அவருக்கு என்ன சூழ்நிலையோ என்ற பரிதாபம் தான் தோன்றியது.
அதே அலுவலகத்தில் இருந்த ஒரு அக்காவும் என்னோடு நன்றாக பேசுவார். பின்னர் நான் வெளிநாடு போன பின்பு வருடம் ஒருமுறை கோவை வரும்போது எல்லாம் அலுவலகத்துக்கு போய் எனது பழைய நண்பர்களை பார்ப்பது வழக்கம். அந்த முறை எனக்கு அலுவலகத்துக்கு போகமுடியாத நேர பற்றாக்குறை. அதனால் அக்காவை பார்க்க கிராஸ்-கட் கடைதெருவுக்க்கு போனேன். அவர் ஏதோ ஷாப்பிங் பண்ணவேண்டும் என்பதால் ஆர்.எஸ்.புரம் செல்லவேண்டும் என்பதால் உடனே கிளம்பவேண்டும் என்றார். எனக்கும் ஷாப்பிங் பண்ணவேண்டிய திட்டம் இருந்ததால் நான் அவரிடம் நானும் வருகிறேன் என்று அவரை எனது இருசக்கர வண்டியில் அழைத்துக்கொண்டு போய் ஆர்.எஸ்.புரத்தில் ஷாப்பிங் முடித்துக்கொண்டு அவரவர் வீட்டுக்கு போய்விட்டோம்.
அதிர்ஷ்டவசமாக அடுத்த ஓரிரு நாட்களில் எனது பழைய அலுவலகத்துக்கு செல்ல நேரம் கிடைத்தது. ஒரு மதிய நேரத்தில் அலுவலகம் சென்று எல்லாரையும், அந்த அக்கா உட்பட, பார்த்து உரையாடிவிட்டு கிளம்பிய நேரத்தில் அந்த அக்கா மெதுவாக "அன்னைக்கு அம்மா கிட்டே நான் மகேஷோட வண்டியில பின்னால உட்கார்ந்துகிட்டு போனேன்னு பயந்துகிட்டே சொன்னேன்... அதுக்கு அம்மா இந்த தடவை பரவாயில்லை.. ஆனா முடிஞ்ச வரைக்கும் இதையெல்லாம் தவிர்க்க பாருன்னு சொன்னாங்க" என்றார். எனக்கு எப்படி react செய்வதென்று தெரியவில்லை. அதற்கப்புறம் அக்காவை அலுவலகத்தில் எல்லாரோடும் வைத்து பார்ப்பதோடு சரி. அதற்காக அவர் மீது கோபம் எல்லாம் இல்லை. பெண்களுக்கே உள்ள பிரச்சினைகள் போல என்று ஒதுங்கிக்கொள்கிறேன்.