நமக்கு ரொம்ப பிடித்தவர்களை நாம் விட்டு போகும்போது கூட அவ்வளவு வருத்தம் தோன்றாது ஆனால் அவர்கள் நம்மை விட்டுப்போகும்போது ஏற்படுத்தும் வலி இருக்கிறதே..... என்னடா இவனோடு ரோதனையாக போய்விட்டது? இப்படி அடிக்கடி ரம்பம் போடுகிறானே என்று நீங்கள் பல்லை அரைக்கும் முன்பு சொல்லிவிடுகிறேன். கடந்த வாரம் என் மாமனார் வந்து சில நாட்களுக்கு என் மனைவியையும் குழந்தையும் தன்னோடு அழைத்துச் சென்றார். என் மனைவியோடு எங்கள் குழந்தை புட்டுவும் போகும்போது செம ஃபீலிங்க்ஸ்... ஒரு வாரம் பல்லைக் கடித்துக்கொண்டு ஓட்டிவிட்டு அவர்களை அழைத்துவர வெள்ளிக்கிழமை இரவே சேலம் கிளம்பிவிட்டேன். புட்டு சிங்கை பார்த்தவுடன் கிளம்பிய உற்சாகம் இருக்கிறதே.. அது தந்தைகளுக்கு மட்டுமே புரியும் பேரின்பம். மழலை செல்வம் தந்த கடவுளுக்கும், நலமாக பெற்றெடுத்து கொடுத்த என் மனைவிக்கும் நன்றி சொல்ல தோன்றியது. நன்றி! நன்றி! நன்றி!
நாளைய நிகழ்வை பற்றி இன்று ஏன் வருத்தப்பட்டுக்கொண்டு இந்த கணத்தை அனுபவிக்காமல் போகவேண்டும்? இந்த நிமிஷத்தில் புட்டுவின் சிரிப்பும், வளர்வதை பார்ப்பதிலும் கிடைக்கும் இன்பத்தை நாளை என்ன நடக்குமோ என்ற சிந்தனையில் தொலைக்க விரும்பவில்லை. சமீபத்தில் கல்யாணம் ஆன என் நண்பர்களுக்கு நான் சொல்வது இது தான் - ”வேலை வேலை என்று கவலைப்பட்டுக்கொண்டு குழந்தை பெறுவதை தள்ளிப்போடாதீர்கள். Don't trade off your baby for profession. ஒரு குழந்தை வந்தவுடன் நமது வாழ்க்கை முழுமை பெறுவதை நாம் கண்கூடாக உணரமுடியும்”. அதனால் தான் என்னுடைய Orkut Status Message-ல் “Aadhi makes my life complete" என்று எழுதி வைத்திருக்கிறேன். இதுவரை இருந்த எனது அந்த ‘carefree attitude' எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை.
அப்புறம்...... எவ்வளவு நாளுக்கு தான் வெறுமனே ஜான் ஆபிரஹாமின் உடம்பையும், அனுஷ்கா ஷெட்டியின் இடுப்பையும் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டு இருப்பது? அவர்கள் அளவுக்கு perfect-ஆக இல்லையென்றாலும் எனக்கும் கொஞ்ச நாளாவது பட்டையான வயிறு வேண்டும் என்று முடிவெடுத்து எங்கள் அலுவலகத்தில் உள்ள ஜிம்முக்கு போக ஆரம்பித்தேன். நான் வேலை செய்வது UK shift என்பதால காலையில் போகமுடியாது. மாலையில் (UK Lunch time) போகலாம் என்று முடிவு செய்து மேலதிகாரியிடம் அனுமதியும் வாங்கி போக ஆரம்பித்தேன். இது என் சக ஊழியர்களுக்கு கொஞ்சம் ’வேலை கலாச்சார அதிர்ச்சியாக’ இருந்திருக்கிறது. ஜாடை மாடையான கேலிப்பேச்சுகள், வேலையில் விசுவாசமாக இருந்தால் அது எப்படி வேலை நேரத்தில் போக தோன்றும் என்றெல்லாம் ‘அதிர்ச்சி’ காட்ட, நான் எதையும் கண்டுக்கொள்ளாமல் work out செய்துவந்ததில் நல்ல பலன்.
ஒரே மாதத்தில் 4 கிலோ குறைந்து தொப்பை ஓரளவுக்கு இளைத்துவிட, இப்போது அதே சகஊழியர்கள் “வேலை அது பாட்டுக்கு போய்க்கொண்டு தான் இருக்கும்... நம் உடம்பை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு அவர்களும் நேற்றிலிருந்து ஜிம்மில் சேர்ந்ததில் எனக்கு வெற்றிப் பெருமிதம். நான் செய்வது நல்லது / தவறில்லை என்று உணரும் பட்சத்தில் மற்றவர்களுடைய பேச்சுக்களுக்கு மதிப்பு கொடுத்து peer pressure-இல் buckle down ஆகாமல் இருந்து அவர்களையும் என் கருத்தில் உடன்பாடு ஏற்பட செய்தது என்னுடய சுயமரியாதைக்கான வெற்றி.
என் முன்னாள் கம்பெனியில் இருந்தபோது சக ஊழியர் அனீஸ் ஒருமுறை “உங்களுடைய வேலை அல்லாத மற்ற திறமைகளை (வரைவது, ப்ளாக் எழுதுவது) வேலை இடத்தில் காட்டிக்கொள்ளாதீர்கள். அது உங்கள் மீது உள்ள அபிப்பிராயத்தை / seriousness-ஐ dilute செய்துவிடும்” என்று சொன்னார். இந்த ஆபீஸுக்கு வந்த புதிதில் நான் என்னுடைய மற்ற ஆர்வங்களை பற்றி ஒன்றும் பேசியதில்லை. ஆனால் எங்கள் அலுவலகத்தில் internal blogs வைத்து எழுதுபவர்களை ஊக்குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களே எழுது என்று சொல்லி ஒரு platform கொடுக்கும்போது ஏன் நம்மை restrict செய்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இப்போது என் சக ஊழியர்களுக்கு நான் எழுதுவதும், வரைவதும் தெரியும். அனீஸ் சொன்னது போல அவர்களுக்கு “கலை ரசனை உள்ளவர்கள் வேலையில் கவனமாக இருக்கமாட்டார்கள்” என்று ஆரம்பத்தில் இளக்காரமாக பார்த்தாலும், போகபோக தங்கள் அபிப்பிராயங்களை மாற்றிக்கொண்டுவிட்டார்கள். மாறவேண்டியது நாம் அல்ல... நம்மை பற்றிய மற்றவர்களின் தவறான் அபிப்பிராயமே. நம் தவறுகளை திருத்திக்கொள்ளலாம், ஆனால் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்று நம்மை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் கடைசி வரை நம்முடைய வாழ்க்கையை நாம் வாழமாட்டோம் என்பது எனது அபிப்பிராயம். நமக்கு நாமே சுயமரியாதை செய்யவில்லை என்றால் மற்றவர்கள் எப்படி நம்மை மதிப்பார்கள்?
இதை படித்துள்ள வாசகர்களில் எத்தனை பேர் எனது அபிப்பிராயத்துடன் ஒத்துபோகிறார்களோ?