{mosimage}என்றோ எங்கோ ஏதோ வழிப்பயணத்தில் படித்த சில கதைகள் நம் மனதில் புதைந்து காலத்துக்கும் பாரம் கொடுக்கும். சிலவற்றை அதை எழுதியவர்களே கூட மறந்திருப்பார்கள், ஆனால் படித்த நம் மனதில் நங்கூரம் பாய்ச்சி தங்கியிருக்கும். சமீபத்தில் என் தோழி ஒருத்தி ஒரு குறுஞ்செய்தியினை (SMS) அனுப்பியிருந்தாள். படித்த கணத்தில் அது சொல்லமுடியாத ஒரு வலியை தந்தது. Lateral thinking என்பது போல அந்த கவிதைக்கு பல வளமையான சூழல்களை உருவகப்படுத்திக்கொள்ள முடியும் என்ற போதும், மனதில் பதிந்த முதல் பிம்பம் என்றும் நிலைத்து நிற்கும். என்னை பாதித்து மனதில் தங்கியவை பெரும்பாலும் வறுமை பற்றியவையே. எனக்கு அவள் அனுப்பிய அந்த குறுஞ்செய்தி (SMS) இதோ.....
அடுத்த நாள் பரிட்சை என்பதால் அல்ல..
பௌர்ணமி என்பதால்...
இதை இதை படித்தவுடன் என் மனம் கற்பனை செய்த அந்த வறுமை என்னை சற்று கட்டிப்போட்டது. ஔவையார் சொன்னதுபோல இளமையில் வறுமை மிக கொடியது. பலரது வாழ்வை மாற்றுவது இந்த இளமை வறுமையே.
அவள் ஒரு முதிர்கன்னி. இல்லாத வீட்டில் பிறந்ததனால் வரதட்சினை கொடுத்து புகுந்த வீடு போக முடியாத சூழ் நிலை. நேற்று வந்து பார்த்த வரனும் கேட்ட 5 பவுன் நகையும் 10 ஆயிரம் ரூபாயும் தர முடியாததால் இந்த இடமும் குதிராது என்ற வருத்தத்தில் இருந்தாள். உச்சிப்பொழுது... வீட்டில் யாரும் இல்லாத நேரம்.. வாசலை அடைத்துவிட்டு, பாத்திரங்களை ஒழித்துவிட்டு வீட்டு முற்றத்தில் அசதியுடன் குளிக்க போனாள்.
திடுமென யாரோ வீட்டின் ஓட்டு கூறையிலிர்ந்து குதித்தார்கள். பதறி எழுந்த அவசரத்தில் மார்பில் தூக்கிக் கட்டிய பாவாடை அவிழ்ந்து விழுந்தது. எவனோ திருடன் களவாடி தப்பித்து ஓடுகையில் தவறி இவர்கள் வீட்டு முற்றத்தில் விழுந்து விட்டான். ஒரு நிமிடம் பயந்து அதிர்ச்சியில் உறைந்துபோனாள். வாயிலிருந்து சத்தம் வரவில்லை. பின்பு சற்று சுதாரித்தவள் கொடியிலிருந்து துணியை இழுத்து போர்த்தவும் தோன்றாமல் அவனை வெறித்து பார்த்தாள். அவன் அவளை பிறந்த மேனியில் மேலும் கீழும் பார்த்துவிட்டு மீண்டும் சுவர் ஏறி குதித்து ஓடினான்.
தன்னை ஒரு முறை பார்த்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டாள் - திருடனுக்கு கூட தன்னை திருட தோன்றவில்லையே என்று.
வறுமையால் திருமணமாகாத அந்தப் பெண்ணின் ஏக்கம் வெகு நாட்களுக்கு என்னை பாதித்தது. இது நான் 9வது -10வதில் இருந்தபோது குமுதத்தில் படித்த சிறுகதை.
நடிகர் பார்த்திபன் எழுதிய 'கிறுக்கல்கள்' சமீபத்திய ஹைக்கூக்களில் சில நல்லவற்றை உள்ளடக்கியுள்ளது. என்னை மிகவும் பாதித்த ஹைக்கூ இது. exact-ஆக இதே வார்த்தைகளா என்று நினைவில்லை ஆனால் தற்கொலையை சாடும் அதன் சாரான்ஸம் இது தான்.
வாழ்ந்தென்ன கண்டோம்..?
இறந்து தான் பார்ப்போமே...!
இறந்தென்ன சாதித்தோம்..?
கொஞ்சம் வாழ்ந்து தான் பார்ப்போமே..!
கடந்த வருடம் தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான வாய்பேச முடியாத மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க தொடரப்பட்ட பொது நல வழக்கு என்னை மிகவும் தொந்தரவு செய்தது. பாவம் அந்தப்பெண், தனக்கு பலாத்காரம் நடந்தது கூட தெரியவில்லை. தெரிந்தாலும் சொல்ல வாய் இல்லை. இவளை போன்ற underprivileged மக்கள் மீது பரிதாபப்படவில்லை என்றாலும், இது போல கொடுமை புரிவதற்கு எப்படி தான் மனது வருகிறதோ?
{mosimage}