இப்போது முடிவெடுக்க வேண்டிய முக்கியமான தருணத்தில் நான் நிற்கிறேன். எந்த ஒரு சராசரி இந்திய ஆணை போல நானும் திருமணம் என்ற பந்தத்தில் பற்றும், நம்பிக்கையும் கொண்டு இருந்தேன். ஆனால் கடந்த சில மாதங்களாகவே ஏனோ திருமணத்தின் மீது ஈடுபாடு குறைய தொடங்கியது. ஒருவேளை என் வாழ்க்கை நான் விரும்பிய திசையில் போகவில்லை என்ற வெறுப்பின் தொடர்ச்சியாக, ஒருவேளை திருமண வாழ்க்கையும் அது போல ஆனால் என்னாவது என்கிற விரக்தியாகவும் இருக்கலாம். இல்லை நான் பார்த்த வரையில் 99% தம்பதிகள் ஒரு கட்டத்துக்கு மேலே தாங்கள் சந்தோஷமாக இருப்பதாக ஒரு போலியான / civil facade - ஐ உருவாக்கி, ஒரே கூரைக்குள் இரு துருவங்களாக, ஒரே படுக்கையில் கூட உறங்க முடியாமலே, சலிப்புடன் வாழ்ந்த்து வருவது, எனக்குள் கல்யாணத்தின் மேல் ஒரு பயத்தை உருவாக்கி இருக்கலாம். எது எப்படியோ.. நான் தனியாளாக வாழ்வதாக முடிவெடுத்துவிட்டேன்.
என் பெற்றோர்களுக்கு என் முடிவு தீர்க்கமானது என்று தெரியும்போது சற்று அதிர்ச்சியாக கூட இருக்கலாம். ஆனால் சமுதாயத்திற்காக கல்யாணம் செய்து காலம் முழுவதும் அலுப்புடன் வாழ்வதற்கு பதிலாக அவர்களுக்கு என் பக்கத்து நியாயத்தை சொல்லி புரியவைப்பதே மேல் என்று தோன்றுகிறது. சமுதாயம் திருமணமாகாத ஆண்களிடமும் / பெண்களிடமும் சற்று கொடூரமாகவே நடந்த்து கொள்கிறது. ஒரு பரிதாப பார்வையும், பின்னொரு நாளில் என்னவாக இருக்கும் என்கிற அதீத கற்பனைகளும், பின்னே "அவர்களுக்கு தேவை தான்.." என்கிற ஒரு நக்கல் விமர்சனங்களும்... இவை எல்லாமே நான் கண்டது, நான் செய்ததும் தான்.
ஆனால் சமுதாய நெறிமுறைகளுக்கெதிராக தனியாக முடிவெடுத்து, அப்படியே இருப்பதற்கும் ஒரு தைரியம் தேவைப்படுகிறது. குறிப்பாக ஒரு விழா, காட்சிகளுக்கு போகும்போதும், "ஐயோ, இன்னும் கல்யாணம் ஆகலையா?.." என்ற பச்சாதாபம் தொனிந்த கேள்விகளுக்கும், ராசி பார்க்கும்போதும், நம்மை காப்பாற்றிக்கொள்ள ஒரு கவசம் தேவைப்படுகிறது. பலர் இந்த கேள்விகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மௌனிகளாக மாறிவிடுவதை பார்த்திருக்கிறேன். எனக்கு தெரிந்த பல நண்பர்கள் தனியாளாக இருப்பதையும், அவர்கள் சந்தோஷமாகவே இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.
வழக்கமாக கல்யாணத்திற்க்கு சொல்லப்படும் காரணம் என்று பார்த்தால் - ஒரு துணை வேண்டும். நாளைக்கு நமக்கு வயதாகும்போது நம்மை பார்த்துக்கொள்ள பிள்ளைகள் வேண்டும். நமக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல், நமக்கு உடம்புக்கென்று ஏதும் வந்துவிட்டால் நம்மை கவனித்துக்கொள்ள ஆள் இல்லாததை நினைத்து ஒரு மன அழுத்தம் வரும். ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால் என்னை பொருத்தவரை இந்த பிரச்சினைகள் சந்தர்ப்பவசமாக கல்யாணம் ஆகாதவர்களுக்கு பொருந்தும்.
என்னால் என்னை தவிர மற்றொருவரை முற்றிலுமாக நேசிக்கமுடியவில்லை. எனவே ஒரு துணை அவசியம் என்று தோன்றவில்லை. நம்மை பார்த்துக்கொள்ள பிள்ளைகள் வேண்டும் என்கிற வாதத்தில் சற்று உடன்பாடு இல்லை. நான் உன்னை வளர்க்கிறேன், நீ பிற்காலத்தில் என்னை காப்பாற்ற வேண்டும் என்றால் அது வியாபாரம் தானே? அதற்க்காகவே பிள்ளைகளை பெறுவானேன்? அவர்களை வளர்க்கும்போது வரும் எல்லா வலிகளையும் தாங்குவானேன்? அதற்கு பதிலாக ஒரு நல்ல retirement plan-ல் பணத்தை போட்டால், நல்ல வட்டி வருமே? திருமணம் செய்யாமலிருந்த்தால் எனக்கு அங்கீகரிக்கப்பட்ட உடலுறவு கிடைக்காது, ஆனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லையே? மெல்ல மெல்ல சிதைந்து வரும் குடும்ப பந்தங்களில் மாட்டாமல், நமக்கு பிடித்தது போல வாழவும் ஒரு துணிச்சல் வேண்டும்.
எனக்கு திருமணம் தான் வேண்டாம் தவிர, குழந்தைகள் மிகவும் பிடிக்கும். நான் கட்டாயம் பிள்ளைகளை வளர்க்கவேண்டும்... எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி. நான் என்னால் இயன்றவரை இந்த சமுதாயத்திற்கு சில நன்மைகளை செய்யவேண்டும். சில குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். வசதி இல்லாத ஆனால் நன்றாக படிக்ககூடிய மாணவர்களுக்கு அவர்களின் கனவுகளை மெய்ப்படுத்த வேண்டும். ஏதோ வாழ்ந்த்தேன், இறந்தேன் என்று போகாமல் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தரவேண்டும். திருமணம் இது போன்றவற்றை அனுமதிக்காது.
இந்த முடிவிற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம், emotional blackmails நடக்கலாம். ஆனால் என் முடிவு மாறக்கூடாது.. மாறாது.