பொதுவாக கமல்ஹாசன் - கிரேஸி மோகன் காம்பினேஷன் படங்களை (குறிப்பாக சதிலீலாவதி, மைக்கேல் மதன காமராஜன்) பார்க்கும்போது கடைசியில் கிளைமேக்ஸில் கதைக்கு சம்பந்தமில்லாமல் ஒரு சேஸ் காட்சி வரும். பார்க்க சுவாரசியமாக இருந்தாலும் ”படம் அப்போவே முடிஞ்சிடுச்சே”ன்னு தோன்றும். இன்னும் சில புத்தகங்களையோ, திரைப்படங்களையோ படிக்கும்போது / பார்க்கும்போது, இந்த கடைசி 20 பக்கங்கள் / 10 நிமிடங்கள் இல்லாமல் இருந்திருந்தால் இது classic-ஆக இருந்திருக்கும் என்று தோன்றும். இதே நினைப்பு / தோன்றுதல் சில உறவுகளிலும், நட்பினிலும் தோன்றலாம். ஒருவேளை இந்த நட்பு / உறவு முன்பே முடிந்திருந்தால் அது காலத்துக்கும் நினைத்து நினைத்து சிலாகிக்ககூடிய நிகழ்வாக இருந்திருக்கும் என்று தோன்றும். நமக்கு மிகவும் பிடித்திருந்த சிலரை ஒரு பிரிவுக்கு பிறகு சந்திக்கும்போது இவர்களை மீண்டும் சந்திக்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றும். ஒரு உறவுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அதை தொடர்வதிலேயே மட்டுமல்ல, அதை விட்டு விலகுவதிலும் கூட இருக்கிறது.
அவன் எனது மிகவும் நெருக்கமான கல்லூரி நண்பன். அவனோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு பரவசமான தருணங்கள் தான். ஒருமுறை அவனிடமே சொல்லியிருக்கிறேன் - ”இப்படியே இன்னைக்கே செத்தா கூட நான் சந்தோஷமா சாவேன்”. அந்த அளவுக்கு அவன் மீது crazy-ஆக, possessive-ஆக இருந்திருக்கிறேன். ஆனால் கல்லூரி முடியும் தருவாயில் எங்கள் பிரிவு acromonious-ஆக நிகழ்ந்தது. அதற்கப்புறம் 7 வருடங்கள் கழித்தே அவனை மீண்டும் சந்தித்தேன். இந்த ஏழு வருடங்களில் முதலில் சில வருடங்கள் அவன் மீது வெறுப்பிலும், அடுத்த சில வருடங்கள் அவனை என்னால் வெறுக்க முடியாது என்ற உண்மையை ஒத்துக்கொள்ள மறுக்கும் denial statge-லும், அடுத்த சில வருடங்கள் - “நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி புதிதாக தொடங்கலாம்” என்று மனசு பட்டிமன்றங்கள் நடத்தி அவனை ஒரு பொது இடத்தில் வைத்து பார்த்தபோது அவ்வளவு சந்தோஷம்.
எங்கள் தொலைபேசி உரையாடல்கள் பெரும்பாலும் எங்கள் careers-ஐ பற்றியே இருக்கும். அவன் சொந்த தொழில் செய்து வந்ததால் அவ்வப்போது கடன் கேட்பான். அவன் கேட்கும் தொகை அளவுக்கு இல்லையென்றாலும் ஏதோ முடிந்த தொகையை கொடுப்பேன். அது திரும்ப வராது. ஒரு முறை கொடுத்த கடனை அவனது கல்யாணத்துக்கு மொய்-யாக தள்ளுபடி செய்தேன். அடுத்த முறை அவன் ஆசைப்பட்ட gadget-ஐ வாங்கிக்கொள்ள தள்ளுபடி செய்தேன். மூன்றாம் முறை கொஞ்சம் பெரிய தொகை கேட்டான். என்னிடம் அவ்வளவு கொடுக்கும் அளவுக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் என் வீட்டில் அவனுக்காக பரிந்து பேசப்பட்ட காரணத்தால் ஒரு தொகையை கொடுத்தேன். அவனது பேங்க்கில் போட்டுவிட்டேன் என்று நான் சொல்ல அவனை தொலைபேசியில் அழைத்தேன். அது தான் நாங்கள் கடைசியாக பேசியது. பின்னர் எனது அழைப்புகளுக்கு, குறுஞ்செய்திகளுக்கு, மின்னஞ்சல்களுக்கு பதில் இல்லை. நான் அவனை பழைய பாசத்தில் மீண்டும் தொடர்பு கொண்டேன் ஆனால் அவனுக்கு நான் இன்னுமொரு “கடன் கொடுக்கும் இடம்” என்பது தாமதமாக தான் புரிந்தது. அவனுக்கு கொடுத்த தொகையை மீண்டும் ஏதோ காரணம் சொல்லி மனது தள்ளுபடி செய்துவிட்டாலும், அதற்கு எனது “நட்பு” பலி கொடுக்கப்பட்டது வலித்தது. ஒருவேளை நான் அவனை மீண்டும் தொடர்பு கொள்ளாமல் இருந்திருந்தால் அவன் episode “கல்லூரி காலத்து மிகச்சிறந்த நட்பாக, எப்போதும் நினைத்து நினைத்து சிலாகிக்கும் இனிய உறவாக" முடிந்திருக்கும். இப்போது அதற்கு வாய்ப்பில்லை.
இந்த அடுத்த கதையும் அது போல தான். இவனை ஒரு சமூக வலைத்தளத்தில் தான் பார்த்தேன். கிட்டத்தட்ட என்னுடைய மறுபிம்பம் போல இருந்தான் - ஓவியம், இலக்கியம், sentimental என எல்லாவற்றிலும். அதனாலேயே நாங்கள் முதல் உரையாடலிலேயே ஒட்டிக்கொண்டோம். பின்னர் வேலை விஷயமாக அவனது ஊருக்கு நான் சிலகாலம் போகவேண்டியிருந்தது. அவனிடம் நான் கொஞ்ச நாளுக்கு உன் ஊரில் இருப்பேன் என்று சொன்னேன். சந்தோஷமாக வரவேற்றான். அந்த கொஞ்ச நாட்கள் மிக மிக இனிமையானவை. வேலை முடிந்தபோது ஐய்யோ!!! என்று மனது அரற்றியது. ஊரிலிருந்து கிளம்புகிறேன்... மனசு கனத்துகிடந்தது. அதனால் எந்த உணர்ச்சியும் இல்லாமல் numb-ஆக இருந்தது. பேருந்து ஊரைவிட்டு வெளியேறிச் சென்றுக்கொண்டிருக்கும் போது அவனிடமிருந்து அழைப்பு. “போயிட்டு வாங்க மகி” என்றான். நான் எதுவும் பேசாமல் “ம்...” என்றேன். அதற்கு அவன் “போயிட்டு ‘வாங்க’ன்னு சொன்னேன்” என்று ’வாங்க’வுக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து சொன்னான். விட்டால் அழுதுவிடுவேன் போல தோன்றியது. ஊருக்கு வந்தபிறகு அந்த வேலையில் ஒரு extension வர, இது.. இது.. இதைத்தான் எதிர்பார்த்தேன் என்பது போல மீண்டும் அதே ஊருக்கு ஓட, இம்முறை அவனிடம் இருந்து பயங்கர cold response. என்னை சந்திப்பதையே தவிர்த்தான். மீறி ஒருமுறை நேரில் சந்தித்தபோது ஏதேதோ காரணம் சொன்னான், தன் வாழ்க்கை மீது தனக்கே வெறுப்பாக இருப்பதாக சொன்னான், என் மீது அசாதாரணமாக எரிந்து விழுந்தான். எனக்கு ஏன்டா அவனை பார்க்க முயற்சித்தோம் என்று தோன்றியது. வேலை முடிந்து ஊரைவிட்டு வந்தபோது மீண்டும் வலியுடனேயே வந்தேன், ஆனால் காரணம் வேறு. Ofcourse சில வருடங்களுக்கு பிறகு அந்த ஊருக்கு போனபோது மீண்டும் பார்த்தோம், இரண்டடி தள்ளி நின்றே பேசிக்கொள்கிறோம். எனக்கு அவன் மீது எந்தவித வெறுப்பும் இல்லை, அதே சமயம் எதிர்பார்ப்புகளும் இல்லை. ஆனால் இந்த கதை “போயிட்டு ‘வாங்க’”வுடனேயே முடிந்திருந்தால் அற்புதமான episode-ஆக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
ஆனால் எல்லாத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பது போன்ற நடந்த இந்த கதை தான் என்னை மேலும் மேலும் பற்றற்ற நிலைக்கு கொண்டுபோகிறது. இந்த நண்பர் தான் என் வாழ்க்கையில் வந்த நண்பர்களிலேயே எனக்கு மிகவும் மதிப்பிற்குரியவர். பொதுவாக நண்பர்களுக்கு என்று எது செய்வதானாலும் practical-ஆக ஒரு எல்லைக்குள்ளேயே இருந்து செய்யமுடியும். ஆனால் இவர் மட்டும் தான் ‘out of the way' சென்று என்னை மிகவும் comfortable-ஆக இருக்க செய்தார். வேலை விஷயமாக அவர் ஊருக்கு சென்றபோது ஆரம்பத்தில் அவர் வீட்டில் தங்கவைத்துக்கொண்டு எனக்கு ஊட்டிவிடாத குறையாக குழந்தை போல பார்த்துக்கொண்டார். நான் சில நாட்கள் கழித்து வெளியே அறையெடுத்து தங்கிக்கொள்கிறேன் என்றபோது “அந்த பேச்சே கூடாது” என்று என்னை நிறுத்திவிட்டார். எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தபோது நான் ஆர்வ மிகுதியால் செய்த ஒரு காரியம் எல்லாவற்றையும் குலைத்துவிட்டது. சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் சங்கடமும், கஷ்டமும் கொடுத்தது நான் செய்த வேலை. நல்லது செய்யப்போ அந்த நண்பர் தர்மசங்கடமாக நின்றது இன்னும் வேதனையாக இருக்கிறது. காலப்போக்கில் பிரச்சனைகள் தீர்ந்து, கசப்புகள் மறந்துவிட்ட (என்று நம்பிய)போதும், ஒருவேளை நான் வெளியே வேறு அறை பார்த்து செல்கிறேன் என்றபோது அவர் தடுத்தபோதும் நான் உறுதியாக நின்றிருந்தால் எனது சில நிகழ்வுகளை தவிர்த்திருக்கலாம். அவர் வீட்டில் இப்போதும் என்னை கொண்டாடியிருப்பார்கள். அவர் குடும்பத்தினரை சிலகாலம் முன்பு சந்தித்தபோது அவர்கள் எல்லாரும் இயல்பாக தான் இருந்தார்கள். என்றாலும் எனக்கு தான் உள்ளுக்குள்ளே குறுகுறுப்பு...
மேலே சொன்ன எல்லா கதைகளிலும் ஒரே ஒரு ஒற்றுமை. கதை முடிகிறது என்ற நிலை வரும்போது “முடிந்துவிட்டது” என்று உண்மையை ஒத்துக்கொண்டு ஒதுங்கியிருந்தால் அந்த கதைகள் நினைத்து நினைத்து சிலாகிக்கும் இனிமையான கதைகளாக இருந்திருக்கும். ஆனால் அவை இப்போது நினைத்தாலும் வலியை கொடுக்கும் கதைகளாக மாறிவிட்டது கொடுமை. “Pull out when going is good" என்ற பாடத்தை கற்பதற்கு நான் கொடுத்த மிகப்பெரிய விலை இந்த மூன்றாவது கதை. இப்போது எனக்கு வேலையிலும் சரி, உறவுகளிலும் சரி, எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும் போது இதிலிருந்து எப்போது சீக்கிரம் வெளியேறலாம் என்று தான் தோன்றுகிறது. அப்போது தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு என்னை பொறுத்த நல்ல நினைவுகளே மிஞ்சும் என்று எண்ணம்.
இது escape mechanism அல்ல. உறவுகள், நட்பு, வேலை என எல்லாவற்றிலும் shelf life, prime time or intense attention எல்லாம் ஒரு எல்லை / குறிப்பிட்ட கால அவகாசத்தோடு தான் வருகிறது. இந்த உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டியது அவசியம். நான் சில நெருங்கிய (என்று கருதும்) நண்பர்களை நேரில் சந்திப்பதற்கு ஆர்வம் காட்டாதது இந்த காரணத்தால் தான். அவர்கள் மீது உள்ள அன்பும், மதிப்பும் தான் அவர்களிடம் இருந்து என்னை ஒரு தூரத்தில் நிறுத்திவைக்கிறது. அவ்வளவே! இப்போது அது கஷ்டமாக தோன்றினாலும், பின்பு retrospect செய்யும்போது அது சரியாகவே தோன்றும் என்பது எனது கருத்து.