பொதுவாக நான் இந்த ‘அன்னையர் தினம்” எல்லாம் கொண்டாடுவதில்லை. ஆனால் இம்முறை இந்த நாளில் என் அம்மாவை உங்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது. பொதுவாகவே ஆண் பிள்ளைகள் எல்லோரும் அம்மாவிடம் தான் நெருக்கமாக இருப்பார்கள் - நானும் அதற்கு விதிவிலக்கில்லை. அது ஏன் என்று பார்த்தால் - அம்மாக்கள் பொதுவாக குழந்தைகளோடு சேர்ந்து ”வளர்கிறார்கள்” ஆனால் தந்தைகளோ கண்டிப்பு, வேலையால் நேரமின்மை, discipline, result என்று காலப்போக்கில் தங்களை தூரப்படுத்திக்கொள்கிறார்கள் என்பது எனது அபிப்பிராயம். என் அம்மா மனதளவில் எப்போதும் என் வயதையுடய இளமையானவர். அதனால் தான் எங்களுக்குள் பெரிதாக Generation gap என்று தீவிரமான இடைவெளிகள் வந்ததில்லை.
{tab=Page 1}
எனக்கு அம்மாவிடம் இருந்து நிறைய பழக்கங்கள் ஒட்டிக்கொண்டன. குறிப்பாக எனக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதே அம்மா தான். நான் அப்போது ஆறாம் வகுப்பிலிருந்ததாக ஞாபகம். ஒரு முறை பக்கத்திலிருந்த ஒரு நூலகத்தில் இருந்து "பொன்னியின் செல்வன்" புத்தகத்தின் இரண்டாம் பாகத்தை வாடகைக்கு எடுத்திருந்தோம். அம்மா ஒவ்வொரு பத்தியாக எங்களுக்கு படித்து கதை சொல்லுவார். அப்பப்போ நான் வாங்கி சில பக்கங்கள் படித்துக் காட்டுவேன். இப்படியாக தான் சரித்திர நாவல் படிக்கும் பழக்கம் ஆரம்பித்தது. உச்சக்கட்டமாக அம்மா பி.ஏ எழுதியபோது அவருக்கு பாடநூல்களை நான் படித்துக்காட்டுவேன். அம்மா வேலை செய்துக்கொண்டே அவற்றை கேட்டு மனதில் ஏற்றிக்கொள்வார். பரிட்சையும் நன்றாக எழுதி தேறினார். இப்படியாக தான் எனக்கு வெறுமனே பாடங்கள் அல்லாது மற்ற புத்தகங்களையும் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
எனினும் அம்மாவுக்கு நான் வெறுமனே படித்துக்கொண்டு மாத்திரம் இருப்பதில் சந்தோஷமில்லை. என்னை மற்ற பசங்களோடு சேர்ந்து விளையாடு என்று தள்ளிக்கொண்டே இருப்பார். ஆனால் நான் மாறவே இல்லை. அம்மாவுக்கு அந்த ஆதங்கம் இருந்துக்கொண்டே இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு ஒருமுறை காரைக்குடிக்கு ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு குட்டிப்பையன் குரங்கு குட்டிபோல ரயில் சீட்டின் மேலும் கீழும் தொங்கி விளையாடிக்கொண்டிருந்தான். அம்மா என்னை பார்த்து "நீ இப்படியேல்லாம் என் இல்லை?" என்றார். காலம் கடந்த ஆதங்கம். என்னால் பூர்த்தி செய்யப்படாத அம்மாவின் ஆசைகளில் ஒன்று இது.
அம்மாவை எனக்கு ரொம்ப பிடித்திருந்ததாலோ என்னவோ எனக்கு என் அம்மா செய்யும் காரியங்களை எல்லாம் நானும் செய்யவேண்டும் என்று தோன்றும். அதனாலேயே அம்மாவின் கோலா நோட்புக்கை பார்த்து நானும் கோலங்கள் போட ஆரம்பித்தேன். அதனாலேயே எனக்கு படங்கள் வரைவது மிக எளிதாக வந்தது. அம்மா டீ போடும்போது கூட இருந்து டீத்தூளை நான் தான் போடுவேன் என்று என் உள்ளங்கையில் வாங்கிக்கொண்டு தண்ணீர் கொதிக்கும்போது அம்மா சொல்லும்போது டீ பாத்திரத்தில் போடுவேன். அதில் ஒரு சந்தோஷம் எனக்கு. பின்பு ஏழாவது படிக்கும்போது ஒரு நாள் அம்மாவிடம் “நீ steps சொல்லம்மா, நான் அதன்படி சாபார் வைக்கிறேன்” என்றேன். வெங்காயம் தக்காளி தாளித்துவிட்டு தண்ணீர் விட்டு அதில் 1 சிறிய ஸ்பூன் மஞ்சள் தூளும், 2 பெரிய ஸ்பூன் மிளகாய் தூளும் போடு என்றார். நான் வித்தியாசம் தெரியாததால் 2 பெரிய் ஸ்பூன் மஞ்சள் தூளும், 1 சிறிய ஸ்பூன் மிளகாய் தூளும் போட்டு கொதிக்கவைத்தேன். அம்மா பின்னர் கவனித்துவிட்டு முழுவதுமாக கொட்டிவிட்டு, என்னிடம் சலித்துக்கொள்ளாமல் மீண்டும் சமைத்தார். எனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தபோது “பரவாயில்லை... உனக்கு செய்துபார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறதே, அதுவே சந்தோஷம் தான்” என்று என்னை தேற்றினார். எனக்கு இன்று கூட தனியாக வீட்டை சமாளித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளதற்கு என் அம்மாவின் வீட்டு வேலைகளை கவனித்தது தான் காரணம்.
{tab=Page 2}
எனது Software Engineer ஆகவேண்டும் என்ற கனவை என் அப்பா முட்டுக்கட்டை போட்டு தடுத்த சமயத்தில் “என்ன செலவானாலும் பரவாயில்லை, நான் இருக்கிறேன். நீ கம்ப்யூட்டர் படி” என்று இரு சந்தர்ப்பங்களில் ஊக்கம் கொடுத்தவர் என் அம்மா. எனினும் அவரை மீண்டும் financially drain செய்யவேண்டாம் என்று MBA எடுத்து படித்தது நான் IT-க்கு நுழைவதில் ஏற்படுத்திய தாமதம் என் வாழ்க்கையில் முடிவெடுக்க தெரியாத எனது indecisiveness-க்கு கொடுத்த விலை. இன்றும் அம்மா சொல்லுவார் “அன்றே நீ காசு பார்க்காமல் IT-க்குள் நுழைந்திருந்தால் இந்நேரத்துக்கு நன்றாக சம்பாதித்திருப்பாய், மற்றும் மேலே வந்திருப்பாய்”. எனினும் இந்த நிகழ்ச்சிகளால் எனக்கு அம்மாவிடம் நெருக்கம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
அதற்காக நாங்கள் இருவரும் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே..” என்று பாடிக்கொண்டு தினமும் காலையில் காலில் விழும் திரையில் வரும் அம்மா மகன் இல்லை. அம்மா எனக்கு முதல் நெருக்கமான நண்பர். அதே சமயம் எங்களுக்கும் பல கருத்து வேறுபாடுகளும் அவ்வப்போது வரும். கடந்த சில வருடங்களாக மற்ற நண்பர்களைவிட அம்மாவுடன் சினிமாவுக்கு போனது தான் அதிகம். நான் ஹிந்திப்படங்களை VCR-ல் போடும்போது அவருக்கு மொழிபெயர்த்து சொல்லிக்கொண்டே இருப்பதால் அவரும் ஆர்வமாக பார்ப்பார். DDLJ பார்க்கும்போது “ஐய்யய்யோ.. இந்த பையன் (ஷாருக்கான்) அந்த பெண்ணின் (கஜோல்) வீட்டுக்கு துரோகம் செய்கிறானே” என்று புலம்பியதும், ஊர்மிளா நடித்த ”கௌன்” படத்தை பார்க்கும்போது “இந்த பெண் கொலைசெய்யப்படபோகிறாளே” என்று புலம்பிக்கொண்டும் ஆனால் அந்த படங்களின் எதிர்பாராத கிளைமேக்ஸில் அசந்துபோனது இனிமையான அனுபவம். அதே சமயம் தபு நடித்த “அஸ்தித்வா” படத்தை பார்த்துவிட்டு “புருஷன் ஊர்ல இல்லைன்னா இன்னொருத்தனுக்கு புள்ள பெத்துக்குறது சரிங்குறியா?” என்று என்னிடம் மல்லுக்கு நின்றது வேறு வகையான அனுபவம்.
அம்மா மனதளவில் இளமையானவர், காலத்துக்கேற்ப தன்னை update செய்துக்கொள்பவர் என்பதால் என்னால எல்லா விஷயங்களும் அவரிடம் பேசமுடியும்... including girls & sex. நான் துபாயில் இருந்தபோது ஈ-மெயில் அனுப்புமளவுக்கு கம்ப்யூட்டரில் ஒரு familiarity ஏற்படுத்திக்கொண்டார். என் வாழ்க்கையில் எந்தெந்த பெண்களிடம் காதல்வசப்பட்டேன் என்பது அம்மாவுக்கு தெரியும். எனது பழைய பதிவில் வந்த அங்கீகரிக்கப்படாத காதல் கொண்ட பள்ளித்தோழியின் கல்யாணத்துக்கு நான் வரவில்லை என்றபோது அம்மா “ஏண்டா! உனக்கு அந்த பெண் வேறொருவரை கல்யாணம் செய்துக்கொள்வதை பார்க்கமுடியவில்லையா?” என்று சகஜமாக கேட்டார். எனினும் எனக்கு பெண் பார்க்கும் படலத்தில் அம்மாவோடு நிறைய வாக்குவாதங்கள் தோன்றியது. “நீ பாட்டுக்கு தெளிவில்லாமல் பல பெண்களை பார்த்து நிராகரித்துவிட்டு அவர்களது பாவத்தை சம்பாதித்துக்கொண்டாய். அது நாளை என்னையும் என் பிள்ளைகளையும் தான் பாதிக்கும்” என்று சொல்வேன். அதற்கு அம்மா “கல்யாணம் என்றால் அப்படி தான் நான்கு இடங்களில் பார்த்து தான் தேர்ந்தெடுக்கமுடியும். நிராகரித்த பெண்களின் பாவம் வருமானால் அது என்னையே பாதிக்கட்டும்” என்பார்.
எனக்கு என் அம்மாவிடம் மிகப்பிடித்தது என்றால் குடும்ப நிர்வாகம் தான். இரட்டை இலக்க சம்பளத்தில் வாழ்க்கையை தொடங்கி இன்று எங்களுக்கு upper middle class குடும்ப தரம் இருக்கிறது என்றால் அது அம்மாவின் திட்டமிடல் தான். அன்று அவர் கஷ்டப்பட்டு வாயை கட்டி வயிற்றை கட்டி சேமித்ததன் பலன் இன்று நான் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன். அதனால் அம்மாவிடம் எப்போதும் ”நீ உயிருடன் இருக்கும் வரைக்கும் இந்த வீட்டுக்கு நீ தான் எஜமானி. தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது” என்று சொல்வேன். அதே போல என்னை எப்படி வளர்க்க நினைத்து ஆனால் அப்படி நடக்கவில்லையோ அப்படி என் பிள்ளையை (அம்மாவின் பேரன்) வளர்த்து ஆறுதல் பட்டுக்கொள் அம்மா என்று சொவதுண்டு.
எனினும் எனக்கு அம்மாவிடம் பிடிக்காத, மாற்ற முயன்றுக்கொண்டிருக்கும் ஒரு குணம் என்னவென்றால் - தொல்லைகாட்சியின் மெகா தொடர்களை அளவுக்கதிகமாக பார்ப்பது தான். கிட்டத்தட்ட குடிகாரனுக்கு அந்த குடிக்கும் சமயம் வந்துவிட்டால் கைகள் உதறல் எடுப்பது போல, மெகா சீரியல்கள் ஆரம்பித்துவிட்டால் அம்மாவும் பரபரப்பாகிவிடுவார். என்னிடம் “நீ ஏதாவது பார்க்கிறாய் என்றால் பார்த்துக்கொள்” என்று சொன்னாலும் அவரது restlessness-ஐ என்னால் எளிதாக உணரமுடியும். அதனால் நானும் விட்டுவிட்டு என் அறைக்கு வந்து internet-ல் உட்கார்ந்துக்கொள்வேன். அம்மாவிடம் “உனக்கு இந்த சமயத்தில் வாழ்க்கையில் கவலைப்பட என்று எதுவுமில்லை என்கிற கவலை தான் இருக்கிறது. அதற்காக இந்த தொடர்களில் வரும் கதாபாத்திரங்களுக்காக கவலைப்பட்டு தீருவேன் என்று அடம் பிடிக்காதே” என்று சொல்லிக்கொண்டிருப்பேன். அவரை மீண்டும் படிக்கும் பழக்கத்துக்கோ, வரைவதற்கோ நான் செய்த முயற்சிகளை எல்லாம் மெகா தொடர்கள் தோற்கடித்துக்கொண்டே இருக்கின்றன. இதனால் எங்களுக்குள்ளான personal interaction பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது உண்மை. என்றாவது ஒரு நாள் இதன் பிடியிலிருந்த அம்மாவை மீட்கவேண்டும் என்கிற ஆதங்கம் தான் இப்போது எனக்கு மிஞ்சுகிறது.
{oshits} வாசகர்கள்... இந்த பதிவுக்கு!!!