ஆச்சரியமாக இந்த படத்தை பார்த்த பின்பு தான் தெரிந்தது அன்று நடிகர் விஷ்ணுவர்த்தனின் முதலாம் நினைவு அஞ்சலி என்று. ரொம்ப நாட்களாக இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டு நேற்று தான் நிறைவேறியது. ஆனால் படம் பார்த்து முடிந்த பிறகு புதிதாக படம் பார்த்த திருப்தியே இல்லை. வெற்றிப்பெற்ற ஒரு படத்தை அப்படியே நகலெடுத்து சில காட்சிகளை இங்கும் அங்கும் மாற்றிப்போட்டு புதிய படம் என்று “படம் காட்டு”வதற்கு ஒரு தில் வேண்டும், ஒரு கேணையன் தயாரிப்பாளராக வேண்டும். எல்லாமே ஒருங்கிணைந்து அது நடந்தும் விட்டது - ஆப்தரக்ஷகாவில்.
ஒரு பெரிய மாளிகையில் வசிக்கும் வயதான தம்பதியினருக்கு 5 மகள்கள். நாட்டிய தாரகையான மூத்த பெண் ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்காக நாகவள்ளி என்ற நர்த்தகியின் படத்தை பரிசாக பெற அன்றிலிருந்து அந்த வீட்டில் அமானுஷியமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றை சரி செய்ய ஒரு மந்திரவாதி (அவினாஷ்) அழைக்கப்பட, அவர் மனோநல மருத்துவரான கேப்டன் விஜய்யை (மறைந்த விஷ்ணுவர்த்தன்)அழைத்துக்கொண்டு வருகிறார். அந்த வீட்டின் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறார் விஷ்ணுவர்த்தன். கிட்டத்தட்ட ஆப்தரக்ஷகா / சந்திரமுகியின் அப்பட்ட நகல் என்று சொல்லலாம். நாகவள்ளி (சந்திரமுகி)யின் கதை முந்தைய படத்திலிருந்து துளியும் மாற்றப்படவில்லை. “ரா ரா... பாடலில் இடம்பெற்ற கதையை” ஒரு flash back-ஆக 30-45 நிமிடத்துக்கு இழுத்து ஓட்டியிருக்கிறார் இயக்குநர் பி. வாசு. கிளைமேக்ஸ் செம காமெடி.
முந்தைய படத்தில் கங்காவை குணப்படுத்தியதில் சைக்காலஜியின் பங்கு தான் அதிகம் என்று ஆச்சாரியருக்கு தெரிந்திருந்தும் இந்த படத்தில் ஆச்சாரியார் மூச்சுக்கு முன்னூறு தடவை “நாகவள்ளி” என்று பினாத்துவது படம் முழுதும் unintentional நகைச்சுவை. நாகவள்ளியால் பாதிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட கதாபாத்திரம் படம் முழுதும் ஒரு மார்க்கமாகவே திரிவதாலேயே இவர் தான் அவர் என்று எளிதில் யூகித்துவிடலாம். இருப்பினும் எப்படி அந்த முடிச்சு அவிழ்கிறது என்று ஆர்வமாக உட்கார்ந்தால் மிஞ்சுவது சிரிப்பே. எனினும் possessed girl-ஆக அந்த நடிப்பு குறிப்பிட்டு சொல்லக்கூடியதே.
பி.வாசு இந்த கதையை ரஜினியை மனதில் வைத்து எழுதியதாலோ என்னவோ விஷ்ணுவர்த்தன் நடிப்பில் ரஜினியின் சாயல் தான் தெரிகிறது. படத்தில் 5 கதாநாயகிகள் இருந்தபோதும் நர்த்தகி நாகவள்ளியின் கதாபாத்திரத்தை விமலா ராமன் அழகாக செய்திருக்கிறார். அடுத்து ஓவியராக பாவனா ராவும், மாணவியாக சந்தியாவும், அவருடைய தங்கையாக வரும் குட்டிப்பெண்ணும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட screen space-ஐ சரியாக உபயோகப்படுத்திக்கொண்டுள்ளனர். நாட்டிய தாரகையான மூத்த பெண்ணாக வரும் லக்ஷ்மி கோபாலசுவாமிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம். வடிவேலுவை மனதில் வைத்து எழுதப்பட்ட பாத்திரத்தில் கோமல் சத்தம் போட்டு காமெடி என்று ஒப்பேத்தியுள்ளார்.
இந்த படத்தை தமிழில் செய்ய ரஜினி மறுத்திருப்பது நல்ல விஷயம். ஒருவேளை சந்திரமுகி / மணிசித்ரதாழு (மலையாளம்) பார்க்காதவர்கள் இதனை பார்த்தால் ரசித்திருக்கலாம் ஆனால் மேலே சொன்ன படங்களை பார்த்தவர்கள் இதை பார்க்காமல் இருப்பதே நலம்.
{oshits} வாசகர்கள் இந்த ‘ஆப்தரக்ஷகா’வின் விமர்சனத்தை படித்துள்ளனர்.