என்னும் எப்போழும்... படத்தின் தலைப்பை இயக்குனர் சத்யன் அந்திக்காடு அறிவித்தப்போது தமிழ் "எங்கேயும் எப்போது"மை நினைவுபடுத்தியதால் கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது. இருந்தாலும் படத்தில் இருப்பது மஞ்சு வாரியரும், மோகன்லாலும் ஆயிற்றே.... அலுப்பை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தேன். படம் பார்த்தபோது தலைப்பு கவிதையாக பொருந்தியிருந்தது. கொஞ்சம் haunting-ஆக இருந்தது. ஆனால் எத்தனை பேருக்கு இந்த தலைப்பு பொருத்தம் புரிந்திருக்கும் என்று தெரியவில்லை.
மகளிர் பத்திரிகையான "வனிதாரத்னம்"-ல் சீனியர் ஜர்னலிஸ்டாக பணிபுரியும் வினீத் என். பிள்ளை (மோகன்லால்) ஆண்டு சிறப்பு மலருக்காக வக்கீல் தீபாவை (மஞ்சு வாரியர்) பேட்டி எடுக்கவேண்டி வருகிறது. ஆனால் அம்மணி அசைந்து கொடுப்பதாக இல்லை. அவர் பின்னாடி எங்கும் நீக்கமற அலைகிறார் வினீத். அப்போது தீபாவின் வாழ்க்கையில் நிகழும் அசம்பாவிதங்களில் இருந்து அவரை காப்பாற்றி, கடைசியில் ஒருவழியாக பேட்டி எடுத்துவிடுகிறார். இவ்வளவு தான் கதை. இந்த எளிமை தான் படத்தின் பலமும், பலவீனமும்.
சத்யன் அந்திக்காடின் படங்கள் எல்லாமே ஒரே template-ல் வரும். சத்யா சந்தனாக நாயகனும், நாயகியும், அவர்களது வாழ்க்கையில் விதியின் விளையாட்டில் சோகம் இழையோட, அதை உள்ளே கொண்டு மெல்லிய சிரிப்போடு வளைய வருவார்கள். பக்கத்து வீட்டில் எப்போது இன்னசண்ட்டும் அவரது வயசான மனைவியும் (பெரும்பாலும் KPAC லலிதா) இருப்பார்கள். படம் முழுக்க moral science class போல அவ்வப்போது யாராவது உபதேசத்தை உதிர்த்துக் கொண்டு இருப்பார்கள். கடைசியில் சுபம். "எ.எ"-யும் இதிலிருந்து விதிவிலக்கல்ல. இருந்தாலும் இவர் படங்களை காப்பாற்றுவது யதார்த்தமான சூழ்நிலைகளும், மெல்லிய நகைச்சுவையும் தான்.... அதற்கு தான் மோகன்லால் இருக்கிறாரே?
சொல்லப்படாத காரணங்களுக்காக பிரம்மச்சாரியாக இருக்கும் மோகன்லால், திருமணமாகி விவாகரத்து பெற்று தன் மகளுடன் வசிக்கும் மஞ்சு வாரியர், திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வந்தாலும் கணவனின் புதுக்காதலை பற்றி அறிந்துகொண்டதும், தங்கள் மதம் பல தாரத்தை அனுமதித்தாலும் அப்படி வாழப்பிடிக்காமல் தன்னை சொந்த பிசினெஸ், பயணங்கள் என பிசியாக வைத்துக்கொண்டு புன்னகையுடன் வளைய வரும் இஸ்லாம் பெண் ஃபாராவாக லேனா என்று கல்யாண வாழ்க்கையை பற்றிய எதிர்மறை எண்ணங்களை பக்கத்து வீட்டு Happy Couple - வயதான இன்னசண்ட் - உஷா தம்பதியின் இனிய திருமண வாழ்க்கையை கொண்டு அழகாக balance செய்திருக்கிறார் கதாசிரியர் ரஞ்சன் பிரமோத்.
இப்படி multilinear கதை எழுதுவது இவருக்கு பிடித்தமானது போல. இவர் முன்பு இதே சத்யன் அந்திக்காடுக்காக எழுதிய "அச்சுவிண்டே அம்மா" படத்தில் அம்மா மகளான "ஊர்வசி - மீரா ஜாஸ்மின்"ன் தனிமையை அவர்கள் பக்கத்து வீட்டு கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் சுகுமாரியின் பட்டாளத்தை கொண்டு அடிக்கோடிட்டிருப்பார் ரஞ்சன் பிரமோத். இதிலும் அது போல மஞ்சு வாரியாரின் திருமணத்தில் கைகூடாத காதலை பக்கத்து வீட்டு வயசான தம்பதிகளுடன் காட்டியிருப்பார்.
இதில் படம் யாருமே எதிர்பார்க்காமல் திடீரென்று முடிந்துவிடும்... "நீங்க சந்தனம் வச்சுக்கிட்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று மஞ்சு வாரியர் மோகன்லாலிடம் சொல்வார். "எப்போதும் எழுதும் மேஜை, அதே பிடித்த பாடல், எப்போது வரும் தூறல் மழை... என எல்லாமே அதேவாக இருக்கிறது ஆனால் இன்று மனது மட்டும் வேறாக உள்ளது" என்ற மோகன்லாலின் குரலோடு படம் முடிந்துவிடும். வினித்துக்கும் தீபாவுக்கும் இடையே தோன்றியுள்ள இந்த உறவு நட்பா, காதலா என்பதை படம் பார்ப்பவர்களின் யூகத்துக்கே விட்டுவிடுகிறார் சத்யன் அந்திக்காடு. எனக்கு ரொம்ப பிடித்தது இந்த எளிமையான கிளைமேக்ஸ் தான். ஏன் என்பதை கடைசியில் சொல்கிறேன்.
80-களில் பார்த்து நம்மில் ஒருவராக ரசிகர்கள் கொண்டாடிய சாமானியன் கதாபாத்திரத்தில் மோகன்லால் மீண்டும் நம்மை கொள்ளையடிக்கிறார். பானை தொப்பை, முதிர்ந்த முகம், எங்கும் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நின்று, நண்பர்களோடு தண்ணியடித்துக்கொண்டு, வீட்டில் தங்கியிருக்கும் அடிப்பொடியை படம் முழுவதும் அடிப்பது என கதாநாயகனுக்கான எந்த ஒரு இலக்கணமும் இல்லாமல் ஆனால் அவரை பார்த்தவுடன் நம்மையும் அறியாமல் ஒரு வாஞ்சை தோன்றுகிறதே... அது தான் லாலேட்டன்.
மஞ்சு வாரியர்... நடிப்பு ராட்சஸிக்கு இந்த படத்தில் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை. வக்கீலாக இருந்தும் அத்தனை வார்த்தைஜாலமோ இல்லை நீண்ட வழக்குமன்ற காட்சிகளோ இல்லை. அதனால் தானோ என்னவோ அவர் நடமாட தெரிந்தவர் என்று சொல்லை படத்தில் 3 முறை அவரை நாட்டியமாட விட்டிருக்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது... ஒவ்வொரு எலும்பும் கண்களும் தனித்தனியாக ஆடுகிறது. அற்புதமான நடிப்பு, சுழன்று சுழன்று நர்த்தனமிடும் நடனம் என இத்தனை திறமைகள் இருந்தும் அவர் தனது வாழ்க்கையின் prime time-ஐ குடும்பிநியாக வீட்டில் 15 வருடங்கள் சும்மா கழித்தது தான் கொடுமை. முகத்தில் வயசு விளையாடுகிறது.. அதனால் மிக Tight Close-upகளை தவிர்த்திருக்கலாம். எனினும் கல்லூரிப்பெண் என்று வயசை குறைக்காமல் இதிலும் (கவனிக்க!) 10 வயது மகளின் தாயாக வருகிறார்.
மஞ்சு தனது மணவாழ்க்கை முறிந்ததால் நடத்திய இரண்டாம் வரவில் படத்துக்கு படம் தன் (முன்னாள்) காதல் கணவர் திலீப்பை போட்டுத் தாக்குவதில் குறியாக இருக்கிறாரோ என்று இணையதளங்களில் பட்டிமன்றங்களே நடக்கும் அளவுக்கு படங்களில் அவரது கதாபாத்திரங்கள் அமைகிறது. இதிலும் (மீண்டும் கவனிக்க!)கொடுமைக்கார கணவனிடமிருந்து பிரிந்து மகளோடு தனியாக வாழும் பாத்திரம். தனது முன்னாள் கணவனின் குரூர குணத்தை அவர் திரையில் சொல்லும்போது பார்வையாளர்களிடையே மெல்ல கிசுகிசுப்பு.
இந்த தலைமுறையை சேர்ந்தவரான நீல் டி குன்ஹா என்ற இளைஞர் தான் ஒளிப்பதிவு. மனதுக்கு இதமான வர்ணச்சேர்க்கை, எளிய காட்சிகள். இசை வித்யாசாகர். ஏற்கனவே அவர் "மெலடி மேக்கர்", இப்போது இன்னும் இதமான இசையை கேட்கும் சத்யன் அந்திக்காடுடன் சேர்ந்துவிட்டதாலோ என்னவோ எல்லா பாடல்களும் தாலாட்டும் ரகங்கள். இதே வித்யாசாகர் தான் மஞ்சுவின் முதல் இன்னிங்க்ஸில் அவரது பெரும்பாலான படங்களுக்கு காலத்துக்கும் நிற்கும் இசையை கொடுத்தவர். எனினும் சத்யன் அந்திக்காடின் படங்கள் தொழில்நுட்ப ரீதியாக பெரிய முயற்சிகள் தேவைப்படாத சாதாரண கதைகள்.
இவர் படங்களில் எனக்கு மிகப்பிடித்தது எப்போதுமே கிளைமேக்ஸ் தான். (படம் முடியப்போதுங்குற சந்தோஷமான்னு கேக்காதீங்க..) எல்லாரும் கிளைமேக்சில் பக்கம் பக்கமாக பேசி, டிஷும் டிஷும்னு சண்டை போட்டு நம் காதுகளை பதம் பார்க்க, சத்யன் அந்திக்காடு மட்டும் ஒரே வரி வசனத்தோடு கிளைமேக்சை முடிப்பார். உதாரணம் - "யாத்ரக்காருடே ஷ்ரத்தைக்கு" என்ற படத்தில் பொருந்தாத திருமணம் காரணமாக சவுந்தர்யா ஜெயராமை வெறுத்துக்கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்க, அதை புரிந்துக்கொண்டு ஜெயராம் வீட்டைவிட்டு கிளம்புவார். அடுத்த நாள் சவுந்தர்யா தன் "மாப்பிள்ளையுடன்" போகும்போது வீட்டை பூட்டி சாவியை காவலாளியிடம் கொடுக்கசொல்லிவிட்டு கிளம்புவார். வெளியே வீதியில் இறங்கியவுடம் பயங்கர மழை. அதனால் குடையை எடுக்க வீட்டுக்கு சென்று கதவை தட்டுவார். கொஞ்ச நேரம் கழித்து சவுந்தர்யா கதவை திறப்பார். ஜெயராம் உள்ளே சென்று குடையை எடுத்துவிட்டு வெளியே போகும்வரை சவுந்தர்யா ஒன்றுமே பேசமாட்டார். யதேச்சையாக ஜெயராம் தரையில் சில ரத்த துளிகளை பார்த்துவிட்டு சவுந்தர்யாவை உலுக்கி "என்ன ஆச்சு?" என்று கேட்பார். சவுந்தர்யா தன் ரத்த நாளத்தை வெட்டி தற்கொலைக்கு முயற்சித்திருப்பார். அதற்கு சவுந்தர்யா "நிங்க என்னை விட்டுப்போனதும் எனக்கும் நான் தனியாயிட்டேன்னு தோனுச்சு அது தான்" என்பார். ஜெயராம் திரைச்சிலையை கிழித்து சவுந்தர்யாவின் கைகளில் கட்டுப்போட்டுவிட்டு அவரை கட்டிப்பிடித்துக்கொள்வார். படம் முடிந்துவிடும். எனக்கு 80-90களின் மலையாள படங்களை பிடிக்க காரணமே இதுபோன்ற எளிமையான கிளைமேக்ஸ் தான் காரணம்.