இயக்குநர்களின் வயதை அவர்களின் சமீபத்திய படத்தை வைத்து அறிந்துக்கொள்ளலாமா? எனக்கு பிடித்த மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு அவர்களின் பழைய படங்களை சமீபத்தில் பார்த்ததும் எனக்கு அப்படி தான் தோன்றியது. விமர்சகர்கள் அவருடைய சமீபத்திய படங்களான ‘விநோதயாத்ரா, இன்னத்தே சிந்தா விஷயம், கத தொடருன்னு’ ஆகியவற்றை கிழித்த போது எனக்கு ‘ஏன் இப்படி சொல்கிறார்கள்? நல்ல குடும்ப படங்களாக தானே உள்ளது’ என்று தோன்றியது. ஆனால் சத்யனின் பழைய படமான ‘அர்த்தம்’ இன்று பார்த்தபோது அவர்களின் விமர்சனத்தின் அர்த்தம் புரிந்தது. மேலும் அவரது பழைய படங்களான ‘பிங்காமி, வரவேற்பு மற்றும் நாடோடி காற்று ஆகியவற்றின் நினைவு வந்தபோது அந்த படங்களில் அவரது இளமையின் துடிப்பும், சமூக அக்கறையும் ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது படங்களில் தலைதூக்கியிருக்கும் குடும்பம் சார்ந்த அக்கறையும் அவரது வயதை உணர்த்துகிறது. சரி... இப்போது ‘அர்த்த’த்துக்கு வருகிறேன்.
சத்யன் அந்திக்காடு என்ற பெயருக்காக மட்டும் வேறெந்த தகவலும் அறியாமல் பொறுக்கிய DVD-ல் கதை தெரியாமல் பார்த்தது முதல் சுவாரசியம். வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்ததாக சந்தோஷப்படும் மம்மூட்டிக்கு ‘சுரம் நன்றாக இருக்கும் போதே பாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்பது போல, சந்தோஷமாக இருக்கும்போதே இறந்துவிடவேண்டும் என்று முடிவு செய்து தற்கொலை செய்துக்கொள்ள ரயில் தண்டவாளத்தில் தலையை கொடுக்கும் போது கொஞ்ச தூரத்தில் ஜெயராம் கிடப்பதை பார்க்கிறார். ஒரு கொலை செய்துவிட்டதாக பயந்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கும் ஜெயராமின் பிரச்சனைகளை கேட்டு அவற்றை தீர்த்து வைத்து தன் வாழ்க்கையின் ‘அர்த்த’த்தை அறிய முயற்சிக்கிறார் மம்மூட்டி. அவருக்கு துணை நிற்கும் இருவர் - வக்கீல் ஸ்ரீநிவாசன் மற்றும் நிருபர் சரண்யா ஆகியோர்.
யதார்த்தமான மற்றும் எளிமையான கதையாக ஆரம்பிக்கும் ‘அர்த்தம்’ 15-20 நிமிடங்களில் டாப் கியர் பிடித்து துப்பறியும் க்ரைம் கதையாக வேகம் பிடித்தது எனக்கு, குறிப்பாக சத்யன் அந்திக்காடிடம் குடும்ப கதையை எதிர்பார்த்த எனக்கு , ஒரு இன்ப அதிர்ச்சி. நல்ல த்ரில்லர்களை எந்தவித கவன சிதறல்களும் இல்லாமல் எப்படி எடுக்க வேண்டும் என்பதை 80-களில் வந்த மலையாள த்ரில்லர்களை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். அந்த வகையில் வேணு நாகவள்ளியின் கதை - திரைக்கதை நேர்கோட்டில் வேகமாக பயணிக்கிறது. எனினும் 80-களின் cliche-க்களான வில்லன் - போலீஸ் - செய்தித்தாள் அதிபர்கள் கூட்டு என இருந்தது இப்போது பார்க்கும்போது கொஞ்சம் அலுப்பூட்டியது.
மேலும் பாதியிலேயே இந்த படத்தை நான் ஏற்கனவே ஒரு மலிவான தமிழ் பதிப்பில் பார்த்திருந்தது நினைவுக்கு வர ஒரு நல்ல அனுபவத்தை அது கெடுத்துவிட்டது. அந்த தமிழ் படம் கார்த்திக் - கனகா நடித்து வெளிவந்து உடனே பெட்டியில் சுருண்டுவிட்டு, டி.டி-1ல் நான் பார்த்த, “எதிர் காற்று” என்ற படம். ஜெயராம் பாத்திரத்தை ஜனகராஜ் செய்திருந்தார் என்று நினைவு. பார்வதி நடித்திருந்த பாத்திரத்தில் ‘நல்லெண்ணெய்’ சித்ரா நடித்திருந்தார். கதாநாயகனுக்கு கட்டாயம் ஜோடி அவசியம் என்று நிருபர் கனகாவுக்கும், கதாநாயகன் கார்த்திக்குக்கும் ஒரு டூயட் வைத்திருந்தார்கள். படம் வெளிவந்த அடுத்த வருடமே டி.டி-யில் ஒளிபரப்பிவிட்டார்கள் என்றால் அதன் தரத்தையும், வெற்றியையும் நீங்களே யூகித்துக்கொள்ளலாம்.
இந்த படத்தை பார்த்தபோது எனக்கு 2-3 மாதங்களுக்கு முன்பு பார்த்த சத்யன் அந்திக்காடின் மற்றொரு படமான ‘பிங்காமி’ (வாரிசு) கூட நினைவுக்கு வந்தது. மோகன்லால் தயாரித்த அந்த படமும் கிட்டத்தட்ட இது போன்ற கதாபாத்திரங்களை உள்ளடக்கியது. பட்டாளத்திலிருந்து விடுமுறைக்கு வரும் மோகன்லால் வழியில் குற்றுயிரும் குலையுமாக கிடக்கும் திலகனை மருத்துவமனையில் சேர்க்க அவர் கொல்லப்படுகிறார். திலகன் எழுதிய டைரியை படிக்கும் போது தன் வாழ்க்கைக்கும் திலகனுக்கும் சம்பந்தம் இருப்பதை உணர்கிறார். என்னை பொறுத்தவரையில் பிங்காமி, அர்த்தம் - இரண்டுமே பார்க்கத் தகுந்த படங்கள்.
இந்த பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல சத்யனின் இளமைக்கால படங்களில் அவரது சமூக பிரக்ஞை வெளிப்பட்டிருக்கும். மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய “வரவேற்பு” படத்தில் கல்ஃபில் இருந்து திரும்பி தன் ஊரில் தொழில் தொடங்க முயற்சிக்கும் இளைஞனின் கஷ்டத்தை நகைச்சுவையாக சொல்லியிருப்பார். கேரளாவின் சாபக்கேடான தொழிலாளர் சங்கங்களும், அவை பணம் முடக்கு தொழிலதிபர்களை படுத்தும் பாட்டை இயல்பாக சொல்லியிருப்பார். அதே போல சத்யன் மோகன்லாலை வைத்து செய்த மற்றொரு படமான ‘நாடோடிக்காற்று’ மலையாளிகளின் கல்ஃப் மோகத்தை சாடியிருக்கும். மேலும் அவரது ‘பாலகோபாலன் எம்.ஏ’ படமும் அந்த வரிசையில் இணையும். இளமையில் சமூகத்தை திருத்த முயற்சித்த இதே சத்யன் அந்திக்காடு தனது சமீபத்திய ‘விநோத யாத்ரா’வில் ‘உங்களுக்கு ஒரு கிலோ அரிசியின் விலை தெரியுமா? இ யூனிட் கரண்ட்டுக்கு அரசாங்கம் எவ்வளவு வசூலிக்கிறது என்று தெரியுமா?’ இதை விடுத்து யூரோப்பியன் பொருளாதாரம் குறித்தோ செர்பிய கலவரம் குறித்தோ தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவரது ஆரம்ப கால படங்களில் கண்ணியமான பாத்திரங்கள் என்ற போதும் கதாநாயகிகளுக்கு ரொம்ப வேலையிருக்காது.
நான் சத்யன் அந்திக்காடின் படங்களை கவனிக்க / பார்க்க ஆரம்பித்தது ”வீண்டும் சில வீட்டு கார்யங்கள்” படத்தில் இருந்து தான். சம்யுக்தா வர்மா என்ற அழகு தேவதையையும், அசின், நயன்தாரா ஆகிய femme fatale-களை திரையுலகத்துக்கு அறிமுகம் செய்தது இவர் தான் எனினும் இவரது சமீபத்திய படங்களில் மிக கனமான நாயகி பாத்திரங்கள் இடம் பெறுவது வரவேற்கத் தகுந்த மாற்றமே.