Hindi
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

கோவை வந்தாலே காரணம் தேவைப்படாமல் மனது குதூகலிப்பது எனக்கு வாடிக்கை தான். இம்முறையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. கோயம்புத்தூரில் படம் பார்த்தே 5+ வருடங்கள் ஆகிவிட்டது. இந்த முறை கர்னாடிக் தியேட்டரில் படம் பார்க்க முடிவு செய்தேன். முதன் முறையாக மீரா ஜாஸ்மினை பெரிய திரையில் பார்த்ததும் இங்கே தான் (படம் - மலையாள கஸ்தூரிமான்). அது போல முதன் முறையாக வித்யா பாலனை இதே தியேட்டரில் வெள்ளித்திரையில் பார்க்க முடிவு செய்தேன். படம் - கிஸ்மத் கனெக்‌ஷன். வித்யா பாலனுக்காக மட்டுமல்லாமல் இயக்குநர் அஜீஸ் மிர்ஸா, கூட நடிக்கும் ஷாகித் கபூர் என பல துணை காரணங்கள். அஜீஸ் மிர்ஸாவின் படங்கள் எப்போதும் மிக இயல்பாக இருக்கும். மேலும் பல வருடங்களுக்கு பிறகு அவர் படம் இயக்க வந்திருக்கிறார். நல்ல வேலையாக அஜீஸ், வித்யா, ஷாகித் என யாருமே ஏமாற்றவில்லை. இந்த படம் தான் என்ன?



அறிவும், திறமையும் இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிக்கிறார் ஷாகித். வழக்கம் போல நாயகியான வித்யா பாலனுடன் முதல் சில சந்திப்புகள் மோதலில் ஆரம்பிக்கின்றன. ஒரு ஜோதிடரான ஜூஹி சாவ்லாவின் ஆலோசனைப்படி வித்யாவே தன் அதிர்ஷ்ட தேவதை என்று உணர்ந்து வித்யாவை தன் கட்டுமான புராஜெக்ட் புரபோசல்களுக்கு இழுத்து செல்கிறார் ஷாகித். சில வயதானவர்களை ஒரு சமுதாய கூடத்தில் வைத்து காப்பாற்றி வரும் வித்யாவுக்கு, தன் நண்பரான ஷாகித் அந்த இடத்தை இடித்துவிட்டு ஒரு வணிக வளாகம் கட்ட முயற்சிப்பது தெரியவில்லை. சில சம்பவங்களுக்கு பிறகு ஷாகித்தும் வித்யாவும் காதல் வயப்படுகின்றனர். மனசாட்சி உறுத்த ஷாகித் உண்மையை சொல்ல முற்படும் நேரத்தில் வித்யாவுக்கு ஷாகித்தின் அசல் திட்டம் தெரியவர இருவரும் பிரிகின்றனர்.

படத்தில் பாராட்டப்படவேண்டிய விஷயம் அதன் யதார்த்தமான கதையும், நாம் தினசரி பார்க்கும் மனிதர்களை போன்ற கதாபாத்திரங்களும் தான். மீட்டிங்கிற்கு கிளம்பும் ஷாகித்துக்கு பாதி குளியலில் தண்ணீர் நின்றுபோவதையும், கார் ஸ்டார்ட் ஆக மறுப்பதையும், ATM Card வேலை செய்ய மறுப்பதையும் மூலம் அவரின் "அதிர்ஷ்டத்தை" நகைச்சுவையாக காட்டி படத்தை ஆரம்பிக்கிறார். ஆனால் படத்தை இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் விறுவிறுப்பாக இருந்திருக்குமோ என்னவோ. கதையில் இருக்கும் சுவாரசியம் திரைக்கதையில் மிஸ்ஸிங்க். கடைசியில் எல்லாம் பார்வையாளர்களின் கூவல்கள் வசனத்தை அமுக்கிவிட்டன.

இந்தி படங்களில் வரும் cliche-க்கள் படம் முழுக்க விரவி கிடக்கின்றன. ஹிந்தி ஃபார்முலாப்படி கல்யாணம் நிச்சயமான நாயகியை நாயகன் காதலிப்பதில் ஆரம்பித்து, ஏழையானாலும் கதாநாயகன் பெரிய வீட்டில் சகல வசதியுடன் இருப்பதிலிருந்து, இந்த சாதாரண கதையை கனடாவில் நடப்பதாக மாற்றி ஒரு பிரம்மாண்டத்தை தந்திருப்பதிலிருந்து.... எதுவுமே இம்மி பிசகவில்லை. மேலும் படத்தின் பல காட்சிகள் அஜீஸின் முந்தைய படமான "ராஜு பன் கயா ஜெண்டில்மேன்" (அஸ்திவார விஷயம்), வித்யா பாலனின் "லகே ரகோ முன்னாபாய்" (வயதானவர்களை நாயகி காப்பாற்றுவது) என பல படங்களை நினைவுபடுத்துகிறது.

{mosimage}ஷாகித் இந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக இருக்கிறார். இந்த படம் நடிக்கும்போது தான் அவரின் (முன்னாள்) காதலி கரீனா கபூர் இவரை கழற்றிவிட்டாராம். எனவே அந்த சோகம் திரையில் பிரதிபலித்திருப்பது இந்த படத்துக்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது. சில காட்சிகளே வந்தாலும் ஜூஹி சாவ்லா தனக்கு வயசானாலும் நகைச்சுவை திறமை இன்னும் இருக்கிறது என்று நிரூபிக்கிறார். நாயகி வித்யா பாலன் ஷாகித்துக்கு அக்கா போல இருக்கிறார். அந்த வயது வித்தியாசம் முதலில் உறுத்தினாலும் போக போக பழகிவிடுகிறது. வித்யாவின் குட்டை முடியும் அதுபோல தான். பழகியவுடன் இரண்டாவது பாதியில் பல இடங்களில் இருவரும் பாந்தமாக இருக்கிறார்கள். குறிப்பாக ஷாகித்தும் வித்யா பாலனும் கப்பலில் தங்கள் காதலை வெளிப்படுத்தும் காட்சி அற்புதமான கெமிஸ்ட்ரி.

பொருளை திருடியவர்கள் மீது மட்டும் தான் வழக்கு போடவேண்டுமா? வித்யா பாலன் தன் அழகான சிரிப்பாலும், வசீகரமான கண்களாலும் நம் பல லட்சம் மனங்களை அசால்ட்டாக கொள்ளையடிக்கிறார். யாராவது வித்யா மீது பொதுநல வழக்கு போட்டாலும் ஆச்சரியமில்லை.

ஒளிப்பதிவாளர் பினோத் பிரதானின் ஃப்ரேம்களில் டொரண்டோ மிக அற்புதமாக இருக்கிறது. ப்ரீத்தமின் இசையில் "ஹாய் குக்கு.." பாடல் தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் ரீங்காரமிடுகிறது. மற்றபடி படம் முழுவதும் யதார்த்தத்தை விட அழகே கொட்டிக்கிடக்கிறது.

கிஸ்மத் கனெக்ஷன் - ஷாகித் மற்றும் வித்யா பாலன் ரசிகர்கள் கட்டாயம் பார்க்கவேண்டியவை. மற்றவர்களும் பார்க்கலாம்.... என்ன, கத்திரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்து இருந்தால் படம் மேலும் நன்றாக இருந்திருக்கும்.

உங்களோடு {oshits} வாசகர்கள் இதை படித்துள்ளார்கள்... பிடித்திருக்கும் என்று நம்புவோமாக...

{mosimage}

Related Articles