சன் டி.வியின் ஆரம்ப காலத்தில் அதன் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று - கே.பாலசந்தரின் தொடர்கள். மாறி வந்த சினிமா ட்ரெண்டுகளுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் தன் அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் கே.பாலசந்தர் சின்னத்திரையில் முழுவீச்சில் தொடர்கள் தயாரிப்பில் இறங்கியிருந்தார். அவரது மின்பிம்பங்கள் நிறுவனம் தயாரிப்பு என்றாலே புதுமையான களங்கள், நல்ல தொழில்நுட்பங்கள் என்று தைரியமாக பார்க்கலாம். நிறைய content தேவை என்பதால் தான் இயக்கியது மட்டும் போதாது என்று பல புதியவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தார். அப்படி உருவான வைரங்கள் என்று சொன்னால் - மர்மதேசம் தொடர்கள், ரமணி vs ரமணி 1 & 2, மற்றும் ஜன்னல் வரிசை ஆகியவை.
இதில் ஜன்னல் வரிசையில் நான்கு தொடர்கள் வந்திருந்தன. முதல் தொடரான - சில நிஜங்கள் சில நியாயங்கள்-ஐ கே.பாலசந்தர் மற்றும் சுந்தர் கே. விஜயன் இருவரும் இயக்கியிருந்தனர். வழக்கம்போல ஒரு வித்தியாசமான கதைக்களத்தை அழகாக கையாண்டிருந்தார். எழுத்தாளினி வாசந்தி அவர்களுடைய மூலக்கதைக்கு திரைக்கதை வடிவம் கொடுத்திருந்தார் கே.பி. ஒரு 16 வயது இளைஞனின் பார்வையில் அவனது பெற்றோரின் விவாகரத்து ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்வுப்பூர்வமாக கொடுத்திருந்தார். விவாகரத்து இரு தனி மனிதர்களை பொருந்தாத பந்தத்திலிருந்து விடுவிக்கிறது என்ற போதும் அது அவர்களது குழந்தையை எப்படி பாதிக்கிறது என்பதை ஆழமாக சொல்லியிருக்கிறார். தொடர் கொஞ்சம் இறுக்கமாக போகும்போது எல்லாம் மற்றொரு கிளைக்கதையை கொண்டு கொஞ்சம் கலகலப்பாக்கியிருப்பார். விவாகரத்து செய்யும் கணவன் மனைவியாக "நிழல்கள் " ரவி மற்றும் சுதா, அவர்களது மகன் குணாவாக சுரேஷ், அவர்கள் வீட்டின் சமையல்காரராக "பூவிலங்கு " மோகன், அவர் மனைவியாக ரேணுகா மற்றும் சுப்ரியா, கணேஷ் என்று குணாவின் நண்பர்கள், குணாவின் சித்தியாக டா.ஷர்மிளா ஆகிய பாத்திரங்களோடு 41 பாகங்களாக செல்கிறது இந்த தொடர்.
விவாகரத்தான பெற்றோர்களுக்கு மகனான ஒரு பதினாறு வயது இளைஞனின் மன வருத்தத்தை, குழப்பத்தை இவ்வளவு அழகாக பிரதிபலித்திருக்கிறார் "வயதான குழந்தை" கே. பாலசந்தர். எப்படி தான் அந்த இளைஞனாக தன்னை உணர்ந்து அவனை திரையில் கொண்டுவந்திருக்கிறார் என்று பிரமிக்க வைக்கிறார். அதே சமயம் அவ்வப்போது சண்டையிட்டாலும், அன்னியோனியமான தம்பதிகளாக "பூவிலங்கு" மோகன் & ரேணுகா மூலம் எப்படி விட்டுக்கொடுத்து சமாளிக்கலாம் என்று அழகாக சொல்லியிருக்கிறார். இந்த பகுதிகளில் எல்லாம் கே.பாலசந்தர். இந்த தொடரை தொலைகாட்சியில் ஆரம்பத்தில் பார்த்திருக்கிறேன்.. பின்பு கடைசி வாரம் மட்டும் தான் பார்த்தேன். காரணம் இந்த தொடரின் பாதியில் மின்பிம்பங்களுக்கும் சன் டிவிக்கும் தகராறு வந்து கே.பாலசந்தர் தன் எல்லா தொடர்களையும் ராஜ் டிவிக்கு மாற்றிக்கொண்டார். அதனால் "சில நிஜங்கள் சில நியாயங்கள் "-ஐ நடுவில் பார்க்கமுடியாமல் போய்விட்டது.
ஜன்னலின் இரண்டாவது தொடராக - எஸ் பி பாலசுப்ரமணியமும் லக்ஷ்மியும் இணைந்து நடித்த "அடுத்த வீட்டு கவிதைகள்" ராஜ் டிவியில் வந்தது. கே. பாலசந்தர் தயாரிப்பதோடு நிறுத்திக்கொள்ள இதை சுந்தர் கே. விஜயன் இயக்கியிருந்தார். கதை திரைக்கதை மற்றும் வசனத்தை தேவிபாலா எழுதியிருந்தார். இருந்தாலும் இதிலும் தொடர் முழுவதும் பாலசந்தர் வாசனை. வயதான தம்பதிகள் எஸ்.பி பாலசுப்ரமணியம் - லட்சுமி வசிக்கும் வீட்டின் மாடி போர்ஷனுக்கு குடிவரும் இளம் தம்பதி மகேஷ்-பிரியா இருவருக்கும் சண்டை முற்றி விவாகரத்து வரைக்கும் போகிறது. அதை தடுத்து அவர்களை இணைத்து வைக்க முயற்சியில் எஸ்.பி.பி-யும் லட்சுமியும் கணவன் மனைவி இல்லை என்று தெரியவருகிறது.
வயதானாலும் ஆண் பெண் நட்பிலிருக்கும் complications-ஐயும், இந்த சமுதாயத்தில் அவர்கள் மீது வீசப்படும் சந்தேக கணைகளையும் சுவைபட சொல்லியிருக்கிறார். வயதானவர்களுக்கும் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை அந்த கதாபாத்திரங்கள் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார் சுந்தர் கே. விஜயன். வயதானவர்கள் என்றால் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கவேண்டும் என்ற சமுதாயத்தின் கோட்பாட்டை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் இந்த தொடரில்.
இன்னும் மூன்றாவது கதையான "அம்மாவுக்கு ரெண்டுல ராகு"-வையும், நான்காவது கதையான "மரபு கவிதைகள் "-ம் இன்னும் பார்க்கவில்லை. இதில் திரைப்பட நடிகை சுகன்யா நடித்திருந்ததாக ஞாபகம். அதையும் பார்க்கவேண்டும். இவை எல்லாம் YouTube-ன் Rajshri Tamil Channel - ல் இலவசமாக பார்க்க கிடைக்கின்றன. சொல்லப்போனால் மின்பிம்பங்களின் முக்கால்வாசி தொடர்கள் இந்த சேனலில் காணக்கிடைக்கிறது.
இந்த நாடகங்களை நான் முதலில் 1998-1999-ல் பார்த்ததற்கும் இப்போது 2016-ல் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. வயதும் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களும் என் பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் நிதர்சனம். அப்போது நான் "தேவையில்லாம இழுக்குறாங்க.. " என்று கமெண்ட் அடித்த காட்சிகள் எல்லாம் இப்போது விலாவாரியாக புரிகின்றது. இது போன்ற நல்ல தொடர்களை எல்லாம் இப்போது ஏன் எடுக்கமாட்டேங்குறாங்க என்று ஆதங்கம் தான் தோன்றுகிறது. இது போன்ற தொடர்கள் வந்தால் நான் மீண்டும் தொலைகாட்சித்தொடர்கள் பார்க்க ஆரம்பிக்கலாம்.
வீட்டுக்குள்ளேயே வந்து கதை சொல்லும்போது அதை இயக்கும் இயக்குநர்களுக்கு கொஞ்சமாவது சமூக பிரக்ஞை வேண்டாமா? அதை விட்டுவிட்டு டி.ஆர்.பி-யை ஏற்றுகிறேன் என்று கள்ள உறவுகளும், கடத்தல் - கொலை - சூழ்ச்சி என்று ஒரு தலைமுறைக்கு சொல்லிக்கொடுத்து இப்போது கள்ளக்காதல் கொலைகள் கணக்கை ஏற்றியதற்கு இந்த இயக்குநர்களும், அதை பார்த்து ஆதரவளித்த தாய்க்குளங்களும் வெட்கப்படவேண்டும்.