பாலாஜி சக்திவேல் படங்கள் எல்லாம் எல்லோரும் சிலாகிக்கப்பட்டாலும் ஏனோ அவை என்னை அதிகம் ஈர்த்ததில்லை. ”சாமுராய்” படத்தை அவரே ஒத்துக்கொள்வதில்லை. அடுத்து வந்த “காதல்” படம் வணிகரீதியாகவும், விமர்சகர்க ரீதியாகவும் பெருவெற்றி பெற்றபோதும் எனக்கு அந்த படத்தின் வலியை ஒத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் - என் பெண் பத்தாவது படிக்கும்போது ஒரு வண்டி மெக்கானிக்கோடு ஓடிப்போனால் நானும் அந்த படத்தில் வந்த அப்பா செய்ததையே செய்வேன். அதனால் இந்த படம் பெரிதாக ”காவியமாக” எனக்கு தெரியவில்லை. அடுத்து வந்த ”கல்லூரி” என்ன சொல்ல வந்தது என்று தெரியவில்லை. ஆனால் தமன்னா என்ற நடிகைக்கும் நடிக்க வரும் என்று மட்டும் அந்த படம் காட்டியது. இந்த inconsitency-ஆலோ என்னவோ எனக்கு “வழக்கு எண் 18/9” படத்தை எதிர்பார்க்கும் அளவுக்கு ஆர்வம் வரவில்லை.
படம் வெளிவந்து சிறந்த விமர்சனங்களை அள்ளியபோது பார்க்க தோன்றினாலும் இதன் dark & depressing nature என்னை கொஞ்சம் தள்ளி நிற்கவே செய்தது. ஆனால் ஒருவழியாக படம் பார்த்தபோது அப்படி ஒரு வலி... இந்த நாட்டில் சட்டமும், அரசாங்க இயந்திரமும் எப்படி பணக்காரர்களுக்கு அடியாள் கூட்டமாக மாறியிருக்கிறது என்று வலியோடே சொல்லியிருக்கிறார். ஏழைகளையும், சாமானியரையும் இந்த இந்திய அரசு ஒரு உயிருள்ள ஜீவனாக கூட மதிப்பதில்லை என்பதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
தொழில்நுட்பரீதியாக இந்த படம் மிக எளிமையாக அதே சமயம் advance-ஆக இருப்பதால் படம் ஒருவித யதார்த்த look கொண்டிருப்பது இதன் பலம். Canon 5D என்ற DSLR மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளதால் இதன் சில கேமிரா கோணங்கள் தமிழ் சினிமாவுக்கு புதுசு. இந்தியில் ராம்கோபால் வர்மா இந்த கேமிராவை கொண்டு படங்கள் எடுக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழில் இது தான் முதல் முயற்சி. அதே போல முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைத்திருப்பதன் மூலம் படம் பார்ப்பவர்களுக்கு கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், வலியையும் கொண்டு சேர்ப்பதில் எந்த சிதறல்களும் இல்லை. வலுவான கிளைமேக்ஸால் படம் முடியும்போது பார்வையாளர்களின் நெஞ்சில் வலியையும் மீறி ஒரு ஆறுதலோடு முடித்திருப்பது அழகு. நல்ல படைப்புகளை ரசிப்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படைப்பு இது.