”எத்தனை நாளுக்கு தான் ஃப்ளாப் இயக்குநராக இருப்பது... சில சினிமாக்களை எடுத்தே சம்பாதிச்ச காசை எல்லாம் அழிச்சாச்சு... ஒரு பையனை பெத்துப்போட்டாச்சு.. அவனை கதாநாயகனா ஆக்கிட்டா வர்ற காலத்துல முதலமைச்சரா அனாலும் ஆயிடுவான்.. ஏன்னா நம்ம தமிழ் ரசிகர்களுக்கு சினிமாவுல இருந்து மட்டும் தான் சி.எம் வேணும்” என்று யோசித்துக்கொண்டிருந்தார் அந்த மூன்றெழுத்து இனிஷியல் இயக்குநர். பையனை வச்சு எடுத்த முதல் படம் கையை சுட்டுவிட... மகனின் இரண்டாவது படத்தில் தன்னால் முன்னுக்கு கொண்டுவரப்பட்ட நடிகர் நன்றிக்கடனாக கிட்டத்தட்ட முழுநீள கௌரவ வேடத்தில் நடித்துக்கொடுக்க, கூடவே கதாநாயகியின் கவர்ச்சியும் சேர்ந்து படத்தை கொஞ்சமாக காப்பாற்றியது.
“இருந்தாலும் நம்ம தம்பிக்காக படம் ஓடுச்சுன்னு யாருமே சொல்லலைங்கண்ணே..” என்று எடுபிடிகள் வருத்தப்பட, தம்பி நடிக்கும் அடுத்த படத்தை எப்படியாவது ஓட்டனும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார் அந்த இயக்குநர்.
டிஸ்கஷன் தொடங்கியது.
“அண்ணே.. நம்ம தம்பி நல்லா ஆடுது, பாடுது... ஆனா பாக்க கொஞ்சம் சுமாரா தான் இருக்கு. அதனால படத்தை safe side-க்கு கொண்டு போகனும்னா glamour கொஞ்சம் தூக்கலா இருக்கனும்ணே..” என்று ஒரு துணை இயக்கம் முன்மொழிந்தது.
“பாப்பா கொஞ்சம் புது பீஸா இருந்தா நல்லா இருக்கும்.. ஏதாவது முன்னணியை போட்டா அது நாம சொல்றபடி காட்டுமா? இல்லைன்னா தம்பியை பின்னுக்கு தள்ளிட்டு அது பெரிய ஆளாயிட போகுது.” என்று அடுத்த துணை வழிமொழிய வாய்ப்புக்கு தவிக்கும் ஏதாவது ஒரு கனியை (மாங்கா, தேங்கா, வெள்ளரின்னு உங்களுக்கு புடிச்சதை நீங்களே எடுத்துப்போட்டுக்கோங்க) புடிச்சு தரும் பொறுப்பை அந்த துணை எடுத்துக்கொண்டது.
அம்மாவா அந்த கல்வி நடிகையை போட்டுக்கலாம், பாட்டியா இப்போ பிஸியா இருக்குற ஆச்சியை போட்டுக்கலாம் என்று இயக்குநர் முடிவு செய்தார். அப்போது தான் அடுத்த துணை ஒரு கொக்கி போட்டது - “அண்ணே! படம் ஓடனும்னா எல்லா வயசு ஆம்பளைங்களையும் தியேட்டருக்கு வரவழைக்கனும். தம்பி வயசு இருக்குற ஆளுங்களுக்கு இந்த புது பாப்பா சரி. கொஞ்சம் நடுத்தர வயசான ஆளுங்களுக்கு தீனி வேணும்னே”
இயக்குநர் முகவாயை கொஞ்சம் சொறிந்துக்கொண்டு.. “நீ சொல்றதும் சரியா தாண்டா இருக்கு! ஆனா படத்துல பட்ஜெட்டும் இடிக்குது. ஏற்கனவே விசித்திரமா தோணினாலும் பரவாயில்லைன்னு வேலைக்காரி, வீட்டுக்காரி, ஆட்டோக்காரி-ன்னு மூணு ரோலுக்கும் ஒரே பொண்ண போட்டிருக்கேன். இதிலே நடுத்தர வயசான பொம்பளைக்கு யாரடா போட?” என்றார்.
“அண்ணே! அது தான் கதாநாயகிக்கு அம்மாவா போட்டிருக்கோமே... அவங்களையே துண்டு கட்டி ஒரு சீன்ல வச்சுட்டா போதுங்கண்ணே... நான் “ஹிம்மத்வாலா”ன்னு ஒரு பழைய ஸ்ரீதேவி படம் பார்த்தேன்... அதை அப்படியே உருவி இங்கே போட்டுடலாம்” என்ற துணையின் ஆலோசனையில் நெகிழ்ந்துபோனார் இயக்குநர்.
“தம்பி பெரிய ஹீரோ ஆனப்புறம் கட்டாயம் உனக்கு ஒரு வாய்ப்பு வாங்கி தர்றேண்டா” என்ற இயக்குநரின் பாராட்டில் 2 லார்ஜ் ஒரேயடியாக அடித்தது போல கிறங்கிப்போனது துணை.
அடுத்த துணை “அண்ணே! அந்த தாத்தாக்களை இழுக்கனும்னா...” என்று ராகமிழுக்க, இயக்குநர் “எலேய்! சும்மா இருடா. அதுக்காக அந்த ஆச்சிக்கு துண்டு எல்லாம் குடுக்க முடியாது” என்று அதட்டினார்.
“இல்லைங்கண்ணே! அந்த ஆச்சிக்கு செத்துப்போன புருஷன் போட்டோவிலே இருந்து மூடு கிளப்புற மாதிரி ஒரு சீன் தோணுச்சு... அதை தான் சொன்னேன்” என்றது தன்னையும் இயக்குநர் பாராட்ட மாட்டாரா என்று தவித்த அடுத்த துணை.
“தம்பிக்கு 4 ஃபைட்டு, 4 பாட்டு, கவர்ச்சிக்கு ஹீரோயினி, அவ அம்மா, ஹீரோவோட பாட்டி, வேலைக்காரி, ஆட்டோக்காரி, வீட்டு ஓனர் பொம்பளைன்னு அடுக்கியாச்சு.... படம் என் படம்னு தெரியனும்ங்குறதுக்காக நானே ஒரு தத்துவ பாட்டு போட்டுக்குட்டேன்... இருந்தாலும் ஒரு 5 நிமிஷம் கேப் இருக்கேடா...” என்று இயக்குநர் கவலைப்பட..
“அண்ணே! நம்ம தேனிசை தான் நல்லா குத்து பாட்டு போடுவாறே! அந்த பாட்டுல 3 குஜிலிங்களை போட்டு, நம்ம தம்பிய பாடவிட்டு, இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் தம்பி-ன்னு போட்டீங்கன்னா தம்பியோட திறமையை வெளிப்படுத்துன மாதிரியும் இருக்கும்ணே... பாடுற தெறமைன்னு சொன்னேங்கண்ணா” என்று தனது வருங்கால வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொள்ளும் முயற்சியில் சற்றும் தளராமல் இருந்ததது அந்த துணை.
“இரண்டரை மணி நேர படத்தில் 2:25 நிமிஷத்துக்கு மேட்டர் ரெடி பண்ணியாச்சு... நாளைக்கு படத்துல கதை இல்லையேன்னு எவனாவது சொன்னான்னா?” என்று இயக்குநர் கேட்க “அண்ணே... இவ்வளவு சதை இருக்கும்போது தமிழ்நாட்டுக்காரன் கதையையா தேட போறான்? நீங்க தூள் கிளப்புங்க அண்ணே” என்று துணைகள் கொடிபிடிக்க, அந்த இயக்குநர் தன் மகனை வைத்து படத்தை ஆரம்பித்தார். பையனுக்கு skin tights, நடிகைகளுக்கு டஜன் கணக்கில் Turkey towels என்று பெரிதாக செலவு இல்லாமல் படம் வளர்ந்தது.
அந்த பழம்பெரும் கவிஞர் ”கண்டவனையும் ஏறவிட்டா இன்ஜின் தேய்ஞ்சு ஆயில் ஒழுகிடும்” என்று ஆட்டோக்காரர்களுக்கே தெரியாத maintanence வித்தையை சொல்லிக்குடுக்கு, கதாநாயகன் தனக்கு பிடித்த ”சுக்கா ரொட்டி”, ”ஷில்பா ஷெட்டி” ஆகிய வார்த்தைகள் கட்டாயம் இருக்கவேண்டும் என்று அடம்பிடித்து போட்டு தன் குரலிலேயே பாடியும் முடித்தார்.
இவ்வளவு சதை இருக்கும்போது தமிழ் ரசிகர்கள் கைவிடுவார்களா? தியேட்டரில் கையடித்து கையடித்து... அதாவது கை தட்டி கை தட்டியே ஓய்ந்துபோய் அங்கேயே தங்கி அடுத்த ஷோவும் பார்த்து தியேட்டரை நிரப்பினார்கள். இயக்குநர் மனது, பாக்கெட், இத்யாதி இத்யாதி எல்லாம் ரொம்பி பொங்கி வழிந்தது. ஒரே நாளில் கதாநாயகன் “பெரிய ஹீரோ” ஆனார். முந்தின படத்தின் “வெற்றி”யும் அந்த ‘முன்னணி ஹீரோ’விடம் இருந்து பறிக்கப்பட்டு இப்போது இவருக்கே அளிக்கப்பட்டது. இந்த formula-வில் தம்பியை வைத்து இயக்குநர் இன்னும் சில படங்கள் இயக்க, வெளி இயக்குநர்களும் இந்த நடிகரை வைத்து படம் பண்ணும்போது இதே formula-வை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள்.
கதாநாயகன் ரேஞ்சு எங்கோ எகிறிப்போக... படத்தின் வெற்றிக்கு காரணமான “பீஸுகள்” எல்லாம் ”வேற ரகம்” என்று முத்திரை குத்தப்பட்டார்கள். தனது விசிலடிச்சான் குஞ்சுகள் தரும் பலத்தில் கதாநாயகனின் தந்தை இப்போது ”அடுத்த சி.எம் என் மகன் தான்” என்று கனவில் அறிக்கைகளும், அலும்புகலும் செய்துக்கொண்டிருக்க.... இதை அமைதியாக ஆமோதித்துக்கொண்டு இருக்கிறார் கதநாயகன். அவருக்கு கொஞ்சமேனும் நன்றி இருக்குமானால் தனது பூஜை அறையில் அந்த நடிகைகளுடையதை (எதை என்பதும் உங்கள் சாய்ஸ்) வைத்து தினமும் பூஜித்து வரவேண்டும். ஒருவேளை சொந்த கட்சி ஆரம்பிக்கும்போது அதையே கட்சி சின்னமாக வைப்பாரோ? காலம் தான் பதில் சொல்லும்.
கொஞ்ச நாளுக்கு முன்னாள் Youtube-ல் இந்த படத்தை முழுதாக பார்த்தேன். படத்தை பற்றி எழுதுவதை விட இது எப்படி conceive செய்யப்பட்டிருக்கும் என்ற discussion தான் எனக்கு சுவாரசியமாக பட்டது. ஒருவேளை நிஜத்திலும் இப்படியே பேசியிருக்கலாம்... இல்லாமலும் இருந்திருக்கலாம்.... ஆனால் Making of the move தான் எப்போதும் எனது favourite.