Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Click the image to read furtherநான் முன்பே சொன்னது போல கரு.பழனியப்பனின் படத்தை ஆர்வமாக எதிர்பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் "பிரிவோம் சந்திப்போம்" படத்துக்கு அடுத்து தானே கதாநாயகனாக நடித்து இயக்குகிறார் என்று கேள்விப்பட்ட போது "இவரும் அடுத்த சீமான் ஆகிவிடுவாரோ?" என்று தோன்றியது. ஆனால் கடந்த வாரம் "மந்திரப் புன்னகை" படத்தை பார்த்தபோது அவர் நடிகராகவேண்டிய அவசியம் புரிந்தது. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம், எனவே ஒரு தனிமனிதனின் வித்தியாசமான உலகத்தை எட்டிப்பார்க்கிறோம் என்கிற முன்னுரையோடு ஆரம்பிக்கையிலேயே நம்மை ஒரு வழக்கத்துக்கு மாறான பயணத்தை கொடுக்கப்போகிறார் என்று தயாராகிவிடுகிறோம்.

எப்போதுமே நிகழ்கால நியதிகளுக்கும் மாறாக "swim against the tide" என்ற கொள்கையில் இயங்கும் கரு.பழனியப்பன் இந்த படத்தில் பல "conventions"-களை தகர்த்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் கட்டிலில் உடலுறவுக்கு பின் உறங்கும் கணவன் மனைவி என்று நினைப்பு முடியும் முன்பே கதாநாயகன் அந்த பெண்ணுக்கு பணம் வைத்துவிட்டு போக "இது என்னடா கோக்கு மாக்கான ஆளா இருக்கானே?" என்று ஒரு அதிர்ச்சியோடேயே பார்வையாளர்களாகிறோம். இப்படி தான் கதாநாயகன் இருக்கவேண்டும் என்ற தமிழ் சினிமாவின் விதிக்கு நேர்மாறாக "குடிகாரன், ஸ்த்ரீலோலன் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவன்" என்ற கதாபாத்திர படைப்பில் தொடங்குகிறது கரு.பழனியப்பனின் பாட்டை. அடுத்து நமது பழனியப்பன் வேட்டு வைப்பது - காலம் காலமாக தமிழ் சினிமாவில் ஆராதிக்கப்பட்ட "தெய்வாம்சம்" அம்மா செண்டிமென்ட்டை திருப்பி போட்டிருப்பதில் பழனியப்பனின் தைரியம் தான் தெரிகிறது. அவளும் ஆசாபாசங்கள், காம இச்சைகள் கொண்ட சராசரி மனுஷி என்பதை திரையில் சொல்லும் தைரியம் மிக சில இயக்குனர்களுக்கு தான் உண்டு. "மந்திர புன்னகை"யின் பலம், பலவீனம் இரண்டுமே - நமது சமுதாயத்தில் வெளிப்படையாக பேச தயங்கும் விஷயத்தை தயக்கமில்லாமல் பேச முன்வந்திருப்பது தான். இயக்குனர் செல்வராகவானும் தான் "சமூகத்தில் நடப்பதை தான் படமெடுக்கிறேன்" என்று சால்ஜாப்பு சொன்னாலும், கரு. பழனியப்பனிடம் இருக்கும் நறுவீசு இல்லாமல் மாறாக செல்வராகவன் படங்களில் ஆபாசம் தலைதூக்கி இருப்பதே இந்த இருவருக்குமிடையே வித்தியாசம்.

Mandhira Punnagai"மந்திர புன்னகை"யில் கதை என்று பார்த்தால் கிட்டத்தட்ட நாம் பார்த்து பழகிப்போன "நடத்தை கெட்ட கதாநாயகனை கதாநாயகி திருத்தும் கதை" தான். இருப்பினும் படத்தை வித்தியாசப்படுத்துவது இதன் "Treatment" மற்றும் வசனங்கள். பொதுவாக கரு.பழனியப்பனின் கதாபாத்திரங்கள் எல்லாமே கொஞ்சம் புத்திசாலித்தனமாக தான் பேசுவார்கள். "மந்திர புன்னகை"யும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் இந்த புத்திசாலி வசனங்கள் சராசரி பார்வையாளரிடமிருந்து படத்தை கொஞ்சம் அன்னியப்படுத்துவதும் உண்மையே. விபச்சாரியுடன் படுக்கையில் அறிமுகமாகும் கதாநாயகன் என்றால், அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் "பீர் பாட்டிலை பல்லில் கடித்து திறக்கும்" கதாநாயகியின் (கிட்டத்தட்ட) அறிமுகம். "கஸ்டமார் என்னை பார்த்த பார்வையில் என் கற்பு ஒன்றும் அழிந்துபோய்விடவில்லை" என்று கிட்டத்தட்ட பாரதியின் புதுமை பெண்ணாக கதாநாயகி மீனாட்சி. மற்ற கரு. பழனியப்பனின் படங்கள் போல வலுவான கதாநாயகி பாத்திரம், அதை உணர்ந்ததாலோ என்னவோ மீனாட்சி நன்றாக பயன்படுத்தி கொண்டது போல ஒரு உணர்வு. தன் தோற்றம், நடவடிக்கையின் மூலம் கதாநாயகனுக்கு சலனம் உருவாக்கும் "seductress" வேடத்துக்கு மீனாட்சி கச்சிதம் என்றபோதும் அந்த டயலாக் டெலிவரி தான் படுத்துகிறது.

ஆனால் வருத்தம், கோபம், சந்தோஷம் என எல்லா சமயத்திலும் ஒரே மாதிரியான முகபாவம், அதே குரல் ஏற்றத்தாழ்வு என நடிகராக தடுமாறியிருக்கிறார் கரு. பழனியப்பன். எனினும் தனது மைனஸ்-களை பாத்திர படைப்பின் மூலம் மறைத்திருப்பது சாமார்த்தியம். அவரது அப்பாவாக வரும் இயக்குநர் நகுலன் பொன்னுசாமி கனக்கச்சிதம். படத்தை முதல் பாதியில் கலகலப்பூட்டியிருப்பதில் பெரும்பங்கு சந்தானத்தையே சேரும். வரவர படத்தை தனது தோள்களில் சுமக்க ஆரம்பித்துள்ளார் சந்தானம். வாழ்த்துக்கள்!!! கதிர் - நந்தினி காதலுக்கு ஊடே ஒருதலை பட்சமாக காதலிக்கும் விபச்சாரியின் (கலைஞர் டி.வி தொகுப்பாளினியாமே) காதல் நெகிழ்ச்சியென்றால், டீல் முடியாத ரிஷி பரிதாபத்தோடு சிரிப்பையும் சம்பாதித்துக்கொள்கிறார்.

முன்னமே சொன்னது போல வசனங்கள் தனியாக குறிப்பிடத்தகுந்தவை. மன்மத நாயுடு "எனது 50 வருட அனுபவம்" என்று பெருமிதம் கொள்ள, அதை "ஐம்பது வருட தேய்மானம்" என்று ஒரே வார்த்தையில் உடைக்கும் வார்த்தைஜாலம்... "நம்ம செருப்பு காணாம போனதுக்கப்புறம் தான் நாம மத்தவங்க காலை பாக்குறோம்".... இந்த வசனங்கள் Philosophy-க்கு என்றால் கோபத்துக்கு - மீட்டிங்கின் போது வரும் தொலைபேசி அழைப்புக்கு கரு. பழனியப்பன் அளிக்கும் பதில் செம காரம். சில சமயங்களில் எனக்கும் இவ்வளவு காரமாக பதிலளிக்கும் அளவுக்கு தோன்றியிருக்கிறது. காதலுக்கு மீனாட்சி அளிக்கும் காரணமும், அதற்கு உடனே கரு. பழனியப்பன் சொல்லும் பதிலும் அந்த கதிர் கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தை நறுக்கு தெறித்தாற்போல நிலைநிறுத்துகிறது. வசனகளுக்காகவே படத்தை இரண்டாவது முறை பார்த்தேன். வழக்கம்போல பார்க்க பார்க்க போதை போல நிதானமாக எனக்குள் ஆழமாக ஊன்றிக்கொண்டது "மந்திர புன்னகை".

Mandhira Punnagaiஇருப்பினும் படத்தின் மிகப்பெரிய பலவீனம் இதன் திரைக்கதை. முதல் பாதியில் இளம் தென்றலாக, அழகாக பயணிக்கும் கதை, பிற்பகுதியில் நந்தினியின் கொலைக்கு பிறகு புயலாக பயணிக்க வேண்டாமா? மாறாக சூம்பிப்போய் நொண்டியடிக்க ஆரம்பித்துவிடுகிறது. கதிரின் நடவடிக்கைகளுக்கு மூலக்காரணமான அந்த சம்பவம் ஏற்படுத்தும் தாக்கத்தை வீரியமிழக்கும் முன்பே படத்தை முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாறாக கதை அதற்கு பிறகு தான் ஜவ்வு மிட்டாயாக இழுபடுகிறது. கதை சுவாரசியமாக நகரவேண்டிய கட்டத்தில் வரும் (மிக) மெலடியான பாடல் இழுவை உணர்வையே தருகிறது. கிளைமேக்ஸ் காட்சியில் இரண்டு வரி வசனத்தில் கதிர் மனம் திருந்திவிடுவது நெகிழ்ச்சிக்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறது.

இரண்டாவது பலவீனம் துரதிர்ஷ்டவசமாக - வித்யாசாகர். கரு. பழனியப்பன் - வித்யாசாகர் கூட்டணி என்றால் தரமான இசை நிச்சயம் என்று முடிவு காட்டும் வேளையில் அதை பொய்க்கும் விதமாக சத்தில்லாத இசை. சுதா ரகுநாதனின் "என்ன குறையோ" பாடல் பார்த்திபன் கனவின் "ஆலங்குயில்" பாடலின் கால் தூசிக்கு கூட வரவில்லை. "சட்டச் சடசடவென" பாடல் இனிமை - கேட்கவும், பார்க்கவும். "தண்ணி போட வாப்பா..." பாடல் ஆரம்பித்தில் அருவெறுப்பாக தோன்றினாலும், கேட்க கேட்க பழகி நான் அடிக்கடி முணுமுணுக்கும் அளவுக்கு பிடித்துவிட்டது.

இம்முறை ஒளிப்பதிவில் பெரிய பரிசோதனை எல்லாம் வேண்டாம் என்று (பழசிராஜா புகழ்) ராம்நாத் ஷெட்டி இருந்தும் அடக்கி வாசித்திருக்கிறார். எனினும் நெரிசல் மிகுந்த சிங்கார சென்னையை ரொம்ப நாளைக்கப்புறம் திரையில் காட்டியிருப்பது வித்தியாசம். ராஜீவனின் காலை இயக்கம் அழகு - குறிப்பாக கரு. பழனியப்பனின் பிளாட்.

Mandhira Punnagaiஎன் கம்பெனி பிளாக்கில் ஒரு சக ஊழியர் எழுதியிருந்தார் "So இது நல்ல படமா ? கெட்ட படமா ? தெரிலையே மச்சி ஒரு டிக்கெட் சொல்லு …." நானும் அவரது கருத்தை வழிமொழிகிறேன். திரைக்கதையில் சற்றே சறுக்கியிருந்தாலும், சபையில் பொதுவாக பேச சங்கடப்படும் விஷயத்தை நாசூக்காக அழகாக, கதாபாத்திரங்கள் மீது அனுதாபம் அல்லாமல் ஒரு புரிதலோடு கூடிய அன்பு தோன்றுமாறு செய்திருப்பது தான் கரு. பழனியப்பனின் "Master Stroke". நம்மிடையே வாழும் கதிர்களையும், நந்தினிகளையும் நாம் உணர முடிந்தாலே போதும்... வாழ்க்கையின் அழகை அனைவரையும் ரசிக்க வைக்கமுடியும்.

கரு. பழனியப்பன், சீக்கிரம் அடுத்த படத்துக்கு போங்க... முடிந்தவரை திரைக்கு பின்னால் மட்டும் இருங்க. உங்களுடைய படங்களை நான் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

Related Articles