{mosimage}என்னால் தங்கர் பச்சானின் படங்களை பற்றி சிலாகித்து பேசமுடியும். தமிழ் சினிமாவில் பொதுவாக கிராமத்திய படங்கள் என்றாலே பொள்ளாச்சியையும், கவுண்டர்களை சுற்றியே இருக்கும். அந்த கலாச்சாரத்தை தாண்டி மிக இயல்பாக தென்னாற்காடு பகுதி கிராமங்களை திரையில் கொண்டுவருபவர் தங்கர்பச்சான். மேலும் அவர் இலக்கியவாதியாக இருப்பதனால் தங்கரின் படங்கள் நம் மனதோடு ஒரு சில துளியேனும் உரசிவிட்டு போகும். என்னை கடந்த வருடங்களில் விசும்பி அழ வைத்த வெகு சில படங்களில் அழகியும் ஒன்று. 'சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி' மலையாளத்தில் வந்த 'சிந்தாவிஷ்டயாய சியாமளா' என்ற படத்தின் remake என்ற போதிலும், தங்கர்பச்சான் அதன் திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்து, அதன் எளிமை கெடாமல் திரைக்கு கொண்டுவந்திருந்தார். எனவே 'பள்ளிக்கூடம்' படத்தை சற்று தைரியமாக பார்க்கலாம் என்று தோன்றியது. 'அழகி' அளவுக்கு நெஞ்சை தொடவில்லை என்றாலும், பல இடங்களில் நம் கண்ணை துடைத்துக்கொள்ள வைத்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
{mosimage}தம்மை படிக்க வைத்த பள்ளிக்கு சில (முன்னாள்) மாணவர்கள் கைம்மாறு செய்வதே கதை. கோகிலா, வெற்றி, முத்து, குமாரவேலு என நான்கு பேரும் ஒன்றாக படித்தவர்கள். கோகிலா (சினேகா) அந்த பள்ளியின் ஸ்தாபகரின் பேத்தி. காலப்போக்கில் வருமானம் குறைந்த நிலையில் பள்ளிக்கு அடிப்படை வசதி கூட செய்து தரமுடியாத நிலையில், கோகிலாவின் சித்தப்பா பள்ளியை மூடிவிடுகிறார். வெற்றியும், முத்துவும் வெளியூர் சென்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். உள்ளூரில் இருந்துகொண்டு பள்ளியை காப்பாற்ற முடியாத கோகிலா, குமாரவேல் (தங்கர் பச்சான்) மூலம் வெற்றி (நரேன்) & முத்து (இயக்குனர் சீமான்) ஆகியோரின் உதவியுடன் முன்னாள் மாணவர்களை திரட்டும் alumni meeting-க்கு ஏற்பாடு செய்கிறார். இன்று உலகமெங்கும் இருக்கும் முன்னாள் மாணவர்கள் அந்த விழாவில் ஒன்று கூடி, இனிமையான நாட்களை நினைவுகூர்ந்து, தங்கள் பள்ளிக்கு புத்துயிர் கொடுக்கிறார்கள். வெற்றிக்கும், கோகிலாவுக்கும் இடையே இருந்த காதலும், விடலை பருவத்தில் நர்ஸ் ஜென்ஸி மீதிருந்த மயக்கமும் கிளை கதைகளாக வருகிறது.
நான் திரைக்கதை யுக்தி, ஒளிப்பதிவு என்று technical-ஆக எழுத விரும்பவில்லை. காரணம் இந்த படத்தை பார்த்தபோது பல முறை nostalgic ஆகி, என் பள்ளிப்பருவத்தை நினைவு கூர்ந்தேன். 'மீண்டும் பள்ளிக்கு போகலாம்... நம்மை நாம் அங்கே தேடலாம்..' என்பது மிக அழகான வரிகள் மட்டுமல்ல, அற்புதமான வரிகளும் கூட. பல விமரிசனங்களில் இந்த படத்தை 'ஆட்டோகிராஃப்'-இன் உருவல் என்று எழுதி தங்கள் மேதாவித்தனத்தை காட்டியிருந்தார்கள். Sify - தன் பங்குக்கு 'பள்ளிக்கூடம்' கேனஸ் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்படாதது சரியே என்று சந்தோஷப்பட்டுக்கொண்டது. மேலும் படம் மிக melodramatic என்று அந்த விமரிசகர் எழுதியிருந்தார்.
'பள்ளிக்கூடம்' பல இடங்களில் சற்று loud - ஆக இருப்பது உண்மையே. ஆனால் கதாபாத்திரங்கள் எல்லாம் குக்கிராமத்தை சேர்ந்தவர்கள். நகரத்து படித்தவர்கள் சோகம் வரும்போது சொட்டு கண்ணீர் வடிப்பார்கள், அல்லது ஏதேனும் paxidep போன்ற மாத்திரைகள் சாப்பிட்டு தங்கள் உணர்ச்சிகளை கட்டுபடுத்துவார்கள். ஆனால் கிராமத்து மனிதர்கள் ஒப்பாரி வைத்து, சற்று அதிகமாகவே உணர்ச்சிவசப்படுவார்கள். இந்த படத்தின் குமாரவேல் ஒரு பக்கா நாட்டுப்புறத்தான். Infact இந்த படத்தின் உயிர் மூச்சே தங்கர்பச்சான் ஏற்றுள்ள குமாருடைய பாத்திரம் தான். குமாரவேல் தற்போது கலெக்டராக உள்ள தன் நண்பனை ஒர் பிரிவுக்கு பிறகு சந்திக்கும் காட்சியில் என்னை அறியாமல் ஆனந்த கண்ணீர். நான் என் நண்பனை எதிர்பாராமல் 5-6 வருடங்களுக்கு பிறகு பார்த்தபோது கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தேன். ஒருவேளை small town sensibilities ஒத்துபோயிருக்கிறதோ என்னவோ?
{mosimage}அதே போல ரொம்ப நேரம் பாரத்தை போட்டு அழுத்தியது ஷ்ரேயா ரெட்டி நடித்த நர்ஸ் ஜான்ஸி கதாபாத்திரம். இந்த episode-இல் பல காட்சிகள் பாலு மகேந்திராவின் 'அழியாத கோலங்களை' நினைவுபடுத்தினாலும், ஷ்ரேயா ரெட்டி நடித்திருந்த விதத்தில் ஒரு கண்ணியம் தெரிந்தது. தனியாக இருக்கும் ஜான்ஸியிடம் ஊர் பெரிசு தலையில் முக்காடு போட்டுகொண்டு இரவில் தவறாக நடக்க முயற்ச்சித்தவுடன் 'இதுக்கு பயந்துகிட்டு தான் நான் ஜன்னல் கூட சாத்திகிட்டு காத்தே இல்லாம தூங்குவேன், அப்படியும் இவனுங்க விடமாட்டேனுங்கிறாங்க' என்று கதறும் காட்சி ரொம்ப நேரம் எதிரொலித்தது. ஆனால் அநியாயமாக ஊரைவிட்டு விரட்டப்படும் காட்சி இன்றும் 'பண்ணை'ங்க சிலர் 'ஊர் மானம் / கட்டுப்பாடு' என்ற போர்வையில் பண்ணும் அழிச்சாட்டியத்தை நனைவூட்டுகிறது.
தங்கர் பச்சானின் படங்களில் (கமலஹாசனை போல) self indulgence / narcissm என்று சொல்லக்கூடிய தனக்கு (தனக்கு மட்டுமே) நிறைய முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் நிறைய இருக்கும், பள்ளிக்கூடமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சினேகா உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டால், சீரியஸ் நடிப்பென்ற தியரியை படித்திருக்கிறார் போலும். கோகிலா டீச்சராக பாந்தமாக இருந்தும், பாவம் அம்மணிக்கு நடிக்க நாலு காட்சிகூட கிடைக்கவில்லை. தங்கரை நம்பி ஏமாந்தார் போல. நரேனுக்கும் கொஞ்சம் போல தான் வாய்ப்பு கிடைக்கிறது. அவர் ஊருக்கு வரமாட்டேன் என்று முரண்டுபிடிப்பதும், அதற்கான காரணமும் தமிழ் சினிமாவுக்கு அரதபழசு என்பதால் 'இவ்ளோ தானா?' என்று தோன்றுகிறது. கடைசியில் எப்படி மனம் மாறினார் என்பது தங்கருக்கே வெளிச்சம். இருந்தாலும் அதுவும் எதிர்பார்த்த முடிவே. இயக்குனர் சீமான் இயல்பாக நடித்திருக்கிறார். மிகவும் சீரழிந்த நிலையில் இருக்கும் அந்த பள்ளி மிகவும் அருமையாக 'நடித்திருக்கிறது'. செட்டிங் என்று தெரியாத மிக அற்புதமான செட்.
{mosimage}படம் நடுவில் கொஞ்சம் போர் அடிக்கிறது, குறிப்பாக நண்பர்களின் அலவலாவல்கள்.. 'அது தான் எல்லாம் திரும்ப பாத்துக்கிட்டீங்களே, வேலையை பாருங்கப்பு'ன்னு சொல்ல தோன்றியது. ஆனால் கடைசியில் அந்த மீட்டிங் மிக சுவாரசியம். முன்னாள் மாணவர்கள் (பெரிசுங்க) தங்கள் கன்றுக்குட்டி காதலை நினைவுபடுத்திக்கொள்ளுவதும், அந்த பெண்ணும் தன் குடும்பத்தை அறிமுகபடுத்துவதும் ஏதோ இனம்புரியாத சந்தோஷத்தை தருகிறது. ஜான்ஸி திரும்ப வருவது நிம்மதியை தந்திருந்தாளும், அவர் கதாபாத்திரத்தை ஃப்ளாஷ்பேக்குடன் முடித்திருந்தால் ஒருவேளை impact அதிகமாக இருந்திருக்குமோ?
குத்தாட்டம், தமிழ் திரைப்படங்களில் வரும் கவர்ச்சி பற்றி ஒரு புறம் பேசிக்கொண்டே நைச்சியமாக தனது படத்திலேயே ரெக்கார்ட் டான்ஸ் வைத்து காசு பார்க்கும் தங்கர்பச்சான், இந்த படத்திலும் 'ரோஸ்மேரி... நீ ஒரு சூஸ்பெரி' என்று டப்பாங்குத்து வைத்திருக்கிறார். ஷூட்டிங் நடக்கிறது என்று சமாள்ித்தாலும், இளம் வயது வெற்றி, கோகிலாவை வைத்து ஆபாச பட ரேஞ்சுக்கு எடுத்திருக்கும் டூயட் வீட்டோடு பார்க்கும்போது நெளியவைத்தது. ரிமோட்ட்க்கும் வேலை வைத்தது. அதுபோல வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட 'மீண்டும் பள்ளிக்கு போகலாம்' பாடல் நம்மை உருகவைத்தாலும், உள்ளூரில் எடுக்கப்பட்ட '9 மணிக்கு பள்ளிக்கு போவோம்' பாடல் நம்மை நம் பள்ளிக்கூட நாட்களுக்கு கடத்திக்கொண்டு போகிறது.
சமீபத்திய திரைக்கு வந்த படங்களில், இது நிச்சயமாக நல்ல படம். மனிதர் கேமிராவுக்கு முன்பு வராமல், பின்னால் நின்று 'நெறியாள்கை'யுடன் நிறுத்திக்கொண்டாலே நல்ல படங்கள் தரமுடியும் என்று தோன்றுகிறது. என்ன தான் நாம் முன்னோக்கி போய்க்கொண்டிருந்தாலும், இது போன்ற படைப்புக்கள் நம்மை சில நிமிடங்கள் கடந்த காலத்தை அசைபோட வைப்பது ஒரு தனி சுகம் தான்.
தங்கர்! நிறைய எழுதுங்க! பேசறதோட நிக்காம நல்ல படங்களா கொடுங்க. நடிக்க தான் ஆயிரம் பேர் இருக்காங்களே, எதுக்கு நமக்கு சரியா வராத விஷயத்தை கட்டிகிட்டு மாரடிக்கனும்? உங்க '9 ரூபாய் நோட்டு' நல்லபடியா இருக்க என் வாழ்த்துக்கள்.