ரொம்ப நாளாச்சு.. ஒரு சினிமா பார்த்ததும் அந்த கதாநாயகி என் மனசிலே பச்சுன்னு ஒட்டி... அதனாலேயே இந்த ஜொள்ளு பதிவுகள் குறைவா இருக்க காரணம். சமீபத்தில் (4-5 வாரம் முன்பு) தான் கடந்த வருடத்தில் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற பிரேமம் படத்தை பார்த்தேன். எனக்கு படத்துல நிவின் பாலியோ, இல்லை மடோனா செபாஸ்ட்டினோ யாருமே நினைப்பில் இல்லை. மலர் டீச்சராக வந்து என் மனதை கொய்து காயப்படுத்திவிட்ட சாய் பல்லவி மட்டுமே நினைவில் இருக்கிறார். ஐய்யோ... கடவுளே! இந்த மாதிரி பெண்களை ஏன் மிக குறைவாக படைத்து எங்களை கொடுமைப்படுத்துகிறாய் என்று முறையிட தோன்றியது.
கோவை அருகே கோத்தகிரியை சேர்த்த செந்தாமரை கண்ணன், ராதா தம்பதியினரின் மகளான சாய் பல்லவி படித்ததெல்லாம் கோவை அவிலா கான்வெண்ட்டில். தீவிரமான சாய்பாபா பக்தையான அவர் இப்போது ஜியார்ஜியாவில் கார்டியாலஜி மருத்துவம் படிக்கிறாராம். இவரால் முறிந்த மனங்களுக்கு இவரது படிப்பு ஒட்டுப்போடும்.. இவரிடம் சரிசெய்ய வரும் எத்தனை இதயங்கள் முறியப்போகிறதோ? இந்த பேரும் புகழும் திடீரென்று கதவை தட்டியதால் இப்போது படிப்பா, நடிப்பா என்று தடுமாறிக்கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.
"மலரே.." பாடலை ஏற்கனவே பார்த்திருக்கிறேன், சாய் பல்லவி விஜய் டி.வியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் ஆடியதையும் பார்த்திருக்கிறேன். மேலும் ஈ டிவியின் Dhee Ultimate Dance Show (D3)ல் வசீகரா பாட்டுக்கு ஆடியதையும் ரசித்திருக்கிறேன். அப்போது எல்லாம் சாதாரண பெண்ணாக தோன்றிய இந்த கோவை பெண், பிரேமம் படம் பார்த்ததில் இருந்து அசாதாரணமாக தெரிகிறார். பெண்கள் மறைக்க விரும்பும் முகப்பருக்களை பற்றி கவலைபடாமல் இயல்பாக தோன்றியது மட்டுமல்லாமல் இப்போது கிட்டத்தட்ட Style statement-ஆகவே மாற்றிவிட்டார் இந்த பெண். அதே போல அவரது வித்தியாசமான குரலும் ஒரு trend setter தான். சற்றும் நளினம் இல்லாத husky voice இவரது personality-ஐ அழகாக complete செய்கிறது. சின்ன வயதில் அவர் வீட்டுக்கு பேப்பர்கார அண்ணாவோ, பால்கார அண்ணாவோ ஃபோன் செய்யும்போது சாய் பல்லவி தொலைபேசியை எடுத்து பேசினால் "தம்பி! வீட்டிலே பெரியவங்க இருந்தா கூப்பிடுப்பா" என்று சொல்வார்களாம். "ரொம்ப நாளாக தான் பையன் என்று நம்பிக்கொண்டிருந்தேன்" என்று சொல்லி சிரிக்கிறார் சாய் பல்லவி. திரையில் முதல் முதலில் "மலர்.. என் பேரை சொன்னேன்" என்று சொல்லும்போதே நான் flat ஆகிவிட்டேன். அப்புறமென்ன.. அதற்கப்புறம் அவர் பேசுவது எல்லாமே சங்கீதம் தான்.
யாரோ Facebook-ல் பிரேமம் படத்தின் தெலுங்கு பதிப்பான 'மஜ்னு'வில் நடிக்கும் ஸ்ருதிஹாசனை கேலி செய்து போட்டிருந்த பதிவில் "ஏன் சாய் பல்லவிக்கு இவ்வளவு அன்பு, ஸ்ருதி மீது இவ்வளவு வெறுப்பு? அது ஒரு சாதாரண கதாபாத்திரம். அதில் யார் நடித்திருந்தாலும் எடுபட்டிருக்கும்" என்று போட்டிருந்தார். இந்த கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லமுடியாது. எனினும் இந்த படத்தை தெலுங்கில் செய்யும் ஸ்ருதிக்கு மலரை மீறி பேர் எடுப்பது மிகப்பெரிய சவால் தான்.
ஒருவேளை இந்த பேரும் புகழுமே பல்லவி எதிர்பார்க்காதது தான். காரணம் - படம் வெளிவரும் வரை அந்த படத்தில் இளம் வயது காதலியாக நடித்த அனுபமா பரமேஸ்வரனுக்கு தான் கேரளத்தில் பரபரப்பு இருந்தது. ஆனால் படம் வந்ததும் அப்படியே அதிர்ஷ்டக்காற்று பல்லவி பக்கம் அடித்து மலையாளிகளின் மனதில் ஜம்மென்று ஏறி உட்கார்ந்துக்கொண்டார். பருக்கள் நிறைந்த முகம், கட்டைக்குரல், உயரம் கம்மி என்று எல்லா எதிர்மறை அம்சங்களையும் தனக்கு சாதகமான அம்சங்களாக மாற்றி வெற்றி பெற்றிருப்பது சராசரி பெண்களுக்கு நம்பிக்கை தரும் அம்சம்.
தாம் தூம் படத்தில் துணை நடிகையாக கங்கனா ரணாவத்தின் பின்பு உட்கார்ந்திருந்த சாய் பல்லவி இன்று தட்ஸ்தமிழில் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சாய் பல்லவி தமிழில் அறிமுகம் ஆக இருப்பதாக போட்டிருந்தது. வாழ்த்துக்கள்! மணிரத்னத்தின் படம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அதில் கதாநாயகிகளுக்கு நடிக்க வாய்ப்பிருக்கும். (கடல் மட்டும் விதிவிலக்கு). அதனால் சாய் பல்லவிக்கு நிச்சயம் நடிக்க நல்ல கதாபாத்திரம் கிடைக்கும் என்று நம்புவோமாக.