இன்று வெற்றிகரமாக 100+ வது முறையாக 'பிரிவோம் சந்திப்போம்' படத்தை பார்த்தேன். DVD-யில் தான். 2 முறை தான் தியேட்டரில் பார்த்தேன். ஏனோ இந்த படம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதில் வரும் சாலாவின் (சினேகா) தனிமையை நானும் அனுபவித்து இருக்கிறேன். அதனாலோ என்னவோ எத்தனை முறை பார்த்தாலும் இந்த படம் அலுப்பதே இல்லை. இப்போதெல்லாம் என் அறையில் default-ஆக இந்த படம் தான் ஓடுகிறது. சில சமயங்களில் ஒளிச்சித்திரம் போல அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும், நான் என் வேலையை பார்த்துக்கொண்டு இருப்பேன். சினேகாவுக்கு அடுத்தபடியாக மிக அருமையாக நடித்திருப்பது டாக்டராக வரும் ஜெயராம். அந்த மலையாள subtlety தமிழ் குணச்சித்திர நடிப்புக்கு கொஞ்சம் புதுசு. மலையாளத்திலும் பெரிதாக படம் இல்லாத ஜெயராமுக்கு தமிழில் குணச்சித்திர நடிகராக அடுத்த படம் அஜித்தின் 'ஏகன்'. ஷாருக்கானின் 'மெயின் ஹூம் நா' படத்தின் ரீமேக் தான் இந்த 'ஏகன்'.
ஹிந்தி 'மெயின் ஹூம் நா'வில் சுஷ்மிதா சென் நடித்த பாத்திரத்தில் தமிழில் செய்பவர் நயன்தாரா. நயனுக்கு முன்பு ஷ்ரேயா, கத்ரீனா கைஃப் என பலர் அணுகப்பட்டு கடைசியாக நயன்தாராவுக்கு வந்திருக்கும் இந்த பாத்திரம் நயனை தவிர வேறு யாருக்கும் பொருந்துமா என்பது சந்தேகமே. காரணம் கதைப்படி கதாநாயகி ஒரு ஆசிரியை, புடவைகளில் கலக்கவேண்டும். நயன்தாராவை தவிர மற்றவர்களுக்கு புடவை ஒத்து வராது. நயனுக்கு மிக பொருத்தமான உடை புடவை தான் என்பது என் அபிப்பிராயம். தெற்கில் புடவையில் அம்சமாக நயன்தாராவை தவிர வேறு யாரேனும் இருப்பார்கள் என்றால் அது 'சிவப்பதிகாரம்' மம்தா மோகன் தாஸ். அம்மணி அதுக்கப்புறம் தமிழில் ஆள் காணவே இல்லை.
மம்தா மோகன்தாஸ் & சிவப்பதிகாரம்... 'கரு. பழனியப்பன்' படங்களிலேயே நான் (முழுசாக) பார்க்காத படம் அது மட்டும் தான். படம் துவங்கியதிலிருந்து தினமும் தினசரிகளில் மனதை தொடும் விதமாக விளம்பரங்களை தந்து எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டார் பழனியப்பன். படம் வந்ததும் 'ரமணா'வின் மலிவு விலை பதிப்பாக இருந்தது பெரும் ஏமாற்றம். ஒருவேளை விஷாலை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்ததும் 'ஆக்ஷன்' படம் போல பண்ணலாம் என்று பழனியப்பன் டிராக் மாறிவிட்டார் போல. ஆனால் படத்தைவிட டி.வி-யில் அது குறித்த கரு. பழனியப்பனின் பேட்டிகளை நான் மிகவும் ரசித்தேன். "கதாநாயகன் கறுப்பாக இருந்தால் செய்தி (மெசேஜ்) கீழ்தட்டு ரசிகர்களுக்கு போய் சேரும். சிவப்பான கதாநாயகனாக இருந்தால் 'சார் யாருக்கோ சொல்றார் போல'ன்னு போயிடுவான், இந்த படத்தில் கதாநாயகிக்கு வேலையே இல்லை. அதனாலே பொம்மை மாதிரி சிவப்பா அழகான பொண்ணு வேணும்னு மம்தா மோகன்தாஸை தேர்ந்தெடுத்தேன்". இவ்வளவு யதார்த்தமாக எந்த இயக்குனரும் பேசியதாக எனக்கு ஞாபகம் இல்லை.
சிலருக்கு எவ்வளவு திறமை, வித்தியாசமான அப்ரோச் இருந்தாலும் அதிர்ஷ்டம் கைவிட்டு விடும். என் மனம் கவர்ந்த இயக்குனரான கரு. பழனியப்பனுக்கு இது நூறு சதவிகிதம் பொருந்தும். 'பார்த்திபன் கனவு' என்ற அற்புதமான படத்தை கொடுத்த பிறகு அவர் ஸ்ரீகாந்த் - சோனியா அகர்வால் ஆகியோரை வைத்து தினசரிகளின் பிண்ணனியில் இயக்கிய 'சதுரங்கம்' இன்னும் வெளிவரவேயில்லை. அதற்கப்புறம் எடுத்த 'சிவப்பதிகார'த்தில் மனிதர் சறுக்கினாலும், 'பிரிவோம் சந்திப்போ'மில் விட்டதை பிடித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். விஜய் டி.வி.யில் மனிதர் தன் திருமணம் காதல் திருமணம் என்பதால் சொந்தங்களுடன் வாழும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அதன் ஏக்கமே 'பிரிவோம் சந்திப்போ'மில் பிரதிபலித்தது என்று சொன்னபோது எனக்கு பழனியப்பனை இன்னும் அதிகமாக பிடித்துப் போனது.
பரபரப்பாக எல்லோரும் படம் எடுக்கும்போது நாம் ஏன் நிதானமாக படம் எடுக்கக் கூடாது என்று நினைத்து தான் 'பிரிவோம் சந்திப்போ'மை மெதுவாக நகர்த்தியிருக்கிறேன் என்று சொன்னபோது அவர் குருவான பார்த்திபனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறார் என்று தோன்றியது. பிரிவோம் சந்திப்போமில் கேமிரா கோணங்கள், காட்சியமைப்புக்கள் என்று மனிதர் வித்தியாசத்தில் பின்னியெடுத்து இருக்கிறார். பல வித்தியாசமான கோணங்கள், காட்சியமைப்புக்கள் கதை சொல்லப்பட்ட விதத்தை தொந்தரவு செய்யாமல் அடக்கமாக பின்னுக்கு தள்ளி நின்றிருப்பதை காணலாம். பலமுறை பார்க்கும்போது ஒவ்வொரு முறையும் புதிதாக தோன்றுவதற்கு இவையே காரணம். கரு. பழனியப்பனின் அடுத்த படம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை, அவரே முடிவு செய்யவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் தரமான ஒரு குடும்ப படம் எடுத்து (என்னை) நம்மை திருப்திபடுத்துவார் என்ற நம்பிக்கையில் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
என்றாவது ஒரு நாள் நிச்சயம் கரு. பழனியப்பனை சந்திக்கவேண்டும். சொல்லப்போனால் இதுவரை திரையுலக பிரமுகர்களில் நான் சந்திக்கவேண்டும் என்று விரும்பியது இருவர் மட்டுமே, ஒன்று மலையாள இயக்குனர் கமல், மற்றவர் கரு. பழனியப்பன். கைகூடுகிறதா என்பதை காலம் தான் சொல்லும்.
நான் மிகவும் ரசித்த கரு. பழனியப்பனின் பேட்டிகளில் ஒன்று இங்கே... (சொடுக்கவும்)