Guest Articles
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த 2-3 வருடங்களாக எனது ப்ளாக் எழுதும் பழக்கம் குறைந்ததற்கு முகநூல் (அதுதாங்க.. Facebook) மட்டும் காரணம் இல்லை, என்ன எழுதுவது என்ற கற்பனை வறட்சியும் தான். முன்பு ரொம்ப யோசிக்காமல் பார்த்த சினிமா,படித்த புத்தகங்கள் என தொடர்ந்து எழுதிக்கொண்டு இருந்தேன். ஆனால் எப்போது சினிமா விமர்சனங்களை எழுதுவதை நிறுத்தி personal blogs கூடுதலாக எழுதவேண்டும் என்று முடிவுசெய்தேனோ அப்போதே கற்பனை வறட்சியில் எனது வலைப்பூ இளைத்துவிட்டது. நேற்று அனன்யா அக்காவின் Facebook பதிவை பார்த்தபோது “இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா?” என்று ஆச்சரியப்பட்டுப்போனேன். Beauty lies in the eyes of the beholder என்பதற்கு சரியான உதாரணம் இந்த பதிவு. அவரது Facebook நண்பர்கள் (தினமணி வாசகர்களும்)மட்டுமே படித்த இந்த பதிவை இங்கே copy paste செய்கிறேன்.

கல்யாண மண்டபத்தின் பக்கத்தில் வீடு இருந்தால் என்னென்ன சாதகங்கள் / பாதகங்கள்?

* ”ஓ இன்னிக்கி முஹூர்த்த நாள் போல்ருக்கே” என்று பஞ்சாங்கம் டாட் காம் பார்க்காமலேயே தெரிஞ்சுக்கலாம்.

* ஒரு டைல்ஸையோ செங்கலையோ அல்லது வீட்டில் வீணாய்க் கிடக்கும் ஒரு tablet/I pad ஐயோ கிஃப்டு ராப் பண்ணிண்டு லேஸா ஐலனர் மட்டும் போட்டுண்டு சுமாரான சில்க் காட்டன் புடவையை உடுத்திண்டு கார்த்தால சிரிச்ச முகத்துடன் போனா, சுடச்சுட டிஃபன் காஃபி எல்லாம் மொக்கிட்டு வந்துடலாம். யார் கல்யாணமா இருந்தா நமக்கென்ன? ரிஸப்ஷன் கூட்டத்தில் ஒருத்தரும் கவனிக்க மாட்டா என்ற தைரியம் இருந்தால் ராத்திரி டின்னர் பண்ற வேலை மிச்சம். குலாப் ஜாமூனுடன் பதர்பேணியும் கிடைச்ச த்ருப்தி இருக்கும்.

*அர்த்த ராத்திரி 11.20க்கு அபஸ்வரமாக காற்றில் சம்பந்தமேயில்லாமல் "நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே .......சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே" என்று பாட்டு கேட்கலாம்! இப்படி கேட்கறதால நீங்க சூப்பர் சிங்கர் ஜட்ஜாக ப்ரமோட் பண்ணப்படும் அளவுக்கு சங்கீதத்தில் தேர்ச்சி அடைய வாய்ப்புக்கள் நிறைய இருக்கு

* காசி யாத்திரைக்கும் மாப்பிள்ளை மண்டபத்தின் வெளியே வரும்போது இப்போ கரண்ட் ட்ரெண்ட் என்ன? என்ன மாதிரி புடவை ஃபேஷனில் இருக்கு? பிளவுஸ் எப்படி? சில்க் காட்டனா கல்யாணி காட்டனா காஞ்சிவரமா போச்சம்பள்ளியா? நகை நட்டு எப்படி? பழைய புடவையையே பாலீஷ் போட்டுருக்காளா இல்லே ரோல் ப்ரஸ் பண்ணியிருக்காளா போன்ற துல்லியமான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு நம்மை நாமே தட்டிக்கொடுத்துக் கொள்ளலாம்.

* சாயந்திரம் ஆனா பேண்டு வாத்திய கோஷ்டிக்காரா ரொம்ப உயிரை வாங்குவா. பேம் பேம்ன்னு அஞ்சு மீட்டர் அகலமான பிரஷ்ஷால் கோடு போடுவது மாதிரியான ஒலி அலைகளை எழுப்பி, ட்ரம்பெட்டின் (இ)ஓசையில் சத்தியமா எந்தப்பாட்டுன்னு கண்டே பிடிக்க முடியாது.

*அதுல பாருங்கோ மொபைல் பேண்டுன்னா தப்பிச்சேள். அக்கம் பக்கம் பதினெட்டுப் பட்டியும் டார்ச்சர் பண்ணறதுக்கு கிளம்பிப் போயிடுவா. ஸ்டாட்டிக் பேண்டுன்னா நம்ம தலைமாட்டுல வாசிச்சே கொடுமைப் படுத்தி பிராணனை வாங்கிடுவா.

*பெரிய இடத்துக் கல்யாணம்ன்னா ஒன் லாக் வாலா வெடியும் விடுவா.. ஒன் க்ரோர்வாலா வெடியும் விடுவா.. ஒரு பயல் கேள்வி கேட்க முடியாது! ”என்ன தொல்லையிது?” ன்னு தலையில அடிச்சுக்கத்தான் முடியும்.

* சில சமயம் பப்ளிக் ந்யூஸென்ஸ் ஓவராக இருந்தால் விஜய்யோ அஜித்தோ சூர்யாவோ நமிதாவோ அஞ்சலியோ ரிஸப்ஷனில் வந்து ரெண்டு நிமிடம் உட்காருவார்கள் என்பதை அறிக! அப்போது பாடிக்கொண்டிருக்கும் லைட் மீஜிக் சிங்கரின் முகம் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி போகும் என்பதையும் அறிக.(பின்னே? பூராப்பயலும் ஈரோ ஈரோயினியைத்தானே கவனிப்பாங்க?)

* சில மிகவும் ஹை ப்ரொஃபைல் கல்யாணங்களில் பேண்டு வாத்தியம் , நாதஸ்வரக் கச்சேரி, குத்துடான்ஸு மீஜிக் ட்ரூப்பு மூணு கோஷ்டியையும் கூட்டி வைச்சுண்டு வாசிக்கக் சொல்லுவாளா, வாசிக்கறவாளும் கன்பீஸ் ஆகி, கேக்கறவாளும் கன்பீஸ் ஆகி மண்டையை பிய்ச்சுண்டு ஆணியே புடுங்க வாண்டாம்ன்னு கல்யாணத்துலேந்து துண்டைக்காணோம் துணியைக்காணொம்ன்னு ஓட்டம் பிடிப்பா.

தினமணி வலைதளத்தில் படிக்க “http://blog.dinamani.com/?p=6385”

அனன்யாவின் வலைப்பூ: - http://ananyathinks.blogspot.com

Related Articles